Girl in a jacket

பெம்மானே…

- மா.அரங்கநாதன்

 

”நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சங்கெட
பேராது நின்ற பெருங் கருணைப் பேராறே
ஆராவமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதாருள்ளத் தொளிக்கும் ஒளியானே!”

தென்னாட்டில் தோன்றிய சித்தாந்தம் நிலைத்து நிற்பதற்கு, மாணிக்க வாசகனின் மேற்படி வாசகங்கள் போன்றவற்றிற்கு, பெரும் பங்குண்டு என்று தெரிகிறது.

அந்த சித்தாந்தம் தொடர்ந்து நிலைக்கும் என்பதற்கு அண்மைக்காலக் கவிஞர்,

கலைஞர் ஆகியோரின் படைப்புகளே சான்று.

கவிஞர். ரவிசுப்பிரமணியனின் அண்மைக்காலக் கவிதைகளைப் படித்தபோது, பக்தி இலக்கியத்தின் மீதிருக்கும் எனது எண்ணமும் பாரதிதாசன் போன்றோரின் கண்ணோட்டமும் உறுதிப்படுகிறது.

சிவம் – அம்மன் போன்ற தெய்வ வணக்கம், இங்கே வேதமதம் நுழைவதற்கு முன்பேயே உள்ளது. வேதத்தில், சிவனுக்கு வணக்கம் இல்லை. இன்னொரு கடவுளான விஷ்ணு, உபேந்திரன் என்ற பெயரில் இந்திரனின் வேலைக்காரனாகக் கூறப்பட்டார். இது போன்ற செயற்பாடுகளை எதிர்த்துத் தோன்றியதுதான், பக்தி இயக்கம். வேதக்கடவுளர் புறந்தள்ளப்பட்டு, பூர்வகாலக் கடவுளர் திரும்பவும் தங்கள் இருப்பைப் பெற்றனர். இவ்வாறு நடந்ததை எடுத்துக் காட்டி எழுதப்பட்ட புராணங்கள் பல உள. இந்திரனைப் புறந்தள்ளிய தட்சயக்ஞம் கதை – பிரம்மனுக்குக் கோயிலே கூடாது என்ற முடிவிற்கு வரும் ஆதியும் அந்தமுமற்ற சோதியின் கதை, போன்றவற்றைச் சொல்லலாம். எல்லாவற்றிற்கும் மேலாக இதிகாசங்களான பாரதம், இராமாயணம் ஆகியவையும் சிவவழிபாட்டைக் கொண்டவைதாம் என்பதை அறிகிறோம்.

வடமொழியில் சில புராணங்களை எழுதியவர்கள் தமிழர்தாம் என்று ஓர் ஆய்வும் உண்டு. பரத சாஸ்த்திரத்தைக்கூட, வடமொழியில் தந்த பரதர் நம் காஞ்சிபுரத்துத் தமிழர் தாமே.

எல்லாம் சரிதான். இதில் மணிவாசகருக்கும் பாரதிதாசனுக்குமுள்ள ஒற்றுமை என்ன?. ஏதாவது இருக்கிறதா?. இப்படி ஒரு கேள்வி தோன்றியதன் காரணம் மேற்குறிப்பிட்ட வரிகளும் கவிஞர் ரவிசுப்பிரமணியத்தின் கவிதைகளும் தாம்.

மாணிக்கவாசகர் பக்தி இயக்கக் கால கட்டத்திற்கு கொஞ்சம் பிந்தியவர் தாம். அவரது கவிதைகளில் நாயகன் நாயகி பாவம் அதிகம் வந்து விடுகிறது. சிவத்தைச் சொல்லும் போது, தென்னாடுடைய சிவன் என்றும் தென்பாண்டி நாட்டானே என்றும் கூறியது தெரியும். தென்னாடு என்றால் தெற்கே உள்ளது அல்ல. சிங்களமும் தெற்கே தான். (அடக் கடவுளே! அதுவுமா!) இது தென்படக்கூடியது ஒன்று என்ற பொருளிலும் சித்தாந்தத்திலும் அடங்கியது (ஒளிக்கும் ஓளி) என்று அறிகிறோம்.

”அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி” என்ற பாரதிதாசனின் வரிகள், கவிதை என்றால் என்ன என்ற, யுகாந்திரக் கேள்விக்கு விடை தரும். ஒரு குறிப்பிட்ட காலத்தில், சரியான முறையில் வெளிப்படுத்தப்பட்ட ஓர் உணர்வு, எக்காலத்திற்குமே பொருந்தி நமக்கு அதே உணர்வைத்தரும்.

தமிழுக்கு அன்பு என்ற பெயரைக் கொடுத்துப் பாடிய பாரதிதாசனின் கவிதையையும், தென்னாடு, தென்பாண்டி என்ற தமிழை முன் நிறுத்திய மணிவாசகனையும் உலகின் எல்லா மாந்தரும், தங்களது அன்பு என்னும் உயிர் நிலை மூலம் அறிந்து கொள்ள முடியும்.

இவற்றை எப்போதோ கேட்டோ, கேட்டவர்களிடம் பேசியோ, அல்லது படித்தோ அறிந்திருந்தால் அல்லாமல் “ சிறு அசைவுக்கு ஈடாமோ பெம்மானே” – என்றும் “ சிவமே செழும் பொருளே; நான் உழல்கின்ற தென் மொழியின் தனிச்சிறப்பே…” என்றும் எழுதத் தோன்றியிருக்காது.

ரவிசுப்பிரமணியன் பெற்ற கல்வி அறிவு பற்றி நான் அறியேன். தென்படும் வெளிச்சமான சிவம், எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம். எதன் மூலமும் தோன்றலாம். யாருக்கும் தென்படலாம். தெரிந்தோ தெரியாமலோ கூட, அது வந்து சேர்ந்திருக்கலாம்.

ஒளிக்கும் ஒளி என்பது இதுதான்.அதுவாகவே தோன்றும் - தென்படும்.

நாம் முயன்று காண்பது அல்ல.அங்கே பெரியார், சிறியர், வலியர்,எளியர் என்று யாரும் இல்லை.

பெரியாரை வியத்தலும் சிறியாரை இகழ்தலும் அங்கே இல்லை.

கடவுள் நம்பிக்கை சம்மந்தப்பட்ட விஷயம் அல்ல இது.

புதுமைப்பித்தனின் அன்றிரவு, லா.ச.ரா. வின் தரங்கிணி போன்றவற்றைப் படித்திருந்தாலே போதும். அவர்கள் நாத்திகர்களாகவே இருக்கக் கூடும். ஆனால், திருவாசகப் பாதிப்பு இருக்கும்.

இது போன்ற சிறந்த கவிதைகளை ரவிசுப்பிரமணியன் மேலும் எழுத முடியும். அதற்கு இந்த மண்ணின் பக்தி இயக்கமும் மணிவாசகனும், பாரதிதாசனும், பெரியாரும் அவருக்கு உதவலாம்.

தலைப்பிற்குரிய ரவிசுப்பிரமணியத்தின்

முழுக்கவிதை வருமாறு :

கிவான்ஸ்வாங்கின் பயணக்குறிப்பிலிருந்து……

மும்மாரிப் பொழிகிறதா
ஆமாம்

சுபிட்ஷ வாழ்வுதானே நம் பிரஜைகளுக்கு
ஆமாம்

புகார்கள் ஏதும் உண்டா
ஆமாம்.... இல்லை

என்னய்யா மந்திரி நீர்
ஆமாமா  இல்லையா

இல்லை
....ம்...

கேள்விகளும் பதில்களும்  நீண்டுகொண்டிருந்தன
வரலாற்றைப் பதிவு செய்வோர்
ஒலைகளில் எழுதினர்

பிரஜைகள் எல்லாம்
போதையில் தட்டும் கைதட்டலில்
அண்டசராசரம் கிடுகிடுத்தது

கேள்விப் பட்டேன்
ஜாக்கிரதை

தந்தோரோபாயங்கள் தொடர்ந்து சரியில்லை எனில்

நீயும் இல்லைநாடும் நமதில்லை
எனக் கெட்ட வார்த்தையால்
சிரித்தபடி முணுமுணுத்தார் மன்னர்
நிர்வாக மந்திரியிடம்

பொற்காசு குவிகின்ற துறைகள் எல்லாம்
வேண்டியவர்க்கு வழங்கியதால்
வேலைகள் ஏதுமின்றி
அந்தரங்க அபிலாஷ கேளிக்கைகளுக்கு
புறப்பட்டார் மன்னர்

விளையாட்டு வீரன் நீ என்ற ஒரு புலவனின்
தமிழ் வரி நிறுத்திற்று அவனை

புள்ளினமும் வாய்திறந்து அரற்றா வண்ணம்
அத்தனைக்கும் பாலூட்டும் அற்புதம் நீ

செந்தழலின் சீற்றமதை மறந்து விட்டு
நிலவொளியில் நிழல் வெளியில்
ஆவினமாய் மக்களையே கிறங்க வைத்த கோமகன் நீ

கன்னியர்கள் களிப்பேற
கற்பனையில் சொல்லெடுத்து
நாளெல்லாம் வீசுகின்றோம்
அது உன் வாள்வீச்சின்
சிறு அசைவுக்கு ஈடாமோ பெம்மானே

ஆளுவதும் உனக்கொரு விளையாட்டு
வினையாட்டும் மக்களது மனமாட்டும் மன்னா
விளையாட்டு வீரன் நீ என்று நான் சொன்னால்
மறுப்புண்டோ நானிலத்தில்

சிவமே
செழும் பொருளே
நான் உழல்கின்ற தென்மொழியின் தனிச்சிறப்பே
செயற்கரிய செயலெல்லாம் செய்ததாலே
உனக்குவமை நீயேதான்

நீளும் கவிதையை ரசித்தபடி
புலவனை நோக்கி மோதிரத்தை வீசி எறிந்து
அந்தப்புரம் ஏகினான் மன்னன்

பின் குறிப்பு
நாட்குறிப்பில் தேதி இல்லை.

 
முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...





மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved