வீடு பேறு – மா. அரங்கநாதன்
சுமார் முப்பதாண்டுகளுக்கு மேலாக தட்டுத் தடுமாறி எழுதிக்கொண்டு வருகையில் திடீரென ஒரு நாள் ஒரு எண்ணம் உதித்தது. தனித்தனியாக வெவ்வேறு தலைப்புகளில் வெவ்வேறு வடிவங்களாக எழுதினாலும் ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளதாகத்தான் எல்லாமே உள்ளதே. இன்னும் சில நாட்கள் கழித்து அது தொடர்பு இல்லை, ஒன்றையேதான் இவ்வளவு ஆண்டுகளாக எழுதி வருகிறேன். என்றும் தெரிந்தது. இந்த ஒளி கிடைத்தவுடன் இலக்கியத்திற்கும் இலக்கிய வாதிகளுக்கும் உள்ள உறவுக்கு புதுப் பரிணாமங்கள் புலப்படலாயின.
மா. அரங்கநாதனின் கதைகளையும் அவர் இந்தத் தொகுப்பில் கொடுத்திருக்கும் வரிசை கிரமத்தில் ஒவ்வொன்றாகப் படித்த போது ஓர் உண்மையான இலக்கியவாதியின் படைப்புகளுக்கு ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதுடன் அந்த இலக்கியவாதியின் அனைத்துப் படைப்புகளுக்கும் ஒரே ஆதாரவித்துதான் இருக்க முடியும் என்பதும் உறுதி பட்டது. மேலும் ஒரு படைப்பாளியின் படைப்புகளுக்கு ஒன்றுக்கு அதிகமான ஆதார அடிப்படைகள் இருக்குமாயின் அப்படைப்புகளை எந்த அளவுக்கு அந்தரங்கப் பூர்வமானவையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற சந்தேகமும் எழுந்தது.
அரங்கநாதனின் படைப்புகள் இருபது கொண்ட இந்தத் தொகுப்பை வெவ்வேறு ரசமான கதைகள் என்று கருதுவதற்கு விஷேச பிரயத்தனம் தேவைப்படுவதில்லை. நிறைய பாத்திரங்கள் பலதரப்பட்ட மனிதர்கள் வயது தொழில் மனப்போக்கு ஆகியவற்றில் வாழ்க்கையில் காணும் கூறுகள் பலவற்றை இவர்கள் கொண்டவர்கள். கதைகள் அநாயசமாக நவீனச் சிறுகதை உருவ அமைதி கொண்டவை. சம்பவங்கள் நம் நாட்டினர் எவருமே அடையாளம் கண்டு கொள்ளக் கூடியவை. பொருமையும் கூர்மையும் கொண்ட நீடித்த கவனம் தரும் தகவல்கள் எல்லாக் கதைகளின் எல்லா சம்பவங்களுக்கும் நிஜத்தன்மை தருகின்றன. இக்கதையின் பாத்திரங்கள், சம்பவங்கள் ஆசிரியரின் நேரடி அனுபவத்திலிருந்து வருகின்றன; அல்லது நுனுக்கமான கற்பனையில் சுயஅனுபவமாகிக் கொள்ளும் ஆற்றலிலிருந்து வெளிப்படுகின்றன. தனித்தனியாகப் பார்க்கும் போது இவையெல்லாம் சிறந்த சிறுகதைகளின் எடுத்துக் காட்டுகள்.
ஆனால் இந்த நூலை கதைகள் கொண்டதொரு தொகுப்பு என்று கூறுவது முற்றிலும் சரியாகுமா? இவை ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பு கொண்டது. மட்டுமல்லாமல் இவை ஒரே மனிதனின் கதையாகவும் உள்ளன. ஒரு பிரிவு அல்லது வகையென்று கூற வேண்டுமானால் இதை நாவல் என்று அழைப்பதே பொருத்தம். இந்த மனிதனின் வெவ்வேறு பிராயங்கள், வெவ்வேறு நிலைகளை இந்த நூல் கூறுகிறது. இதில் காலம் அல்லது கடிகாரம் அல்லது காலண்டர் பண்புகளுக்கு அப்பாற்பட்டு இருக்கிறது. முத்துக்கருப்பன் என்ற இந்த மனிதன் ஒரு பகுதியில் சிறுவனாய் இருந்தால் இன்னொன்றில் பேரன் பேத்திகளைக் கவனித்துக் கொண்டு வீடே கதியாக இருப்பவனாக காண்கிறான். ஒரு பகுதியில் திருமண நாட்டங்களைக் கடந்த பிரம்மச்சாரியானால் இன்னொன்றில் அவன் சம்சாரி. ஒரு பகுதியில் அவன் வீட்டுக்காரருக்கு அஞ்ச வேண்டிய குடித்தனக்காரனானால் இன்னொன்றில் அவனே வீட்டுக்காரன். வெளித்தோற்றத்தினால் இவ்வளவு கூறுகள் கொண்டவனாக இருந்தாலும் அவன் ஒருவனே. முத்துக்கருப்பன் என்பது கூட இறுதியில் கழண்டு விடுகிறது. ஏனெனில் அவனே கதாநாயகனாகவும் அவனே உபபாத்திரமாகவும் இருக்கிறான். ஒரு மனிதனின் வரலாறு - பல கண்ணாடித்துண்டுகளில் பல கோணங்களில் பிரதிபலிக்கும் ஒரு மனிதனின் வரலாறு- என்பதே நிலைத்து நிற்கிறது. இந்த மனிதன் மிக நுன்னிய உணர்வுகள் கொண்டவன். சுயப்பிரக்ஞை மிகுந்தவன், எதிராளியை சமமாக நினைக்கும் பண்புடையவன். ஒரு சாதாரண மனிதனின் சர்வ சாதாரண விறுப்பு வெறுப்புகளை கொண்டிருந்தாலும் அதே நேரத்தில் அவற்றைக் கடந்து இயங்கும் பக்குவமும் படைத்தவன். அன்றாட வாழ்க்கையின் சிறு சிறு திருப்பங்களும் கூட அவை நேரும் நேரத்தில் இவனுக்கு மீள முடியாததாகத் தோன்றும் ஆனால் மிக இயல்பாக அவற்றைத் தீர்த்து அடுத்த நாளை எதிர்பார்ப்பவன். ஜீவனத்திற்காக நிர்பந்த உத்யோகம் மேற்கொண்ட இவன் என்று உத்தியோக ஓய்வு வரும் என்று ஏங்கிக் கொண்டிருப்பவன், ஒரு மனிதனின் கூறுகளையே இப்படி வெவ்வேறு பிராயங்களிலும் நிலைகளிலும் கூறும் புனைக்கதைப் பாணிக்கு எனக்கு தமிழில் முன் மாதிரி கூற முடியவில்லை. ஆங்கில மொழியில் வில்லியம் சரோயன் என்பவர் அராம் என்று கதாநாயகனுக்குப் பெயர் வைத்து அனேகமாக எல்லாமே தன்மை ஒருமையில் இருப்பதாக பல கதைகள் எழுதியிருக்கிறார். வில்லியம் சரோயன் பல நூல்கள் எழுதியிருக்கிறார். இந்த நூலில் உள்ள கதைகள் போல சரோயனின் நூல்களும் யதார்த்த வசதிக்காகவே தனித்தனியாக வெளியிடப்பட்டதாகத் தோன்றும். அவை அனைத்துமே சேர்த்து ஒரு பெரிய நூல்.
இதெல்லாம் எழுத்தை வெறும் இலக்கியமாகப் பார்த்து கூறப்பட்டவை. அரங்கநாதன் படைப்புகள் வெறும் இலக்கியமாக நின்று விடுவதில்லை. உண்மையில் அவை நிலையான அமைதி தேடும் மனித மனத்தின் சிறு அலைகள். இந்த அமைதி அல்லது முக்தி அனைத்து ஜீவன்களுக்கும் விதிக்கப் பட்டது. ஆனால் இதை பிரக்ஞை பூர்வமாக உணர இயலாதிருத்தலே அஞ்ஞானம். அஞ்ஞானத்தின் விளிம்பில் இருந்து கொண்டு இறுதித் தாண்டலுக்குத் தயாராகும் மனிதனே அரங்கநாதனின் முத்துக்கருப்பன். முக்தித் தத்துவம் புனைக்கதையில் உயர்ந்த நிலையில் பிரதிபலிக்கப்படுவது மிகவும் கடினம். புனைக்கதையே அஞ்ஞானத்தை உள்ளடக்கியது ஆனால் அரங்கநாதனின் இந்த நூல் ஒரு அசாத்தியத்தைச் சாத்தியமாக்கிக் காட்டுகிறது. இந்த முக்தி வேட்கை இந்திய மண்ணுக்கே உரியது. மேலும் கூற வேண்டுமானால் இந்த நூலில் அது தமிழ் மண்ணுக்கே உரியதாகவும் வெளிப்படுகிறது.
பல ஆயிரம் ஆண்டு கலாச்சாரமும் தத்துவ விசாரமும் தன்னுள் அடக்கிய ஒருவரால்தான் இந்தத் தெளிந்த முக்தி வேட்கை நிலையை தற்கால வாழ்க்கையின் அன்றாட நிகழ்ச்சிகளில் காண முடியும், காண வைக்க முடியும்.
இந்த நூலில் சிறிது நீண்ட பகுதியாக உள்ள கதையே இந்த நூலின் பெயராகவும் அமைந்திருப்பது இதைத்தான் சூசகமாகக் காட்டுகிறது. ‘வீடு பேறு’ குறிப்பது இவ்வுலக வாழ்க்கையின் வீடு மட்டுமல்ல. அது போலவே பேறும், இங்கே தன் சதையும் ரத்தமுமாகப் பிறந்து, வளர்ந்து இறந்து போகிறவர்கள் மட்டுமல்ல முக்தித் தத்துவம் அநாதியானது.
இந்த 1987ம் ஆண்டில் மொழி நடையில் புனைக்கதை வடிவில் பூரணத்துவம் விளங்கும் வகையில் படைக்கப் பட்டிருக்கும் இந்த நூலில் எனக்கு பங்குபெற நேரிட்டது என்னுடைய நல் வாய்ப்பு.
அசோகமித்திரன்
சென்னை
7.11.1987
முன்னுரைகள்
{load position article2}