Girl in a jacket

பா. விசாலத்தின் நாவல்

‘‘உண்மை ஒளிர்கவென்று பாடவோ’’

சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதரின் கதாகாலட்சேபங்களே நாவல்களாக பரிணமித்து வருகிற இந்த நவீனத் தமிழுலகில், பா. விசாலம் அவர்களது இரண்டாவது நாவல் அளிப்பது ஒரு மனச்சாந்தி.

மனச்சாந்தி என்று சொல்வது ஓர் ஒப்புமைக்காகவோ, ஏனோ தானோ என்றோ அல்ல. இந்த நாவலின் போக்கை அவ்வாறே குறிப்பிட்ட வேண்டும். உணர்வுகள் கிளர்ந்தெழச் செய்யும் நாவல்கள் நூற்றுக்கணக்கில் - நல்ல நாவல்களும் சேர்ந்து - உலக இலக்கியத்தில் உண்டு. ஆனாலும் சில படைப்புக்களே உணர்வுகள் அடக்கப் பெறும் செயற்பாட்டினை அகத்தே கொண்டுள்ளன.

அப்படிப்பட்டவை மேலை நாட்டிலும் குறைவுதான் என்று, இலக்கிய வல்லலுநர்கள் கணிக்கின்றனர். இந்த நாவல் அப்படிப்பட்ட போக்கில் செயற்பட்டிருப்பது ஒரு நல்ல திருப்பம்.

கொடுமைகள் - சீற்றங்கள் எப்போதும் இருந்திருக்கின்றன. அவை இந்த நாவலிலும் ஏராளம், அன்னம்மா-மீனா போன்றோர் அனுபவித்தது தனிப்பட்ட மனப்போராட்டங்கள் என்றால், ‘‘சர்ச்’’ உள்ளே மதில் எழுப்பி, தாழ்த்தப்பட்டவருக்கென உயர்சாதி கிறித்தவர்கள் செய்தவை வேறு இவ்வாறு கொடுமைகள் சித்தரிக்கப்பட்டிருப்பினும், அவை நாவலின் மையப்புள்ளியாக இல்லை. கதை சொல்லியின் வெளிப்பாடு வேறு வகையில் செல்கிறது. அப்படிப்பட்ட முறையால் கொடுமையின் பின்னணி தெரிகிறது-சீற்றம் பிறக்கிறது.

இத்தகைய நிலையில் வாழ்க்கைப் போராட்டத்தை விட நாட்டின் விடுதலைப் போராட்டம் பெரிதாக இருந்திருக்க முடியுமா என்றும் தோன்றுகிறது அத்தகைய நிலையிலும் வாழ்ககை நகர்ந்து செல்கிறது. வெறுப்பு மட்டுமே எல்லாவற்றையும் ஆக்கிரமித்துக் கொண்டு விடவில்லை. உண்மை என்பது மிச்சம் மீதி என்றில்லாமல் இருப்பது என்றால், கொடுமையும் உள்ளடக்கமாகி விடுகிறது. எல்லாவற்றையும் விட உண்மை அற்புதமானது என்ற தெளிவும் ஏற்படுகிறது.

இந்த நிலை ஏற்பட நாவலாசிரியர் ஒரு உத்தியைக் கையாளுகிறார்; கதையிடையே, ஸ்பார்டக்கஸ், ஏசு, கலிலியோ, வீரமாமுனிவர் போன்றோரின் வாழ்வு பற்றிய மகோன்னதம் தோன்றும்படி நிகழ்ச்சிகளைச் சேர்த்திருக்கிறார். வைகுந்தசாமி பற்றிய நிகழ்வுகள் அதிகமாக இருந்திருக்க வேண்டும்.

விண்ணரசு விண்ணில் இல்லை அது அங்கேதான் இருக்கிறது என்பதை வீரமாமுனிவர் சொன்னாரா என்பது தெரியாது. ஆனால் நாவலாசிரியரின் போக்குத் தெளிவாக இருக்கிறபடியால் சொல்லியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. வீரமாமுனிவர் சொல்வதாக நாவலாசிரியர் திருவள்ளுவர் பற்றிக் கூறியிருப்பது, எந்தப் பகட்டுமில்லாது விளங்குகிற அழகு. அவர் இயற்றிய திருக்காவலூர் புராணத்தில், குலசேகர ஆழ்வாரின் ‘‘படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பனோ’’ போன்ற பதிகங்கள் போல் அன்னை மேரியைப் பாடியிருக்கிறார். வைணவம் போல் கிறித்தவமும் பக்திக்கு முதலிடம் அளிக்கும் சமயம் தானே.

மார்த்தாண்ட வர்ம மகாராசா பற்றியும் நாவலாசிரியர் கூறுகிறார்;. இந்த மகாராஜா கிறித்தவராக மதம் மாறிய தேவசகாயம் பிள்ளைக்கு மட்டும் மரண தண்டனை அளிக்கவில்லை. பிராமண புரோகிதர் அறிவுரைப்படி, அனந்த பத்மநாப சாமிக்கு நடத்திய வேள்விக்காக, தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த, பதினைந்து குழந்தைகளை (நாடார், ஈழவர், பரதவர்) திருவன்ந்தபுரத்தில் பல இடங்களில் உயிருடன் புதைக்கச் செய்தவர். (பார்க்க, பேராசிரியர் சிவனடி அவர்களின் இந்திய சரித்திரக் களஞ்சியம் (vol.3) பிராமணருக்கு ஊட்டுப்புறைகள் திறந்தவர் கோசகஸ்ரம் செய்து புண்ணியம் பெற்றவர்.

எனினும் மார்த்தாண்ட வர்ம ராஜா பற்றியோ, அவருக்குத் தூபம் போட்ட ராமய்யன் பற்றியோ, நாவலாசிரியர் விமர்சனம் செய்யவில்லை.

ஆனால் ‘‘ஒரு நட்சத்திரம் போனால் என்ன - வானத்திற்கு என்ன நட்டம். இன்னும் எத்தனையோ கோடி நட்சத்திரங்கள்’’ என்று நாவலாசிரியர் சொல்லும்போது அந்தத் தோரணை ஏற்றுக்கொள்ளல் என்ற மனவிரிவைக் காட்டுகிறது.

மனவிரிவு என்பது பெரிய விஷயம். அப்படிச் சொல்வது ‘‘ஒன்றுமில்லாத ஒன்று’’ என்ற பொருளையும் தரும். எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு. முடிவிற்கு முடிவு இல்லை. சுதந்திர உணர்வுகள் - கனவுகள் இவற்றோடு இவற்றின் எதிராகப் போர்கள் மதங்கள் ஆகியவை விலகாது இருப்பதையே மனித குல வரலாறு என்ற சொல்லிவிட முடியும்.

சற்றேறக்குறைய இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகால கட்டத்தில் நடக்கிற கதை. வடக்கன் குளமும், அதன் பக்கமுள்ள நாஞ்சில் நாடும் களனாக அமைந்த இந்த நாவலில், கிறித்துவ மததம் மாறியவர்கள் முக்கிய பங்கேற்கின்றனர். வேளாள கிறித்தவரும், நாடார் கிறித்தவரும் தாழ்த்தப்பட்ட கிறித்தவரும், தங்கள் சரிதயைக் கைவிட்டுவிடாது, வெறும் ‘‘சர்ச்’’ போய் வருகிற நெறிமட்டுமே போதுமென்று தங்கள் காரியங்களைப் பார்த்து வருகின்றனர். அவர்களிட்ம ‘‘சர்ச்’’ தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை. நாதசுரத்தோடு கல்யாணம் பலகாரவகைகள், குடும்ப உறவு முறைகள், நிகழ்ச்சிகள், நாள் நட்சத்ரம் பார்த்தல், எதிலும் மாற்றமில்லை. பேச்சு வழக்கு எப்போதும் மாறியதில்லை. கிறித்தவர்கள் மட்டுமல்ல, இந்த நாவலில் குறிப்பிடப்படாத மதம் மாறிய முஸ்லீம்களும் அப்படித்தான்; வேளாளன் முஸ்லீமாக மாறிவிட்டால், பிள்ளைப் பட்டத்தைக் கூட சில சமயம் விட்டுக் கொடுக்கமாட்டான். மற்ற இடங்களில் எப்படியோ தெற்கே அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. ஆங்கிலேயர் வருவதற்கு முன்புள்ள கால கட்டத்திலிருந்து, குறைந்த பட்சம் வள்ளலார் காலம் வரை பார்த்தால், இதற்கான காரணகாரியங்கள் எனச் சிலவற்றைச் சொல்ல முடியும்.

மொழியிலும், உணவு உடை விஷயத்திலும் மதத்திலும் ஒரேயடியான மாற்றத்தைப் பெற்றுக்கொண்ட நீக்ரோ அமெரிக்கர் போன்றோர் சங்கதி அல்ல இது. அமெரிக்காவில் கறுப்பினத்தவராகியோர் ஆங்கிலம் பேசி ‘‘சர்ச்’’ போய்வந்து, நிறவேற்றுமை வெறியை அனுபவித்துக் கொண்டே கிறித்தவராகவே அமெரிக்காவில் இருப்பது போன்றதல்ல நமது விஷயம். கறுப்பர்கள் பிஷப் ஆக முடியும் என்பதும் இங்கே சொல்லவேண்டிய ஒன்று. பூங்குன்றனிலிருந்து வள்ளலார் வரை எடுத்துக் கொண்டால் தாங்கள் வணங்கியது வேதகால இந்திர மித்ர கடவுள் அல்ல என்ற நினைவுடன்தான் செயல்பட்டிருக்கின்றனர். மூவேந்தர் காரியங்கள் முடிந்து பல்லவ ஆட்சியின் பின்னர் பாமர ஜனங்கள் என்ன செய்திருக்க முடியும்? அரசர்களைப் பின்பற்றுவதைத் தவிர வேறு எதையும் செய்திருக்க முடியாது; தங்களையும் வைதிக மதத்தின் ஓர் அங்கமாக நினைத்தக்கொள்ள ஆரம்பித்தனர். அவ்வளவுதான். சற்றேறக்குறைய இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் இந்து என்ற சொல் புழக்கத்தில் வந்தது அதுவும், ஆங்கிலேயர் நிர்வாக வசதிக்காக ஏற்படுத்திக்கொண்ட சொல். இதையும் நாம் மறந்துவிட முடியாது. இப்படி வைதிகநெறி பரவுங்காலை தமிழ்நாட்ழன் தென்பகுதியில் அது மிகத் தாமதமாகத்தான் தலையெடுத்திருக்கிறது. அதுவும் அரசர் மூலம்தான். அப்படிப் பட்ட நிலை வந்தபோது, தங்கள் சொந்த நெறியைத் தங்கள் சாதிகளில் மட்டுமே கண்டு தங்கள் சாதிகளையே மதமாக்கிக் கொண்டு விட்டனர் போலும். மதமாற்றத்தால் தமிழன் என்ற அடையாளத்தை விட்டுவிட மறுத்தனர். மதமாற்றத்தால் தங்கள் தமிழ் அடையாளம் மாறிவிடாது என்று நம்பினர். வைதிகத்தில் அது நடவாத விஷயம்.

காலதேச வர்த்தமான நியதியில் எந்தவித உள்நோக்கமும் கற்பிக்காத வகையில், ராமானுஜர் பற்றி இந்த விஷயத்தில் சொல்வதென்றால், தீண்டத்தகாத சைவரை, தீண்டத்தகாத வைணவராக மட்டுமே மாற்றினார் என்று சொல்ல முடியும். சர்ச் எதைத் தந்து விட்டது என்று கேட்டால், வெறும் நாராயண மந்திரம் தந்துவிட்டது என்றும் கேட்கலாம்.

மேலும் ராமனுஜர் தமது மானசீகக் குருவாகக் கொண்டது நம்மாழ்வாரை. நாஞ்சில் நாட்டைச் சார்ந்த உடையநங்கை அம்மையாரின் புதல்வர்தான் நம்மாழ்வார். அவர் வளர்ந்தது திருக்குகூராக இருப்பினும், பிறந்தது திருவண்பரிசாரம் என்னும் பதியிலாகும். ‘‘வருவார் செல்வார் வண்பரிசாரத்தில்’’ என்பது அவரது பதிகம். வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் என்று சிறப்பிக்கப்பட்ட இந்த நம்வாழ்வார் வேளாளார். அதாவது வேதங்களைப் படிக்கவோ கேட்கவோ கூடாது என்ற வைதிக நெறிக்குட்பட்ட சூத்திரர். இந்த திருவண்பரிசாரம் என்ற நாஞ்சில் நாட்டு ஊரில் இருந்தவர்களும் இப்போது இருப்பவர்களும் சைவசமயச்சார்புடையவரே. ஒரு பெருமாள் தலமாக இருந்த போதும், கோவில் பிரசாதத்தைக் கூட, திருநீறு போல நெற்றியில் அணிபவர்கள்தாம். இந்த உடைய நங்கை அம்மையார் சைவ சமயத்திலிருந்து, எப்படி வைணவத்திற்கு மாறினார் என்ற ஆய்விற்கு வேலை இல்லை. ஏனெனில் பக்தி இயக்கம் வேத நெறிக்குப் புறம்தான். பக்தி இயக்கத்தோற்ற காரணமே வேதநெறி எதிர்ப்பே. தென்னாட்டில் தோன்றிய பக்தி இயக்கம் அன்பு என்ற சித்தாந்த அடிப்படையில் தோன்றிய ஒன்று. வேதத்திலோ இதிகாசங்களிலோ, பகவத்கீதையிலோ, பைபிளின் பழைய ஏற்பாடிலோ, அது இலர;லை. அந்த இயக்கம் காலங்காலமாக இங்கு நிலவிவந்த அறம் என்ற சித்தாந்த அடிப்படையில் அறியப்பட்ட ஒன்று. அறிவர் சித்தர் மூலம் அது தொடர்ந்தது உலகில் புத்தருக்கு முன் அன்பு குறித்துச் சொன்னவர் யாரும் இல்லை என்பார்கள்.

சிவன், விஷ்ணு இருவருமே கடவுள் ஸ்தானத்தில் இருத்தி வணங்கப்பட்டதாக வேதங்களில் இல்லை. சிவலிங்கம் நிந்திக்கப் பட்டிருக்கிறது. விஷ்ணு உபேந்திரன் என இந்திரனின் வேலைக்காரனாகக் கருதப்படுபவர். இத்தனைக்கும் சிவன் விஷ்ணு வேத காலத்திற்கும் முந்தைய கடவுளர். சுடலைமாடன் கறுப்பண்ணசாமி என்று நாட்டுப்புறத் தெய்வங்களாக பிற்காலத்தில் கருதப்பட்டிருக்கும் இக்கடவுள்களைப் பெயர் மாற்றம் செய்து வைதிக நெறிகளுக்குட்படுத்திக் கொண்டதைத் தவிர வேறு எந்தச் சொந்தமும் வைதிக மதத்திற்கும் இக்கடவுளுக்கும் இல்லை. குறவர் கடவுளான வேலனையும், வைதிகம் விடவில்லை. காத்திகேயனாகவும் சுப்ரமணியனாகவும், மாற்றியது. பெயர் மாற்றம் செய்து, எதையும் தங்களுடையதாகச் செய்து கொள்வதில் வைதிக நெறியாளர் பிரசித்தி பெற்றவர்கள். எந்த விஷயத்தையும் சமஸ்கிருதத்தில் எழுதிவைத்து, அது வைதிக நெறிக்குட்பட்டது என்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார்கள்.

இந்த நாவலாசிரியர் எடுத்துக்கொண்ட நிலைக்களன் அப்படிப்பட்டது. வைதிகத்தையும், அவர் மையப்படுத்திக் குற்றஞ்சொல்லவில்லை.

தெய்வம் ஒருபோதும் பெண்வயிற்றில் மனிதனாகப் பிறந்து நம்மை உய்விக்க வருவதில்லை. அது தானாகவே தோன்றும் என்பது சைவ சிந்தாந்தம். மாறாக அவதாரக் கொள்கையைத் தோற்றுவித்து, பின்னர் இராமன், கிருஷ்ணன் போன்றோரை அவதாரமாக ஆக்கியது வைணவம். வால்மீகி ராமாயணத்திலோ வியாச பாரதத்திNலுh அவதாரம் குறிப்பிடப்படவில்லை. கிறித்துவம் அவதாரக் கொள்கையை ஏற்றுக் கொள்கிறது. இஸ்லாம் ஏற்பதில்லை. மத மாற்றம் எல்லாமே தத்துவ விசாரணை செய்தபின்னர்தான் நடந்தேறின என்று சொல்லவில்லை. ஆனால் புர்வகுடியினராகிய தமிழரில் இஸ்லாமிற்கு மாறியோர் பெரும்பாலும் சைவச்சார்புடையோராக இருந்தவர்தாம்.

மதமாற்றத்திற்குச் செல்வாக்குப் பயன்படுத்தப்படவில்லையா என்றால் அந்தக் கேள்வி இராமானுஜர் அவர்கள் காலத்திற்கும் பொருந்தும். வைணவராக மதமாற்றம் செய்யப்பெற்றவர்களும் சரணாகதி தத்துவத்தை ஆய்ந்து அந்த முடிவிற்கு வந்தவர்கள் அல்லர்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஒன்று சொல்லவேண்டும். பேகன் மனைவி கண்ணகி பற்றி பல விவரங்கள் சங்க இலக்கியங்களில் கிடைக்கவில்லை. இளங்கோ அடிகள் தோன்றி அதைப் பெருமைப்படுத்த ஓர் அருமையான உத்தியைக் கையாண்டதை நாம் அறிய முடிகிறது. அவர் சமணராக இருந்தார். துறவியாக இருந்தார் என்ற சர்ச்சைகட்கு அப்பால், ஒரு படைப்பாளியாக நாம் அவரைக்காணும்போது, இம்மாதிரி போக்கு புலனாகிறது.

கண்ணகியிடம் சீற்றம் ஏற்பட்டது. போராட்ட உணர்வு இருந்தது. ஆனாலும் கதை சொல்லி எந்த விதத்திலும் யாரையும் பாண்டிய மன்னன் உட்படக் கீழ் மக்களாகச் சித்திரித்து மக்களிடையே பரப்பவில்லை. இந்தப் போக்கு தனித்துவமான சாந்த உணர்வால் மட்டுமே சாத்தியப்படுகிறது. அக்கால நியதியில், சிலப்பதிகார ஆசிரியருக்கு ஊழ் என்ற மக்கள் நம்பிக்கை கைகொடுத்திருக்கிறது. இந்த நாவலாசிரியருக்கு அந்தவழி கிடைக்கவில்லை. ஆனாலும் கட்டுப்பெட்டியாக வாழ்நது வரும் அன்னம்மாள் கூட, பெண்கள் எல்லாரும் இப்படி இருக்கத்தான் வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டால், அதுவே போதும் என்றாகிவிடுகிறது.

இளங்கோ அடிகளின் பாத்திரமான துறவி கவுந்தி அடிகளும் கூட ஒருமுறை கோபம் கொள்கிறார். ஒரே தடனைதான். படித்த பெண்ணான மீனா வருவதை ஏற்றுக் கொள்கிறாள். கதை அங்கு முடிகிறது. அதுதான் சிறப்பான அம்சம் என்ற சொல்ல வேண்டும். ‘‘அம்மாவுடன் பேசத் தொடங்குகிறாள்’’ என முடிகிற வரிகள் எதையும் சொல்லாமல் எல்லாவற்றையும் சொல்லிவிட்ட சித்தர் பண்புடன் திகழ்கின்றன.

மீனா எடுத்த முடிவு லட்சியவாதியின் முடிவா என்ற கேள்வி எழாது. லட்சியங்கள், நெறிமுறைகள் பன்முகத்தன்மை கொண்டு காலதேச வர்த்தமானத்திற்கு உட்பட்டவை.

திருடக் கூடாது என்ற நெறிமுறை 3000 ஆண்டுகளாக நம்மிடையே ஏற்கப்பட்டு வந்தாலும் திருட்டு என்பதன் விளக்கம் காலந்தோறும் மாறுபட்டே வருபவை. தான் கொண்ட முடிவு பிறருக்கு எந்தத் துன்பத்தையும் தராது. தனக்கும் மனச்சாந்தி அளிக்குமென்றால், எந்த முடிவும் நல்ல நெறியுடையதுதான். மீனா எடுத்துக்கொண்ட முடிவு அப்படிப்பட்டது. அப்படிப்பட்ட முடிவுதான் நல்ல நெறிமுறை ஆகிறது.
‘‘பேச்சிறந்த மாசில்மணியின் மணி வார்த்தை’’ என்றான் மணிவாசகன் என்ற சித்தன். ‘‘பேசினோம் பேசாமலே’’, என்றது திருவெண்காட்டுச் சித்தன். ‘‘வெளியாகத் தோன்றிய அருள்.’’ என்றது சிதம்பரம் ராமலிங்கம்.

இம்மாதிரிப் பண்புகளைக் கொண்டு நிற்கும் நாவலைத் தந்தவரையும் ‘‘தமிழ் நாவல் சித்தர்’’ என்று சொல்லலாம் எனத் தோன்றுகிறது.


கதை சொல்லி - 2001

பிற கட்டுரைகள்

{load position article}

 
புகைப்படங்கள்
ஆவணப்படம்

முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...

மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved