Girl in a jacket

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

பற்றியதல்லாமல் நினைவு சம்பந்தப்பட்டமட்டில் வேறு எதுவும் முக்கியமல்ல.

பதினாறு வயதிலேயே க.நா.க.வுடன் - அதாவது அவரது பொய்த்தேவு நாவலுடன் -

பரிச்சயம் ஏற்பட்டு விட்டபடியால் - அவரைச் சந்தித்திருக்க வேண்டும். ஆனால் நான் சென்னை வந்து பல ஆண்டுகள் ஆனபோதிலும் கூட நடக்கவில்லை. சாத்தியமாகாத ஒன்று அல்ல அது.

வேலையில் இருந்து ஓய்வு பெற ஒன்றிரண்டு ஆண்டுகளே இருந்தன. க.நா.சு. டெல்லியில் இருந்து சென்னை வந்துவிட்டார். கிட்டதட்ட எல்லா பத்திரிகைகளிலும் எழுதிக்கொண்டிருந்தார். அவருடைய பழைய நூல்களின் மறு பதிப்புகளும் வர ஆரம்பித்தன. “செத்துப்போக நான் கடைசி காலத்தில் சென்னை வந்திருக்கிறேன்” என்று ஒரு தடவை எழுதியிருந்தார். படிக்க வருத்தமாக இருந்தது. எழுத்தாளர் சு.சமுத்திரம் கூட அதைப்பற்றி வேதனையுடன் குறிப்பிட்டார். அப்படி எல்லாம் நடக்கவில்லை. டெல்லிக்கு திரும்பவும் சென்ற பின்னர்தான் அது நிகழ்ந்தது. எனது கதைகளும் கணையாழியில் நிறைய வெளியாகிக் கொண்டிருந்தன. அப்போது தோன்றியதுதான் “முன்றில்” பற்றிய எண்ணம்.

அவரிடம் சொன்னபோது அவர் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. சித்திர தேவ பாரதியின் இலக்கிய வட்ட பத்திரிகையின் சிறப்பாசிரியராகவும் அவர் இருந்தார். பார்க்கலாம் என்பதுபோல்தான் அவர் பதில் இருந்தது.

ஆனால் அவரிடம் கட்டுரை வாங்கி முன்றில் முதல் இதழில் வெளியிட்டு. அதை அவரிடம் கொடுத்தபோது “சொன்னபடி கொண்டு வந்து விட்டீர் அல்லவா” என்று வியப்பும் மகிழ்ச்சியுமாக சொல்லி அந்த இதழை புரட்டிக் கொண்டேயிருந்தார். முன்றில் இலக்கிய கூட்டங்களும் நடந்தன. ஆத்மநாம் மட்டும் வராமல் பண்ணிவிட்டார்.

முன்றிலின் மூன்றாவது இதழில் க.நா.சு. காலமானது பற்றி பட்டுரை எழுத வேண்டியதாயிற்று. அடுத்து க.நா.சு. சிறப்பிதழ் ஒன்றும் கொண்டு வரப்பட்டது.

க.நா.சு. தம்பதியினருக்கு என் மகன் மகாதேவனைப் பிடிக்கும். அவனிடமே அதிகம் பேசுவார்கள். டெல்லி சென்றபோது அவனுக்குக் கடிதம் எழுதுவதைத் தவிர்க்கவில்லை. ‘கலை நுட்பங்கள்’ என்ற அவரது கட்டுரைத் தொகுப்பு முன்றில் வெளியீடாக வந்தது. அதற்கு முன்னுரை எழுதிய க.நா.சு. புத்தகம் வெளிவந்த போது இல்லை. அந்த முன்னுரையில் “இந்த நூல் மகாதேவனுக்கு – என் அன்புடன்” என்றும் எழுதியிருந்தார். அந்தக் ‘கலை நுட்பங்கள்’ என்ற புத்தகம் பலரது மதிப்புரைகளைப் பெற்றது.

க.நா.சு. என்னுடன் அதிகமாகப் பேசியது பக்தி இலக்கியம் பற்றித்தான். காரைக்கால் அம்மையார், திருமூலர், மணிவாசகர் பற்றியும் திருவள்ளுவர் பற்றியும் மகத்தான மனிதர்கள் என்று கூறி மகிழ்வார். தென்னாடுடைய சிவன் என்று மணிவாசகர் சொன்னது பற்றிய விசயத்தில் நான் ‘தென்’ என்ற சொல் குறித்து சொன்னதைக் கேட்டுக் கொண்டார். தென்னாடு என்று மணிவாசகர் சொல்லும்போது, வடநாடு செல்ல முயெவில்லையே என்ற வருத்தம் தொனிக்கிறது என்று ஒரு கட்டுரையில் எழுதி இருந்தார். தென்னாடு என்பது திசையைக் குறிக்கவில்லை என்று சொன்னபோது, மொழி சம்பந்தப்பட்ட மட்டில் தமிழில் சில அதிசயங்கள் உண்டு என்று கூறி அது பற்றி எழுதவும் சொன்னார். தினமணியில் பின்னர் நான் எழுதினேன்.

இலக்கிய வட்டத்தில் என்னுடைய கதைகள் வெளிவந்த போது க.நா.சு. பலரிடம் குறிப்பாக ‘மயிலாப்பூர்’ என்ற கதையைப் பற்றி சொல்லியிருக்கிறார். அந்தக் கதை ‘வீடு பேறு’ சிறுகதை தொகுப்பிலும் இடம் பெற்றது.

‘வீடு பேறு’ என்ற கதையில் ஸான்பிரான்ஸிஸ்கோ நகரிலிருந்து சென்னை திருவல்லிக்கேணிக்கு நாற்பது வருடங்களுக்கு முன்னர் குடியிருந்த வீட்டில் தன் தாயார் காலமான அந்த மாடி அறையைப் பார்த்து போக வருகிறார். வந்தவர் அந்த வீட்டுக்கார பெரியவரிடம் நாள் பூராவும் பேசிக் கொண்டிருந்துவிட்டு, அந்த அறையைப் பார்க்காமலேயே போகிறார் – அந்த வீட்டுக்காரர் ஞாபகப்படுத்தியும் கூட.

இப்படிச் சொல்லப்பட்ட காட்சியைக் கொண்ட அந்த கதைப் பற்றி க.நா.சு.வும் பின்னர் நகுலனும் கேட்ட கேள்வி ஒன்றுதான். அந்த அறையை ஏன் பார்க்காமல் போனார்? இதுதான் அவர்கள் இருவரும் கேட்ட கேள்வி. கேட்டுவிட்டு இதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் சொன்னார்கள். வியப்பான சங்கதி என்னவென்றால் இருவர் கேட்டதும் வெவ்வேறு காலகட்டங்களில் – ஒருவர் கேட்டதை மற்றவர் அறியார்.

சாகித்திய அகாதமி நடத்திய மொழிபெயர்ப்பு பணியில் என்னையும் அழைத்திருந்தார்கள். அலுவலகத்தில் அனுமதி வாங்கி கலந்து கொண்டேன். அந்த கட்டத்தில் ‘முன்றில்’ வர தாமதமாகியிருந்தது. அசோகமித்திரனைச் சிறப்பாசிரியராக இருக்கும்படி கேட்டுக் கொண்டோம். மொழிப்பெயர்ப்பு பணியில் தேவகி குருநாத். திலகவதி ஆகியோர் கலந்து கொண்டது ஞாபகம் இருக்கிறது. வல்லிக்கண்ணன், அசோகமித்திரன் ஆகியோர் மேற்பார்வையிட்டனர். ஒரு வாரம் மாக்ஸ்முல்லர் பவனில் நடந்தது. கடைசி நாளில் கவிதை பற்றி ஒரு கூட்டம். பவர் கவிதை படித்தனர். என்னை நடத்தச் சொன்னார் அசோகமித்திரன். நன்றாகத்தான் இருந்தது.

அசோகமித்திரனைச் சிறப்பாசிரியராக கொண்டுவந்து இதழ்களும் முன்றிலுக்கு நல்ல பெயரைத் தந்தது. க.நா.சுவின் கையெழுத்து நோட்டு புத்தகங்களை அவர் துணைவியார் தந்து உதவினர். அதுவரை பிரசுரமாகாத கவிதைகள், கட்டுரைகள் அதில் இருந்தன. அவற்றை பயன்படுத்திக் கொண்டோம். விருட்சம், கவிதாசரண் போன்ற பத்திரிகைகளுக்கும் அந்த கையெழுத்து பிரதிகளைக் கொடுத்தோம். அந்த பத்திரிகைகளிலும் சில படைப்புகள் வெளியாயின.

தொண்ணூறுகளில் நவம்பர் மாதம் அலுவலக பணியிலிருந்து நான் ஓய்வு பெற்றேன். கிட்டதட்ட நாற்பதாண்டு காலம் ஒரே அலுவலகத்தில் அரசாங்கப் பணியாக இருந்த போதிலும் எனக்கு பிடித்திருந்தது.

ஓய்வு பெற்ற நாளில் – பெற்றுக்கொண்டே இருக்கும்போது – அலுவலகத்திற்கு எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் வந்தார். தொலைபேசியில் பேசியது தவிர நேரில் சந்தித்த்தில்லை. எனக்கு அவரது கதைகள் மிகவும் பிடிக்கும். அதை அவரும் அறிவார். அப்போது சமூகத் துறை சார்ந்த ஒரு வேலையில் இருந்தார். ஒரு புத்தக நிலையத்திற்கும் சென்று வந்தார் – மனோதத்துவம் படித்தவர்.

அன்று முதல் முதலாக என்னை பார்த்தவர் அரண்டு போய் கவலையுடன் என் பக்கமாக வந்தார். வேறு ஒன்றும் இல்லை ஓய்வு பெறும் நாளன்று அலுவலகத்தில் மாலை ஒன்று போட்டு. நாற்காலியில் என்னை உட்கார வைத்து இருந்தபடியால் என்னமோ ஏதோ என்று எண்ணி பதறிவிட்டார். பின்னர் நான் அதெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறி அவரை அழைத்துக் கொண்டு வெளியே மாம்பலம் வரை நடந்து சென்றோம். அங்கே ரெங்கநாதன் தெருவில் ஒரு கட்ட்டத்தில் ‘முன்றில்’ புத்தக நிலையத்திற்கான அறை ஒன்று பார்த்திருந்தோம். அன்றே ‘முன்றில்’ தொடங்கப் பெற்றது என்று சொல்லிவிடலாம்.

அவர் மறைவு என்னை மிகவும் பாதித்தது. “இப்போதெல்லாம் எதை எழுதினாலும் ஹியுமர் ஆகவே முடிகிறது,” என்று ஒரு தடவை கூறினார். “அதனால் என்ன – அதுவும் இலக்கியம் தானே” என்றும் பேசிக் கொண்டோம். மரணத்தை அவர் எதிர்பார்த்து கொண்டே இருந்தாரோ என்று இப்போது தோன்றுகிறது.

அமரந்தா, லதா ராமகிருஷ்ணன், வெளி ரங்கராசன் ஆகியோரின் முயற்சியால் கோபிகிருஷ்ணன் குடும்பத்திற்கு பின்னர் நிதி உதவி கிடைத்தது மனத்திற்கு கொஞ்சம் சமாதானத்தைத் தருகிறது.

முன்றில் நடத்திய மூன்றுநாள் கருத்தரங்கு முக்கியமானது. இதில் நண்பர் ராம்ஜி சுவாமிநாதனின் பங்கு மிக முக்கியம். அநேகமாக எல்லா மாவட்ட எழுத்தாளர்களும் கலந்து கொண்டனர். நாகார்ஜுனன், ஏ.எஸ். பன்னீர் செல்வம், சாரு நிவேதிதா, கவிஞர் பழமலய், கோணாங்கி, எஸ். ராமகிருஷ்ணன் போன்றோரும் மூத்த எழுத்தாளர்கள் லா.ச. ராமாமிருதம், வல்லிக் கண்ணன், கோவை ஞானி போன்றோரும் உற்சாகத்துடன் பங்கேற்றனர். சில விவாதங்களும் நன்கு நடந்தேறின. மூன்று நாள்கள் நடந்த கூட்டங்களில் கவிதை, நாவல், சிறுகதை, நாடகம், சினிமா போன்றவையாக இருந்தன என்று சொல்ல வேண்டும். அவை ஒரு புத்தகமாகவும் வெளிவந்துள்ளது.

‘முன்றில்’ தொடங்கப்பெற்ற வேளை ‘வீடுபேறு’ தவிர எனது மற்றொரு சிறுகதை தொகுதியான ‘ஞானகூத்து’ மற்றும் நாவல் பறளியாற்று மாந்தர் இரண்டும் வெளிவந்தன. சிறுகதைத் தொகுதி, கோவை லில்லி தேவசிகாமணி அறக்கட்டளை சார்பில் ஒரு பரிசும், நாவல் தமிழக அரசின் பரிசும் பெற்றன. அந்தக் காலகட்டத்தில் நான் ஓய்வு பெற்றிருந்தேன். கோவை சென்றபோது அங்கே வல்லிக்கண்ணன், சிதம்பர ரகுநாதன், கோவை ஞானி. பாவண்ணன் எனது ‘சித்தி’ கதையைப் அப்படியே கூறி என்னைப் பெருமைப்படுத்தினார். பல ஆண்டுகள் கழித்து புதுவையில் பண்பாட்டுத்துறை நடத்திய பற்றிய கருத்தரங்கு அது. அந்தக் கதை அவருக்கு மிகவும் பிடித்தமானது போலும். ஆங்கிலத்தில் மேறப்டி கதை ‘ரன்’ என்ற தலைப்பில் ராம்ஜி சாமிநாதனால் மொழி பெயர்க்கப்பட்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் ஞாயிறு மலரில் வந்தது.

‘வீடு பேறு’ சிறுகதைத் தொகுதி வெளிவந்த சமயம் அசோகமித்திரன் கணையாழி பத்திரிகையின் சிறப்பாசிரியராக இருந்தார். அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, அதுபற்றி தலையங்கம் போல் ஒரு கட்டுரையும் அதில் எழுதியிருந்தார். அதன் தலைப்பு ‘வீடு பேறு.’

() () ()

இரண்டாவது இதழில் ஞானக்கூத்தனின் கவிதை (தீவட்டிச் சிறுவர்கள்) அசோகமித்திரன் கட்டுரை (எது முக்கியம்) எனது கதை (மீதி) வெளியாயிற்று. தவிர பலருடைய கவிதைகளும் அசோகமித்திரனின் இருவர் நாவல், க.நா.சு.வின் திருவள்ளுவரும் அவர்தம் திருக்குறளும் என்ற ஆங்கில நூல் ஆகியவை பற்றிய கட்டுரைகளும் வெளியாயிற்று. இந்த இதழ் பற்றி திரு. வல்லிக்கண்ணன் தினமணியில் விரிவாக எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. திரு. தி.க.சி. இதழ் பற்றி ஒரு நீண்ட விமர்சனக் கடிதமும் எழுதி இருந்தார். இந்த இதழில் ஓர் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

“முன்றில் அன்பார்களே! தாங்கள் படித்த நல்ல புத்தகங்கள் பற்றி எழுதியனுப்பலாம். அதோடு தமிழில் படித்த சிறுகதையோ – நாவலோ – நாடகமோ எதுவாயினும் சரி – அது எதிலிருந்து திருடப்பட்டது என்றும் கூறலாம். சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதியனுப்பினால் ‘வாசகர் பார்வையில்’ இடம் பெறும். தமிழில் படைப்பிலக்கியத்திற்கு இது மிகவும் தேவை என்று நம்புகிறோம்.”

ஆனால் வாசகரிடமிருந்து அவ்வளவாக குறிப்புகள் வரவில்லை.

மூன்றாவது – நாலாவது இதழ்களுக்கிடையே ‘கலை நுட்பங்கள்’ என்ற க.நா.சு-வின் நூல், முன்றில் வெளியீடாக வந்தது. அப்போது அவர் டெல்லியில் இருந்தார். படுத்த படுக்கைதான். புத்தகத்தின் முகப்பட்டையை மட்டுமே பார்த்தாராம். அந்த நூலின் முன்னுரைதான் அவர் எழுதிய கடைசி படைப்பாக இருந்தது. மிகுந்த சிறப்பாக இருந்ததையும் சொல்ல வேண்டும்.

“டெல்லியில் குளிர் அதிகமாக இருக்றிது. ஆனால் ரசிக்கும்படியாக உள்ளது.” என்று கடிதம் எழுதி இருந்தார். ஓர் இயக்கமாக இருந்த போதிலும் கூட, எந்தப் புகழுக்காகவும் நிற்கவில்லை, என்பதை நம்புவது கஷ்டம் கவலை, பணத்தாசை இவைகளெல்லாம் இல்லாமலும் இருக்க முடியும் என்பதை நம்பித்தான் ஆக வேண்டும். அதற்கு காரணம் விருப்பு வெறுப்பற்ற மனப்பக்குவமாக இருக்க்க்கூடும். தன்னைப்போல் ஒருவன் மட்டுமே உலகில் இருக்க முடியும் – எனவே மற்றவனைப் போலும் ஒருவன் தான் இருக்க முடியும் என்ற பரந்த நோக்கமாகவிருக்கும். நெருங்கிய நண்பருக்கும் தனக்குமுள்ள தூரம்தான் விரோதிக்கும் தனக்குமுள்ள தூரம் என்பதை பல அவர்தம் பேச்சுகள் காட்டியிருக்கின்றன. மாறுபட்ட கருத்த கொண்ட மார்க்சீய நண்பர்மீது எத்தனை மதிப்பு – நெருங்கிப் பழக முடிந்த சிலரின் இலக்கிய சக்திமீது தான் எத்தனை நடுநிலை தவறாத துல்லியமான கணக்கு, என்று வியந்திருக்கிறோம். தமிழிலே எழுதுவதை விட ஆனந்தம் வேறில்லை என்றார். குறுந்தொகைக் கவிஞன் இன்றைய எழுத்தாளனை விட ஒருவகையில் சாமர்த்தியசாலி என்றார். இலக்கியம் பரிபூரமானது – எந்த சித்தாந்தங்களும் கொள்கைகளும் அதை அடிமை கொண்டுவிட முடியாது என்ற வரையறையை சொல்கிற வித்த்தில் தமிழில் முதல் முறையாக சொன்னார்.

அதிக மகிழ்ச்சியோ – கவலையோ – வியப்போ – எந்தச் சூழ்நிலையிலும் மாற்றமடைந்தவராக அவர் இல்லை.

க.நா.சு.ஓர் இயக்கமாக இருந்து போய்விட்டார். முன்றிலுக்கு அவர் அளித்த வாய்ப்புகள் அதிகம். சம காலம் என்று எடுத்துக்கொண்டால், படைப்புலகில் ஒரு கணியன் பூங்குன்றனாக இருந்தார் என்று சொல்லலாம். கவிதை இருக்கும் இடத்தில் வறுமையில்லை – இல்லவே இல்லை, என்ற க.நா.சு.வின் வாசகமும் ஞாபகத்திற்கு வருகிறது.

க.நா.சு. கடவுளைப் பற்றி பேசினால் நகைச்சுவையோடிருக்கும். அதிகமாக பேசியதில்லை. கிட்டத்தட்ட கடவுளிடம் அந்தக் ‘கந்தசாமி பிள்ளை’ பேசியது போலிருக்கும். ஒரு தடவை தெருவில் கோவில் வாகனம் ஒன்று ஊர்வலம் வருவதை சன்னல் வழிபார்த்து, “இங்கே நம்ம பெரியார் இத்தனை கூறியும் எல்லாம் இருந்துகொண்டுதான் இருக்கு – இல்லையா?” என்றார்.

தற்காலிக படைப்பாளிகளில் அசோகமித்திரன், நகுலன், சா. கந்தசாமி, பிரமிள், னகூத்தன், நீல பத்மநாபன், பூமணி ஆகியோரின் எழுத்து பற்றி நிறைய பேசியும் எழுதியும் இருக்கிறார். கடைசியாக குறிப்பிட்டு பேசியது தமிழவன் நாவல் பற்றி. வணிகப் பத்திரிகைகளும் சில பக்கங்கள் இலக்கியத் தேடலுக்காக ஒதுக்கினால் நல்லது என்பார் – எழுதியும் இருக்கிறார். நாவல், சிறுகதை என்பதெல்லாம் அவருடைய அபிமான விஷயங்களாக இருந்தபோதிலும், முக்கியமான உலக தத்துவங்கள் அவருடைய எழுத்துகளில் பரவலாக வெளிப்பட்டதை அறிய முடியும். எந்த கூண்டிலும் அவர் இல்லை எனுறு சொல்லலாம்.

கடைசி ஆண்டுகளில் வைதீக எதிர்ப்பைப் பல கோணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். சங்க இலக்கியமும் வைதீக எதிர்ப்பால் தோன்றியதுதான் என்பது ஒன்று. திருவள்ளுவரும் அவரது திருக்குறளும் என்ற ஆங்கில நூலில் குறளின் வைதீக எதிர்ப்பு பற்றி விரிவான குறிப்புகள் உள்ளன. சங்க இலக்கியங்கள் பற்றி அவரது கருத்துகள் நிறைய வெளியாகவில்லையே ஒழிய கையெழுத்து பிரதிகளாக வேண்டியவை இருக்கின்றன. இன்று மிகவும் கஷ்டத்துடன் கையாளப்படுகிற பல இலக்கிய உத்திகளை குறுந்தொகைக் கவிஞன் மிக எளிதாக எடுத்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறான் என்று சொல்லுவார். நாள்தோறும் சில பக்கங்கள் எழுதிக் கொண்டு வந்திருக்கிறார். அவை எல்லாம் வெளிவந்த்தாக சொல்ல முடியாது. புதுமைப்பித்தன் போலவே சிவம் – சைவம் என்பதில் சில சமயம் ஆர்வம் இருந்திருக்கிறது. கடவுள் நம்பிக்கை – நம்பிக்கையில்லாமை என்பது பற்றியெல்லாம் கவலை இல்லாமலேயே இருந்திருக்கிறார். இன்றைய எழுத்தாளர் சிலரைப் பற்றி கவிதைகளும் எழுதி இருக்கிறார். சிலவற்றை முன்றில் வெளியிட்டது. எல்லாம் பிரசுரமாகவில்லை. நகுலன் பற்றிய கவிதை அவற்றில் மிகவும் நன்றாக இருந்தது.

க.நா.சு.போய்விட்டார். ‘முன்றில் இதழ் தொடர்ந்து வந்தது – ஐந்தாவது இதழ் க.நா.சு. நினைவு மலராக.

நினைவு மலரில் காசியபன், நீல பத்மநாபன், கோபி கிருஷ்ணன், தஞ்சை பிரகாஷ் மற்றும் நகுலன், கோவை ஞானி ஆகியோரும் எழுதி இருந்தனர். அதுவரை வெளிவராத க.நா.சு.வின் நினைவுகள் பகுதி வந்தது. புதுமைப்பித்தனையும், பி.எஸ். ராமையாவையும் மணிக்கொடி அலுவலகத்தில் சந்தித்தது பற்றி குறிப்பிட்டு அந்த கட்டுரையின் கடைசியில்,

“இப்படியாக நானும் அன்று தேறாத கேஸாக மணிக்கொடி கோஷ்டியில் சேர்ந்து கொண்டேன். உள்ளத்தில் உள்ள வெளியே தெரியாத தழும்புகள், தேறாத கேஸ், பணமில்லாத இடைவிடாத இலக்கிய சேவை என்கிற விஷயங்கள் எல்லாம் தொடருகின்றன. மகராஜர்கள் ராமையாவும், சொ.வி.யும் போய்விட்டார்கள். நான் alas! – இருக்கிறேன். சில சமயம் சொ.வி. நல்ல அதிர்ஷ்டகார்ர், சீக்கிரம் போய்விட்டார் என்று எனக்கு தோன்றுவது உண்டு.” என்ற வரிகள் மனத்தை தொட்டன. இந்த நினைவுகள் பகுதி தொடர்ந்து வெளிவந்தது. குரு பெயர்ச்சியில் என்ற க.நா.சு.வின் கவிதையில் சோதிட சாத்திரத்தை எப்படி எதிர் கொண்டிருக்கிறார் என்பதை அறிய வேடிக்கையாக இருந்தது. தேவகி – குருநாத்தின் ஒரு கட்டுரையும் தமிழவனின் சிறுகதையும் அதில் இடம் பெற்றன.

நகுலனின் ‘கடைத் தெருவில் ஒரு கடவுள்’ என்ற கவிதைத் தொடரும், அம்பையின் சிறுகதை தொகுப்பு பற்றி லதா ராமகிருஷ்ணனின் கட்டுரையும் ஆறாவது இதழில் வந்தன. க.நா.சுவின் கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தாலும் அவை தொகுக்கப்படவில்லை. புத்தகமாக இப்போது வெளிவந்துள்ளதா என்றும் தெரியவில்லை.

ஆதிமூலத்தின் மிகச் சிறந்த ஓர் ஓவியம் முன்றிலில் ஏழாவது இதழ் அட்டையில் வந்தது. இந்த இதழில் The Last Temptation of Christ என்ற Nikos Kazantzakis-யின் நாவல் பற்றி பிரமிளின் ‘யேசுவின் வேதனை’ என்ற கட்டுரை குறிப்பிடத்தகுந்த ஒன்று. இந்த கட்டுரை குறித்து அசோகமித்திரனும் அடுத்த இதழில் குறிப்பிட்டு எழுதியிருந்தார். கோபிகிருஷ்ணனின் ஒரு சிறுகதை, பிரமிளின் பிரசன்னம் சிறுகதை தொகுப்பு குறித்து ஒரு கட்டுரை, ஆகியவற்றோடு நீல பத்மநாபனின் ஒரு படைப்பு பற்றி ஆத்திரமடைந்த ஒருவன் அவரது கை முறியும் அளவிற்கு வன்முறையாக நடந்து கொண்டது பற்றிய தலையங்கமும் வெளியாயிற்று.

எட்டாவது இதழிலும் பிரமிள் கட்டுரை ஒன்று ‘பிரிவினை’ என்ற தலைப்பில் வெளிவந்தது. அதன் கடைசி வரிகள் கீழ்கண்டவாறு இருந்தன.

“எப்படிப் பார்த்தாலும் மௌனியின் கூற்று முடிவில் அவரது தமிழ் மொழித்து வேஷத்தைத் தவிர வேறு எதையும் வெளிப்படுத்தவில்லை. அவரால் தொடர்ந்து எழுத முடியாமல் போனதுக்கு உண்மையான காரணம் இந்த துவேஷம்தான்.”

முன்றில் ஒன்பதாவது இதழில் இருந்து அசோகமித்திரன் அவர்கள் சிறப்பாசிரியர் ஆனார். கோவை ஞானி, கவிஞர் பழமலய், கோபி கிருஷ்ணன், சா.கந்தசாமி, பா.வெங்கடேசன், வல்லிக்கண்ணன், ராம்ஜி ஸ்வாமிநாதன் ஆகியோரின் படைப்புக்களுடன் ஆதிமூலத்தின் அரூப ஓவியங்கள் பற்றி இந்திரன் எழுதியிருந்தார்.

கீரம்பூர் முத்துக்கிருஷ்ணன் ஆதிமூலம் என்ற ஆதி என்ற அன்பர்களால் அழைக்கப்பட்ட, இந்திய நாட்டின் எந்த உயர்தர கலைஞனுக்கும் சில சமயம் மேலான ஓவியர்கள் தமிழ்நாட்டில் உண்டு என்று நிரூபித்த – ஆதிமூலம் என்ற உயரிய கலைஞனும் மறைந்துவிட்டார். என்னை பாதித்த பலவற்றில் இது ஒன்று. அவர் மறைவதற்கு ஓராண்டு முன்பு முன்றில் கலை இலக்கிய மன்றம் சார்பில் பாராட்டு விழா ஒன்று நடத்தப்பட்டது.

அவருடன் நெருங்கிய பழகும் வாய்ப்பு கிட்டியதில்லை. சந்திப்பு கூட அதிகம் கிடையாது. எனது புத்தகங்களுக்கு முகப்பு ஓவியம் அவருடயதுதான். அப்போது கூட சந்திப்பு இல்லை. ‘வீடு பேறு’ கதைத் தொகுதிக்கான ஓவியத்தை அவர் தந்தபோது அந்த புத்தகத்தின் முன்னுரையில் ‘ஆதிமூலத்தின் இந்த படைப்பிற்கு முன் இந்த கதைகள் எல்லாம் எம்மாத்திரம்’ என்று எழுதியிருந்தேன். அதைப் படித்துவிட்டு நெகிழ்ந்துபோய் என் நண்பரிடம் “சித்தி என்ற கதையை படித்துவிட்டு நான் அன்று தூங்கவில்லை. எல்லோரிடமும் ‘முத்துக் கருப்பன்’ என்ற ஒருவன் இருக்கிறான்” என்று கூறியிருக்கிறார். பின்னர் சன் டி.வி. பேட்டியின்போது சந்தித்தோம். அப்போதும் அதையே கூறினார். பத்தாவது இதழில் இருந்து அசோகமித்திரனின் குறிப்புகள் வெளியாயின. தேவகி குருநாத்தின் ஒரியா மொழி சிறுகதையின் மொழிபெயர்ப்பு, பாவண்ணனின் சிறுகதை, அருண்மொழியின் கட்டுரை, திலகவதி, தேவதேவன் ஆகியோரின் கவிதைகள் வந்தன.

‘முன்றில் பதினோராவது இதழில் ஒரு கவிதை வெளியாயிற்று. அது கீழ்க்கண்டவாறு

கேட்டது நிஜம் – ஆனால்

சொல்லப்பட்டது பொய்.

பொய்யை நிஜமாக நம்பி – ஒருநாள்

நம்பியது பொய் எனத் தெரிந்த போது

நிஜமாக நம்பியது பொய்த்துப்

போனது மட்டுமல்லாமல் பொய்

நிஜமெல்லாமே பொய்யாகவன்றி

வேறெதுவாயும் தெரிவதில்லை.

நிஜம் சுடும் என்கிறார்கள்.

இருக்கலாம். ஆனால் பொய்

நம்பியவனை பொசுக்கியே விடுகிறது.

அப்போது இதைக் கூறலாம்

சாம்பலுக்கு நிஜமென்ன பொய்யென்ன

இது அசோகமித்திரனின் குறிப்புகளுடன் வெளிவந்தது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது போன்று அவர் ஏதாவது எழுதி இருக்கிறாரா என்று தெரியவில்லை. ஷங்கன்னா என்ற பெயரில் எஸ்.ராமகிருஷ்ணன் இரண்டு கவிதைகளும், சார்த்தாரின் மீள முடியுமா நாடகம் பற்றி வெளி ரங்கராஜனின் கட்டுரையும் வந்தன. அழகியலுக்கு எதிரான ஒரு புரட்சி – நவ கவிதையின் தன்மை பற்றி வெளிவந்த காதம்பரியின் கட்டுரை குறித்து பலர் கடிதம் எழுதியிருந்தார்கள்.

பன்னிரெண்டாவது இதழ் வரும் சமயம் எண்பதுகளில் படைப்பிலக்கியம் பற்றிய கருத்தரங்கு பற்றிய பணிகள் தொடங்கின. மூன்று நாள்கள் நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கு பல எழுத்தாளர்களாலும் நினைவு கூரப்பெற்றது. தமிழவன், அனாமிகா, சுரேஷ்குமார் இந்திரஜித் ஆகியோர் சிறுகதைகள் எழுதியிருந்தனர். கோபி கிருஷ்ணனின் ‘ஈடன் தோட்டம் தொட்டு’ என்ற சிறந்த சிறுகதையும் இந்த இதழில் இடம் பெற்றது.

பதிமூன்றாவது இதழிலிருந்து பொறுப்புகள் அதிகமாயின. புத்தகங்களாக நகுலனிக் வாக்குமூலம், கோபி கிருஷ்ணனின் சமூகப்பணி, உள்ளே இருந்து சில குரல்கள், காசியபனின் வீழ்ந்தவர்கள், பா. வெங்கடேசன், தேவரசிகன் ஆகியோரின் கவிதை தொகுப்புகள் ஆகியவை முன்றில் வெளியீடாக வந்தன. கிட்டத்தட்ட தமிழ் எழுத்தாளர் எல்லோருமே முன்றில் அலுவலகம் வந்து போய்க்கொண்டு இருந்தனர். கோணங்கி, எஸ். இராமகிருஷ்ணன், வண்ணநிலவன், நாகர்ஜுன்ன், ஏ.எஸ். பன்னீர்செல்வம், சாருநிவேதிதா, பெருந்தேவி போன்றோர் முன்றில் வளர்ச்சியில் ஆர்வம் காட்டியதோடு படைப்புகளையும் தந்தனர். இந்த இதழில் கோணங்கியின் ‘மணல் முகமூடி’ கதையும் அவரது நாவல் பற்றிய நாகார்ஜுன்ன் கட்டுரையும், கிருஷ்ணன் நம்பி பற்றிய எனது நினைவுகளும் வெளியாயிற்று.

இந்த வெளியீடுகளின் இடையே முன்றில் விமர்சன கூட்டங்களும் நடந்து கொண்டிருந்தன. பெரும்பாலம் Y.M.C.A. பட்டிமன்றத்திலும் நகராண்மைக் கழக பள்ளிகளிலும் நடந்தன. புதியபார்வையில் எனது கதைகள் நிறைய வெளியாயிற்று. வாக்குமூலம் நாவல் வெளியீட்டு சமயம் நகுலன் சென்னை வந்திருந்தார். அசோகமித்திரன், ஞானகூத்தன் கலந்து கொண்ட அந்த கூட்டம் மயிலாப்பூரில் நடந்து.

எஸ். ராமகிருஷ்ணனின் ராமசாமிகளின் வம்ச சரித்திரம் – மறைக்கப்பட்ட உண்மைகள் என்று பதினான்காவது இதழில் வெளியான படைப்பு சில எழுத்தாளர்களிடையே சலசலப்பை உண்டு பண்ணிற்று. சாருநிவேதிதாவின் 'The Book of Fuzoos' புத்தகம் பற்றிய கட்டுரையும் அதே சலசலப்பை பெற்றது. பழமலய்யின் கவிதை, சீன மொழிப்பெயர்ப்பு கவிதைகள் இவற்றோடு அந்த இதழிலிருந்து முன்றில் செய்திகள் என்ற தலைப்பில் சில குறிப்புகளை நான் தொடர்ந்து எழுதி வந்தேன். இதன் முக்கிய காரணத்தையும் சொல்ல வேண்டும். நவீன இலக்கியத்தில் நல்ல பயிற்சி பெற்ற சில எழுத்தாளர்கள் வேண்டுமென்றே பழந்தமிழ் இலக்கியத்தை கேலி செய்வதும் அதன் மதிப்பை வேண்டுமென்றே குறைத்து சொல்லுவதும் தான். திரு. வெங்கட்சுவாமிநாதன் இதில் ஒருவர். ஓவியம், நாடகம் போன்றவற்றை விமர்சனம் செய்துவந்த இவர் எல்லாமே சமஸ்கிருத்த்தில் இருந்துதான் வந்தது என்ற வைதீக மனப்பான்மையை வைத்திருந்த்தார். ஒரு குறிப்பிட்ட காலத்தில் சமஸ்கிரதும் அரசர்களால் ஊக்குவிக்கப்பட்டபோது தமிழ்க் கலைகளும் சமஸ்கிருத்த்தில்தான் எழுதப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்பதையும் அவை எந்த காரணம் கொண்டும் சமஸ்கிருத்ததுக்கு சொந்தம் என்று கொள்ளமுடியாது என்பதையும் மறந்துவிட்டு எழுதுவது போல எழுதிக் கொண்டிருந்தனர். தில்லை நடராஜனின் நாட்டியம், இட்லி என்ற பலகாரம் – இவை பற்றி கூட ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்க கூடும். அந்த காரணத்தால் மட்டும் அவை ஆங்கிலத்திற்கு சொந்தமாகிவிட முடியுமா என்ற மொழி இந்தியாவில் வளர்ச்சி பெறுவதற்கு முன்பே இங்கிருந்த மொழி தமிழ் என்பதை சொல்ல வேண்டிய ஆய்வாளர்கள் சொல்லி விட்டார்கள். வைதிகர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயம் அல்ல இது. இன்று தினசரி அலுவலில் பேசும்போது, யாரானாலும் சரி, சிலபல ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் பேசிவிட முடியாது. இதைப் போன்ற நிர்ப்பந்தம் ஒரு காலகட்டத்தில் ஏற்பட்டுத்தான் சமஸ்கிருத வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டது என்பதை மறந்து சமஸ்கிருந்தம் உலக மொழிகளின் தாய் என்று தமிழ்நாட்டில் சொல்லிக் கொண்டிருப்பது பைத்தியக்காரத்தனம். நார்டிக் மொழிக் கூறுகளில் ஒன்றாக ஈரான் போன்ற ஆரியப் பெயர் கொண்ட நாடுகளின் ஊடாக இந்திய உபகண்டத்தின் வடபகுதியில் வேரூன்றி இங்குள்ள கடவுளரை நிந்தித்து, பின்னர் ஏற்றுக்கொண்டு, சிறிது சிறிதாக தமிழ் போன்ற பூர்வகுடிமக்களின் மொழிச் சொற்களை உச்சரிப்புகளை மாற்றி வளர்ந்த மொழி சமஸ்கிருதம் அந்த வரலாற்று உண்மையை அப்படியே ஒப்புக்காள்வதில் என்ன கேவலம் ஏற்பட்டுவிடும்? கேவலம் என்பது உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதாகும். பல கலைகளும் உரிய மக்களின் மொழி எது? ஆப்பிரிக்க நாட்டில் சில பகுதிகளில் ஒரே ஊரில் ஆண்கள் ஒரு மொழியையும் பெண்கள் ஒரு மொழியையும் பேசிக் கொள்கிறார்கள். அதற்கு எழுத்து கிடையாது. அப்படிப்பட்ட பழங்காலத்து மக்களது மொழியிலும் பழமொழிகளும் கவிதைகளும் உண்டு. “தந்தம் எவ்வளவு கனமாக இருந்தாலும் யானையால் அதை சுமக்க முடியும் – அரங்கத்தில் ஆடத் துணிந்த நமருக்கு எப்படி ஆட வேண்டும் என்று சொல்லித் தர தேவையில்லை,” என்பது போன்ற சொற்றொடர்கள் திருக்குறளுக்குச் சம்ம் என்று சொல்லலாம். இப்போது அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கொண்டு படிக்கிறார்கள். இவை எல்லாம் ஆங்கிலத்தில் இருப்பதால் ஆங்கிலத்திற்கே சொந்தம் என்று சொல்வதும் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட எல்லாம் அந்த மொழி சார்ந்த பிரிவினருக்கே உரியது என்று சொல்வதும் ஒன்றுதான். கல் தோன்றி மண் தோன்றா காலத்து என்ற வரிகளை சொல்லிவிட்டால் சிலரது முகம் மாறிவிடும். இப்படிப்பட்டவர்கள் காற்றிலே இருந்து சமஸ்கிருதத்தை மூக்கால் இழுத்து இந்த பூமியில் வெளியிட்ட வினோத்த்தை படித்து பெருமை அடைவார்கள்.

இது போன்ற நிலைமை அதிகரித்துக் கொண்டே வருவதைச் சுட்டிக்காட்டி பல குறிப்புகள் முன்றிலில் எழுதப்ட்டன. திரு. வையாபுரி பிள்ளை அவர்களின் ஆய்வுகளையும் முடிவுகளையும் புகழ்ந்து பாடும் பலர் அவற்றை படிக்காமல் அவருடைய சமஸ்கிருத புகழ் பாடும் தன்மைக்காகவே அவர் பெயரை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். காலம் சென்ற வெ.சாமிநாதசர்மாவும் எல்லாத் தமிழ் நூல்களும் சமஸ்கிருதத்தில் இருந்து தான் தோன்றியது என்று கூறியதாக சமீபகாலத்தில் ஒரு புரளி கிளப்பிவிடப் பட்டிருக்கிறது.

‘யோக்கியர் வருகிறார்’ என்பது போன்ற கட்டுரைகளும் சில செய்திகளும் இதன் காரணமாகவே எழுதப்ட்டன. 1993இல் வெளியான குறிப்பு ஒன்று கீழே தரப்பட்டுள்ளது.

“ராமன் பாலம் சாட்டிலைட் போட்டோவில் தெரிகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ன – ஹிந்து என்ன – பிரசுரித்தாயிற்று – வேண்டியதுதானே. எந்த விஞ்ஞான அதிசயமும் வேத புராணங்களின் கூற்றுகளுக்குச் சான்றாகவே அமையும். இந்த லெமூரியா கண்டம் ஒன்றுதான் பாவம் செய்திருக்கிறது. கட்டுக்கதை என்று எளிதாக சொல்லிவிடலாம்.”

இந்த நாட்டின் பூர்வகால மொழி அல்லது மொழிகள் ஏதோ துருவ பிரதேசத்திலிருந்து கிளம்பி வந்த வெள்ளை மனிதர்களின் கலப்பால் தோன்றியவை என்று சொல்பவனை நாட்டுப்பற்று உள்ளவன் என்று ஏற்றுக்கொள்ள முடியாது. குறைந்தபட்சம் தென்னக மொழிகள் அப்படி அல்ல. இதை பெருமைக்குரிய விஷயமாகவே கருத வேண்டும்.

தமிழின் சிறந்த கவிஞர் பிரமிள். அவர் விஷயம் வேறு. தமிழின் தொன்மை பற்றியோ சமஸ்கிருத இலக்கியத்தின் பெருமை பற்றியோ அவர் கூறும் பல கருத்துக்களை ‘முன்றில்’ ஏற்றுக் கொண்டிருந்த போதிலும் சிலர் மீதுள்ள பகைமையுணர்வு காரணங்களால் அவர் கடைசிகாலத்தில் முன்றிலுக்கு வருவதை நிறுத்தி விட்டார். சமீபத்தில் எஸ். ராமகிருஷ்ணன் பிரமிளை முன்றிலில் சந்தித்தது பற்றி குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.

“ரிஷிகளின் கோத்திரம் இந்திய மக்களுக்கு பொதுவானவை,” என்ற பிரமிளின் கூற்று பலரையும் கேள்விக்குள்ளாக்கியது. இதற்கு எதிராக கட்டுரைகள் முன்றிலில் எழுதப்பட்ன. வேறு வகையில் தமிழ் இலக்கியத் தொன்மை குறித்து அவரோடு கருத்து வேறுபாடு இல்லை.

() () ()

கோவை சித்தர் என நாங்கள் அழைக்கும் கோவை ஞானி அவர்களை லில்லி தேவசிகாமணி சிறுகதை பரிசளிப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள கோவை சென்றபோது சந்தித்தேன். முன்றில் அலுவலகத்திற்கும் அவர் வந்திருக்கிறார். பல விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறோம். முன்றில் நடத்திய கருத்தரங்கு கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார்.

பங்களுரிலிருந்து தமிழவன், ப.கிருஷ்ணசாமி, காவ்யா சண்முகசுந்தரம் ஆகியோரும் சென்னையிலுள்ள எழுத்தாளர்கள் ஏறக்குறைய அனைவரும் முன்றில் அலுவலகத்திற்கு வந்திருக்கிறார்கள். ஈழத்து எழுத்தாளர் செ.யோகநாதன், புதுச்சேரியிலிருந்து பா.விசாலம், விஜயா வேலாயுதம் போன்றோர் வருவதுண்டு. கோபி கிருஷ்ணன் ஒரு தடவை ஐரோப்பிய நாடுகளிலிருந்து மதுரையில் தமிழ் பயில வந்த சில மாணவர்களை அழைத்து வந்தார். கவிஞர் சமயவேல் சென்னையில் அலுவலக பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் போது வருவார். இவர்தம் கவிதை பற்றி க.நா.சு. கலை நுட்பங்களில் குறிப்பிட்டிருக்கிறார். கும்பகோணத்திலிருந்து ரவி சுப்ரமணியம், தேனுகா. பொதிகை வெற்பன் ஆகியோர் முக்கிய மாணவர்கள். காசியபன் ஒரு தடவை கஷ்டப்பட்டு படியேறி வந்து சென்றார். முன்றில் அலுவலக அறையிலேயே நாகார்ஜுனன், எஸ். ராமகிருஷ்ணன், ஏ.எஸ். பன்னீர்  செல்வம் போன்றோரின் கருத்தரங்கு நடைபெறும். அழகியசிங்கர் விருட்சம் இதழ் தந்துவிட்டு முன்றில் இதழை எடுத்து செல்வார். அவர் எல்லா எழுத்தாளருடனும் நல்ல நட்பு வைத்திருந்தார். – தருமு சிவராமுவிடமும். கோமல் சாமிநாதன், வண்ண நிலவன் இருவரும் வந்திருக்கிறார்கள். இத்தனை பேரும் என்னைவிட என் பையன் மகாதேவனிடம் அதிகம் பேசுவார்கள் – க.நா.சு., கோவை ஞானி உட்பட.

() () ()

இதழ்கள் பதினைந்திலிருந்து பத்தொன்பது வரை கிட்டதட்ட புத்தக விமர்சன கட்டுரைகளாலேயே நிறைந்திருந்தது. ஏ.எஸ். பன்னீர்செல்வம், தமிழவன், நகுலன், வல்லிக்கண்ணன், எஸ்வி.ராஜதுரை, வ.கீதா, டாக்டர் கி.நாச்சிமுத்து, மோனிகா, லதா ராமகிருஷ்ணன் ஆகியோர் எழுதியிருந்தனர். சரித்திர நாவல் பற்றிய சிந்தனைகளை வல்லிக்கண்ணன் தொகுத்திருந்தார்.

() () ()

முன்றிலில் கவிதை எழுதியவர்களாக க.நா.சு., நகுலன், பிரமிள், ஞானகூத்தன், பழமலய், ஜெயமோகன், பாவண்ணன், பிரம்மராஜன், நீல. பத்மநாபன், நா.விஸ்வநாதன், தேவதேவன், சமயவேல், நீலமணி, கலாப்பிரியா, பா.வெங்கடேசன், ஆர். ராசகோபால், பொதிகைவெற்பன், ந்ந்தலாலா, ஷங்கன்னா, காசியபன், கோலாகல சீனிவாஸ், நஞ்சுண்டேசுவரன், மேட்டுப்பளையம் நிஷா, திலகவதி, வசந்தி சுப்ரமணியன், யூமா வாசுகி, பாரதிராமன், ரிஷி, புனிதன், வி.நம்பி, தேவ ரசிகன் ஆகியோரைக் குறிப்பிட வேண்டும்.‘

() () ()

டாக்டர் பஞ்சாட்சரம் செல்வராசன் நல்ல சிறுகதை எழுத்தாளர் என்று பெயரெடுத்திருக்கிறார். சிறுநீரகம் பற்றிய கட்டுரை நூலும் மாகாலி என்னும் மகாலிங்கம் என்ற சிறுகதை தொகுப்பும் வந்துள்ளன.

பா. வெங்கடேசன் கவிதை தவிர சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். ஒரு தொகுப்பு வந்துள்ளது.

கவிஞர் சமயவேலின் ‘டெர்ரரிசம்’ எனற் சிறுகதை மிகவும் நவீனமாகவும் ஆழ்ந்து படிக்க வேண்டிய ஒன்றாகவும் அமைந்திருந்தது.

ரவிக்குமாரின் ‘நேரா கிரகத்து...’ என்ற படைப்பு பலருக்கு பலவித சிந்தனைகளைத் தரக்கூடிய ஒன்று. அதுபற்றி அடுத்த இதழில் ராஜன் குறை எழுதினார்.

அக்னிபுத்திரன் முன்றிலுக்கு வருவதோடு கடிதங்கள் மூலமாக பல யோசனைகளைத் தெரிவித்திருக்றார்.

டாக்டர் கி.நாச்சிமுத்து நகுலனுடன் பேட்டி கண்டு அதை எழுதியிருந்தார்.

டாக்டர் ருத்ரனின் ஒரு விமர்சனக் கட்டுரை – பெருந்தேவியின் ஒரு படைப்பு – லதா ராமகிருஷ்ணனின் பெண்ணியம் சம்பந்தப்பட்ட கட்டுரை. ஆகியவை குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை.

2004ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். நல்ல வெயில். வெளி ரங்கராசன், லதா ராமகிருஷ்ணன், அமரந்தா ஆகியோர் நடத்திக் கொண்டிருந்த அமைப்பு சார்பில் தக்கர் பாபா வித்யாலயா கட்டிடத்தில் எளிய முறையில் ஒரு கூட்டத்தை நடத்தி பாராட்டு தெரிவித்தார்கள். கலைஞன் மாசிலாமணி, ஞானக்கூத்தன், வைத்தீஸ்வரன், சா.கந்தசாமி, காவ்யா சண்முகசுந்தரம், ராசகோபால், டாக்டர் செல்வராஜ், ரவி சுப்ரமண்யம் போன்றோர் பேசினர். முக்கிய விஷயமாக முன்றிலைத் திரும்பவும் கொண்டு வர வேண்டும் என்ற அவர்கள் விருப்பத்தையும் தெரிவித்தனர். கணையாழி இதழில் லதா ராமகிருஷ்ணன் இது பற்றி கட்டுரையும் எழுதியிருந்தார்.

முன்றிலுக்கு என்னைப்போல வயதாகிவிடவில்லை. எனவே வருவது சாத்தியமானதுதான்.

செல்பேசிகளும், கணினிகளும் நிறைந்து ஐந்நூறு ஆண்டுகளில் காணவேண்டிய மாற்றம் ஒரு ஐம்பது ஆண்டுகளில் நம்மிடையே வந்து சேர்ந்தை என்ன சொல்ல? நினைத்துப்பார்த்தால்

வருவது வேதனையா-வியப்பா-மகிழ்ச்சியா-என் பெற்றோர் காலத்திற்கும் என் காலத்திற்கும் இந்த மாற்றம்போல, என் பிள்ளைகள் காலத்திற்கு இல்லையே- திடீரென எங்கிருந்தோ வந்து குதித்தாற்போல.

 
முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...

மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved