Girl in a jacket

தேவ பாரதியின் ‘‘மாயை’’

ஓர் எழுபது எண்பது ஆண்டு வரலாற்றுப் பின்னணியில் சிறுகதையானது ஏராளமான மாற்றங்களைக் கொண்டு விட்டது என்றாலும் அந்த மாற்றங்கள் யாவுமே சிறுகதை இலக்கியத்தைச் செழுமைப்படுத்தின என்று சொல்ல முடியாது. படைப்பாளி சொல்ல வந்தது என்னவென்ற கேள்வியைக் கேட்பதும் அதற்குப் பதில் சொல்வதும் சுலபம். அப்படியானால் சுலபமாகத் தெரிந்து கொள்ளக் கூடிய ஒன்றைச் சொல்வதற்குத் தானா கதைகள் பயன்படுகின்றன என்ற கேள்வி தானாக எழுகிறது. இலக்கிய உலகில் அப்பாவிகள் அதிகம்.

‘‘சிந்திக்கவும் - சந்தோஷிக்கவும் - பிரியவும் - துயரமுறவும் - ஏங்கவும் - அழவும் ஆகிய வாழக்கைப் பயணத்தில்’’ என்று ஒரு கதையில் தேவபாரதி குறிப்பிடுகிறார். சிறுகதை உள்ளிட்ட எல்லாப் பிரிவிற்கும், ஒரு படைப்பைப் பொறுத்தவரை இதுவே காரணம் என்று சொல்லி விடலாம்.

தேவ பாரதியின் ‘‘மாயை’’ என்ற கதையைக் குறிப்பிட்டு சா. கந்தசாமி ஞானரதத்தில் எழுதிய போதுதான் அவரது கதைகள் பரிச்சயமாயின. ‘‘மாயை’’ போன்ற கதைகள் தமிழில் மிகக் குறைவு என்று  தான் இப்போதும் சொல்ல வேண்டும்.

அந்தக் கதையைப் படித்துப் பார்க்கும்போது, சில சமயம் திரும்பவும் படிக்கும்போது, சிறுகதைக்குரிய இலட்சணங்கள் யாவும் பொருந்தியுள்ளன என்பதோடு எப்படிப்பட்ட லட்சணங்களைச் சிறுகதை கொண்டிருக்கும் என்பதும் ஒரு வகையில் தெளிவாகிறது.
‘‘மாயை’’ கதையில் கதை சொல்லப்படவில்லை. சொல்லப்போனால் சா. கந்தசாமி சொல்வதைப் போல கதை வெளியேற்றப்படுகிறது.

சிறுகதையைப் பற்றிய எத்தனை எத்தனையோ விளக்கங்களுக்கும் அப்பால், சிறுகதையில் தான் அந்த ஆசிரியன் பளிச்சென்று தெரிகிறான் - நாவலை விட - என்று சொல்வது சரியாகயிருக்கும்.

சரி - ஆசிரியன் தெரிகிறபோது கதை தெரிகிறதா என்றால் இல்லையென்று சொல்லிவிடலாம். கதையும் கதை மாந்தரும் ஆசிரியன் வெளிப்பாட்டில் மறைந்து விடுகிறார்கள். கதை மாந்தர் மறைகிறபோது இப்படியாக ஆசிரியன் மட்டுமே நிலைக்கிறான்.

வாசகனும் நிலைக்கிறான். வாசகனின் அந்த நிலையை எப்படிச் சொல்வது? வழியில்லை. இன்னொரு கதை தான் பிறக்க வேண்டும்.

இவ்வாறு இத்தனை எளிதில் கோடிட்டுக் காட்டி விட முடியாத நிலையில். எது சிறுகதை அல்ல என்று பேசிப் பார்க்கலாம்.

ஒரு சிந்தனை ஏற்பட்டுக் கொண்டிருக்கும் போதே உலகில் எங்காவது ஒரு புதிய பரிமாணம் தோன்றியிருக்கும்.

சிறுகதைக்கென்று ஓர் உயிர்நாடி உண்டு என்றும் சொல்ல வேண்டும். எழுத்தேயில்லாத மொழியிலும் கூட கதை பேசப்படுகிறது என்னும்போது இந்த எண்ணம் உறுதிப்படுகிறது. இந்த உயிர் நாடியைச் சிறிது தொட்டுப் பார்த்து விடலாமேயொழிய படம் பிடித்துக் காட்டி விட முடியாது. அவ்வளவு கிடைத்தாலே போதும் என்று சொல்லலாம். சொற்களையும் உருவங்களையும் கொண்டு நடத்து வரும் கதை அந்தர்தியானமடைவது இந்த உயிர் நாடியில் கலக்கும் போது தான்.

‘‘மாயை’’ கதையில் ஒரு நடுத்தர வர்க்கத்துப் பெண் - ஒரு விதவையம்மாள் - ஒரு புருஷன் - ஒரு கறுப்புப் பு+னை - இத்தனை பேர் தாம். இந்தப் பூனை கூட தேவையற்றதோ எனத் தோன்றும்.

இரு பெண்களின் பேச்சு பணக்கஷ்டத்தைப் பற்றி. விதவையம்மாள் தன்னைப் போல் பொருளாதார நிலையில் அவதிப்படுகிற அந்தப் பெண்ணிடம் மிக ஆதரவாகப் பேசுகிறாள். அப்படித்தான் தோன்றுகிறது. பொதுவாகப் பெண்கள் குடும்பத்தை நிர்வகிப்பதில் அடைந்து வரும் கஷ்டம் பற்றிய பேச்சாகத் தான் தெரிகிறது. கடைசிவரை அப்படித்தான் தெரிகிறது. ஆனால் அப்படியில்லை என்றும் தோன்றச் செய்கிறார் ஆசிரியர். விஷயம் வேறு வழியில் ஆராவாரமில்லாத முறையில், விதவையம்மாள் பேசும் தொனி மூலம் காட்டப்பெறுகிறது. இத்தனைக்கும் சம்பாஷணை வெகு இயற்கையாக - விகல்ப்பமில்லாத முறையிலேயே செல்வதை ஒருவித பயத்துடன் படிக்கிறோம். அந்தப் பெண் கறுப்புப் பூனையை வைவதின் மூலம் தான் சிறிது எரிச்சலை காட்ட முடிகிறது. கதாசரியனின் தொனி கதை முழுவதிலும் விரவி நிற்கையில் அது கூட - அந்தக் கறுப்புப் பூனை சங்கதி கூட - அதிகப்படிதான். இதுதான் அது - இதற்காகத்தான் அதைச் சொல்கிறேன் என்று காட்ட வேண்டிய அவசியமில்லை. அவசியமில்லைதான். என்றாலும் அதை அவ்வாறு காட்டி விடுவதால் கதை அம்சம் எந்தச் சீர்குலைவையும் பெற்று விடவில்லை.

விதவையம்மாள் சென்று விட்ட பின்னர், கணவன் வீடு வந்து சேர்ந்ததும் அந்த சம்பாஷணையின் உயிர்நாடியானது அந்தப் பெண்ணை ஏங்கி அழச் செய்திருக்க முடியும். அவ்வாறு இல்லை. எந்தப் புகாரும் இல்லை கணவனிடம் முகம்புதைத்து விம்ம ஆரம்பித்தவள் ஒன்றும் இல்லை என்கிறாள். கறுப்புப் பூனையை வைகிறாள் அதோடு சரி.

கையாறு நிலை என்ற சொல் வழக்கு நமது மரபிலே உண்டு. அந்தப் பெண் கையைப் பிசைந்து கொண்டு செய்வதறியாது நிற்பது போன்ற காரியங்களைச் செய்யாது, இந்த வாழ்வின் அசைவிற்கு ஈடு கொடுக்கிறாள். அவ்வாறு கணவனிடம் எதையும் சொல்லி அழாமல் இருந்ததின் மூலம் எத்தனையோ விஷயங்கள் சொல்லி முடிக்கப்படுகின்றன.

தேவபாரதியின் வேறு ஒன்றிரண்டு கதைகளிலும் இந்த மாயை என்ற அருமையான கதையின் கருவும் உருவ அமைதியும் வெளிப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியும். குறிப்பாக ‘‘மாயை’’ என்ற கதை ஆசிரியருக்கும் கூட மிகவும் பிடித்திருக்கலாம்.

சந்தோஷிக்கவும் - ஏங்கவும் - அழவும் ஆகிய வாழ்க்கைப் பயணந்தான் இது. மிக நேர்த்தியான வடிவில் தரப்பட்ட இது பலமுறை படிக்கப்பட வேண்டிய கதை. நான் பல தடவை படித்தனுபவித்த ஒன்று. தமிழில் வந்த சிறந்த சிறுகதை என்றோ சிறுகதைகளில் ஒன்று என்றோ சொல்வது உபசார வார்த்தையில்லை.


- 1996


 

பிற கட்டுரைகள்

{load position article}

 
புகைப்படங்கள்
ஆவணப்படம்

முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...

மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved