Girl in a jacket

 

உங்கள் கதைகளில் முத்துக்கருப்பன் என்ற பாத்திரம் தொடர்ந்து வருகிறது. உண்மையில் முத்துக்கருப்பன் யார்?

‘‘என்னால் விளக்கிச் சொல்ல முடியாத சில உணர்வுகளை எழுத்தில் கொண்டு வருவதற்கு உதவி செய்கிறவன் முத்துக்கருப்பன். கதை என்றால் என்ன - கவிதை என்றால் என்ன என்று கேட்டால் சரியான பதில் சொல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அது என்னவென்று தெரிந்தால் அது இனிமேல் இருக்காது இல்லையா? கடவுள் சமாச்சாரம் கூட அப்படித்தானே!’’

பிராமண எதிர்ப்பு என்பது உங்களது படைப்புகளில் அதிகமாக இருக்கிறது. சைவப் பின்னணி கொண்ட நீங்கள், பிராமண எதிர்ப்பைக் கையில் எடுத்தது ஏன்? நீங்கள் எதிர்ப்பது பிராமண வைதீகம் என்றால் இன்றைய உலகமய, பின்நவீனத்துவ காலகட்டத்திலும் அது தன்னைத் தகவமைத்துக் கொள்கிறதா? எந்தெந்த வகையில்? அதை எப்படி எதிர்கொள்வது?

‘‘வைதீக எதிர்ப்பு என்பதுதான் சரி - பிராமண எதிர்ப்பு அல்ல. பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்தாலும் அது பூரணமாகவே இருக்கும் என்று சொல்லும் உபநிடதம் எப்படி வைதீகமாகும்? அது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருப்பதால் அதை ஏற்றுக்கொள்ளலாம்; அதையே மற்றவர்கள் சொன்னால் ஏற்க வேண்டியதில்லை என்பது வைதீகம். உண்மையில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது எல்லாம் வைதீக மதத்திற்கோ வைதீகவாதிகளுக்கோ சொந்தமானவை அல்ல. ஓர் அரசன் வைதீகவாதிகள் பக்கம் என்றால் எல்லாமே வடமொழியில் எழுதப்பட்டுவிடும். ஆங்கிலேயர் காலத்தில் அரசு மொழியான ஆங்கிலத்தில் தான் எல்லாம் எழுதப்பட்டன. பரதநாட்டியம், கர்நாடக இசை போன்ற தென்னாட்டுக் கலைகளும் வடமொழியில்தான் எழுதப்பட்டன. தில்லை நடராசனின் ஊழிக்கூத்து, இட்லி என்ற பலகாரம் - இவைபற்றிகூட ஆங்கிலத்தில்தான் முதலில் கட்டுரைகள் எழுதப்பட்டன. இட்லியும் தில்லை நடராசனும் ஆங்கிலேயர் சமாச்சாரங்களா? இன்னொன்று, வடமொழியின்மீது எந்த வெறுப்பும் அப்போது இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. வைதீக எதிர்ப்பு இருந்தது. காஞ்சிப் பெரியவர் உரைகளைப் படியுங்கள். எந்தக் காலத்திலும் சமஸ்கிருதம் தாய்மொழியாகப் பேசப்படவில்லை என்பது அவர்கூற்று.

சைவப் பின்னணி என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்? மொத்தமாக பக்தி இயக்கமே தென்னாட்டில், தமிழ்நாட்டில்தான் தோன்றியது. அதுவும் வைதீக எதிர்பிற்கான முயற்சியே. வேதங்களில் பூர்வ குடிமக்களின் சிவலிங்கம் நிந்திக்கப்படுகிறது. விஷ்ணு, உபேந்திரன் என்ற பெயரில் - இந்திரனின் வேலைக்காரனாகச் சொல்லப்படுகிறார். இவைபோன்ற கீழ்த்தரங்களை எதிர்த்துக் கிளம்பியது தான் பக்தி இயக்கம் வேதகாலத்திற்கு முன்னரே கருப்பண்ணசாமி, சுடலைமாடன் என்று பின்னர் அறியப்படுகிற பூர்வகால கடவுளரைத் திரும்பவும் தக்க இடத்திற்குக் கொண்டுவரச் செய்த முயற்சியே இது. இந்தக் கடவுளரையும், வேதநாயகன் என்று பட்டம் சூட்டி அந்த பக்தி இயக்கத்தையும் வைதீகம் தன்னோடு சேர்த்துக் கொண்டு விட்டது. பெண் தெய்வ வணக்கம் வேதகால ஆரியர்க்கு இல்லை. ஆனால் இங்கே கருமாரி அம்மனைக்கூட கிருஷ்ணமாரி என்று பெயர்மாற்றி வேத மந்திரங்களால் அர்ச்சனை செய்து, எந்த விஷயத்தில் ஆதாயம் இருக்கிறதோ அங்கே ஒரு சமஸ்கிருதப் பெயர் சூட்டப்பட்டு, அதைத் தங்களுடையதாக ஆக்கிக் கொண்டுவிடுவதில் வைதீகம் கைதேர்ந்த ஆதிக்க சக்தி. ரஸ்ஸல், பெர்னாட்ஷா, பெரியார் ஆகியோரின் கொள்கைகள் சீரும் சிறப்பும் அடைந்தால், சார்வாகன், ஜாபலி ஆகியோர் பெயர்களைக் கூறி பெரியார் போன்றவர்களையும் தங்கள் பக்கம் இழுத்துவிடும். இதுதான் வைதீகம்.

இப்படிப்பட்ட வைதீகம் சிக்மன் ப்ராய்டின் மனோதத்துவம் மற்றும் அமைப்பியல், பின்நவீனத்துவக் கோட்பாடு ஆகியவற்றில் தன்னை தகவமைத்துக் கொள்வதா கஷ்டம்?

சைவ சித்தாந்தம் என்பது பக்தி இயக்க காலத்து சைவ சமயம் அல்ல. அதுவும் சொல்லப்பட்டிருக்கலாமே ஒழிய, பக்தி இயக்க காலத்திற்கு முன்பே தொன்றுதொட்டு தென்னாட்டில் இருந்து வந்தது - சங்க காலத்திலும் சில கவிதைகளில் தெரிவது - இதையே கொள்ள வேண்டும். நமக்குத் தெரிந்தவரையில் பூங்குன்றன் போன்றோரிலிருந்து வள்ளலார் ஈறாக நம் சித்தர் பெருமக்கள் தந்தது. இதில் திருமூலரின் கொடை மிக அரிது என்று சொல்ல வேண்டும்.’’

இதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? இதற்கு எதிரிடையாக ஓர் இலக்கியவாதி என்ன செய்ய வேண்டும்?

‘‘எதையும் செய்ய வேண்டாம். இதுதான் வைதீகம் என்று அதை அறிந்து கொள்வது மட்டுமே உண்மையான வைதீக எதிர்ப்பு ஆகும். ஜே. கிருஷ்ணமூர்த்தி சொல்வதும் கிட்டத்தட்ட இதுவேதான்.

ஒளி வருவதும், இருள் அகலுவதும் வேறு வேறல்ல இதுதான் இருள் என்று அறிந்து கொள்வதுதான் ஒளி அப்போதே இருள் அகன்று விடுகிறது. கோபம் என்ற ஒன்றாக நாம் மாறும் போது அல்லது கோபம் அடைகிறபோது, கோபமடைந்த நம்மை நாமே பார்த்துக் கொள்ள முடியுமானால் அது சாந்தம். சிவம் - சிவன் இதுபற்றி வேறொன்றையும் சொல்ல வேண்டும்.

தமிழ்கூறும் சிவனும் ஒரு சித்தன்தான் அவன் நிலந்தரு திருவிற்பாண்டியன் என்று அறியப்படுபவன் ஏதோ ஒரு கடல் அரிப்பின்போது, நிலமிழந்த மக்களுக்கு நிலத்தைப் பங்கிட்டு அளித்த வேடர் தலைவனாக இருக்க வேண்டும். நெருப்பின் பயனைப் புதிதாகத் தெரிந்து சொன்னவனாகவும் இருக்கக்கூடும் வைதீகவாதியான ஆதிசங்கரர்கூட இந்த உண்மையைப் புறக்கணிக்க முடியாது சிவனுக்கு இந்த உருவத்தையே அளிக்கிறார். நப்பின்னையின் காதலன் - மாட்டுச் சண்டை வீரன் கண்ணனை காசியபக்கொத்திரத்து விஷ்ணு என்று ஆக்கிவிட்டாலும்கூட, தமிழ்ச் சித்தனாகிய சிவனை ஒன்றும் செய்ய முடியவில்லை.

மாணிக்கவாசகரே இதைப் பற்றிக் கூறுகிறார்:

காட்டகத்து வேடன் வலைவாணன்

நாட்டிற் பரிப்பாகன்....’

அவரின் இந்த வரிகளோடு பட்டினத்தாருக்கு மருதப்பன் அளித்த மண்ணையும் சாணி வரட்டியையும் சேர்த்துக் கொண்டால் சிவனது சித்தமும் சித்தரின் சிவமும் தெரிந்துவிடும். பழந்தமிழர் கூறும் நாநில மக்கள் அவர்கள்.’’

போரற்ற - அமைதியான - சக மனித நேயத்தைக் கட்டமைக்கும் கலை, இலக்கியச் செயல்பாட்டினை உங்கள் படைப்புகிள்ன வழியே நான் புhpந்துகொள்கிறேன். உண்மையில் நீங்கள் படைப்புகளின் வழியே எதைக் கட்டமைக்க விரும்புகிறீர்கள்? நீஙகள் படைப்புகளின் வழியே எதைக் கட்டமைக்க விரும்புகிறீர்கள்? நீங்கள் விரும்பியது கை கூடியதா?

‘‘கட்டமைப்பு என்று கூறும்போது ஒன்று சொல்ல வேண்டும். கட்டமைப்புடன் வெகு காலத்திற்கு இருந்து வந்த ஒன்றுகூட, ஏற்கெனவே வேறுபட்ட கட்டமைப்பு ஒன்றின் சிதறடிக்கப்பட்ட மாற்றங்கள்தான். இப்போது இருக்கிற கட்டமைப்பு சிதறடிக்கப்படுவதும் காலநியதிதான். ஏற்கெனவே பல கூறுகளாக வெடித்த பகுதிகள்தான், இப்போது ஒரு கட்டமைப்புடன், இருந்து வருகிற நம்முடைய நிலவுலகு என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம் அல்லவா? புதிதாக கட்டமைத்துத் தருவதற்கு நாம் அறிவுலகவாதிகள் அல்ல. பார்;வையின் வழியே உணர்ந்து கொள்வதை புரிந்து கொள்ளாவிட்டாலும், மாற்றம் என்று அதை அறிந்து கொண்டு அல்லது உணர்ந்து கொண்டு சொல்வதோடு அல்லது சொல்ல முய்ற்சிப்பதோடு பணி முடிகிறது.’’

ஐம்பதுகளில் எழுதத் தொடங்கிவிட்டீர்கள். அந்த காலகட்டத்தில் தொடங்கி இன்றுவரை நீங்கள் எழுதிய எல்லா சிறுகதைகளின் வடிவ நேர்த்தி என்பது ஆச்சரியமூட்டக்கூடியதாக இருக்கிறது. கதைகளின் வடிவம் என்பது நீங்களே திட்டமிடுவதா? இல்லை, கதையின் உள்ளடக்கம் அதைத் தீர்மானித்துக் கொள்கிறதா?

‘‘ஏற்கெனவே திட்டமிட்ட பயணங்கள் எல்லாம் கட்டுரை எழுதப் பயன்படலாமே ஒழிய படைப்பாகிவிடா. கதையின் வடிவம் ஒரு சொல்லிலோ ஒரு சொற்றொடரிலோ காற்புள்ளி, அரைப்புள்ளியிலோ தோன்றி நிற்கும். தோன்றிய பின்னர் அதுவே தானாக எல்லாவற்றையும் சேர்த்து முழுமையாக்கும் நகுலன் சொன்னது போல, ‘நான் எழுதி முடித்த பின்னரே என்ன எழுதினேன் என்பது தெரியவருகிறது’ என்பது உண்மை. கவிதையானது படைப்பிலக்கியத்தின் தலைச்சன் குழந்தை என்றால் மற்றவை அதன்பின் வந்தவை.’’

எளிமையும் பரிசோதனையும் கைகோர்த்துக் கொண்ட நவீனத் தன்மையில் புதுமைப்பித்தனுக்கு இணையாக உங்கள் கதைகள் மதிக்கப்படுகின்றன. இத்தகைய படைப்பாளுமை தொடக்க காலத்திலேயே உங்களுக்கு எவ்வாறு சாத்தியப்பட்டது? மற்றொரு ஆச்சாரியமான கூறு, நவீனத் தன்மையோடு மரபு சார்ந்த விஷயங்களைத் திட்டமிட்டு முன்வைக்கிறீர்கள்?

‘‘கம்பனும் அதைத்தானே செய்தான்.

கருப்பெந்திரம் முதலாயன் கண்டாள் இடர் காணாள்

பொருப்பெந்திய தோளானொடு விளையாடினள் போனாள்.’

கரும்புச்சாறு பிழியும் இயந்திரம் பார்த்து விளையாடிக் கொண்டே சீதை போனாள் என்று எப்படிக் கூறுகிறான் பாருங்கள் திரேதா யுகத்து ராமன் கதையில் கருப்பேந்திரம் வருகிறது. கம்பனுக்கும் அது தெரியும். அவன் அதைப் பொருட்படுத்தவில்லை - நாமும் அப்படித்தான். உண்மையான படைப்பு அனுபவத்தில் காலம் என்பது இல்லை.’’

ஒரு தேசிய இனம் சார்ந்த வாழ்வியலைப் படைக்கும்போது, மரபுகளையும் இன வரை வியல் கூறுகளையும் தவிர்த்து விட்டு அல்லது முக்கியத்துவம் தராமல் தொட்டுக் கொண்டு எழுதுவது படைப்பாகுமா? எது உங்களை எழுத வைத்தது?

‘‘ஒரு காக்கையை இன்னொரு காக்கை பார்ப்பதுபோல நம்மால் பார்க்க முடியாது நம்முடைய பார்வை வேறு காக்கை சிறகினிலே என்று சொல்லிவிட்டு கண்ணபிரானிடம்தான் வந்து சேரமுடிகிறது. பார்வை படைப்பைப் பொறுத்த விஷயம். ஒரு கருத்தைச் சார்ந்ததாக இருக்காது. ஒரு விலங்கியல்வாதி நாய் ஒன்றைப் பார்க்கும் முறையில் படைப்பாளி பார்ப்பதில்லை. ஒரு எஜமானன் தனது நாயைப் பார்ப்பது போன்றும் அவன் நோக்குவதில்லை. ஒரு குழந்தை முதன்முறையாக நாயைப் பார்ப்பது போன்று அவன் பார்வை இருக்கும். சொல்லப்போனால் அவன் பார்க்கவில்லை - பார்த்தல் என்ற நிகழ்ச்சி அங்கு நடைபெறுகிறது. அதற்கு முன்னால் நாயை அவன் பார்த்திருக்க மாட்டானோ என்று நாம் எண்ணும் வகையில் அது இருக்கும். நாயை நம்மால் விளக்கிச் சொல்ல முடியாது. ‘கண்டறியாதனக் கண்டேன்’ என்று கவிதை பாடிய நாவுக்கரசர், அதற்கு முன்னால் யானையைப் பார்த்ததில்லை என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

அதை ஏன் சொல்ல வேண்டும் - இது மிகவும் அடிப்படையான கேள்வி தத்துவஞானி சார்த்தர் மூன்று கேள்விகளை எழுப்புகிறார். ஏன் எழுதுகிறான், என்ன எழுதுகிறான், யாருக்காக எழுதுகிறான் என்பன. இவற்றில் கடைசி கேள்வியான யாருக்காக எழுதுகிறான் என்பது கொஞ்சம் விவாதத்திற்குரியது. ஏன் எழுதுகிறான் என்பதைத்தான் இப்போது நீங்கள் கேட்கிறீர்கள். தன்னைப் பற்றிய நினைவோ, படைக்கிற படைப்பின் கதி பற்றிய நினைவோ இல்லாமல் தோன்றுவதுதான் உண்மையான படைப்பு இலக்கியம். எண்ணங்கள் சார்பாக இல்லாதபோதுதான் - ஏற்கெனவே தான்கொண்ட சிந்தனைகள் மேல் ஏற்றப்படாதபோதுதான், ஆபாசங்கள் அற்ற புனிதம் ஏற்படுகிறது. சாக்கடைகளும் காவிரிகளும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஆதவனும் நிலவும் அன்று வந்த அதிசயங்களாகத் தோன்றுகின்றன. உலகம் சோதிமயமாகத் தெரிகிறது மங்கிக் கிடக்கிறது - மனிதன் மாறவே இல்லை - இத்தகைய கூற்றுகள் வெளிவர படைப்பாளி பெற்ற உணர்வுதான் காரணம்.’’

சமகாலத்தின் முக்கியமான சிறுகதை ஆசிரியர் என்று உங்களை ‘இந்தியா டுடே’ கட்டுரையில் பிரபஞ்சன் குறிப்பிட்டுள்ளார். ஆனால் உங்கள் முதல் நூல் என்பது கட்டுரைத் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. அதுவும் கவிதை இயல்சார்ந்த மிக முக்கிய தரிசனமாக ‘பொருளின் பொருள்’ கட்டுரை அமைந்திருக்கிறது. முதலில் கட்டுரைத் தொகுப்பு வெளியானது ஏன்? கவிஞர்கள் நிறைந்த இலக்கிய உலகில் உங்கள் கட்டுரைத் தொகுப்புக்கு வரவேற்பு எப்படி இருந்தது?

‘‘என்னுடைய முதல் நூலாக பொருளின் பொருள்தான் வரவேண்டும் என்று விரும்பினேன். 1952-ல் முதல் கதை வெளிவந்தபோதும்கூட கவிதை பற்றிய நூலுக்கு முக்கியத்துவம் தர ஒரே ஒரு காரணம் மட்டுமே உள்ளது. என்னைப் பொறுத்த வரை படைப்பிலக்கியம் சம்பந்தப்பட்ட பல ஐயப்பாடுகளுக்கு கவிதை அம்சமே நல்ல ஒருபதிலைத் தந்தது. ஒன்றை எதனால் கவிதை என்று சொல்கிறோமோ அதைப்பற்றி எண்ண ஆரம்பித்து விட்டால் மற்றவை பற்றிய - அதாவது சிறுகதை, நாவல், நாடகம் போன்றவற்றிற்கும் பதில் கிடைத்துவிடும்.

அந்தக் கட்டுரை நூலிற்கு சிறுபத்திரிகை வாசகரிடையே மிகுந்த வரவேற்பு இருக்கிறது. மூன்று பதிப்புகள் வெளியாகி உள்ளன.’’

நீங்கள் முன்னிறுத்தும் கவிதைக் கோட்பாடு என்பது எதனடிப்படையில் அமைந்தது? கவிதையியல் சார்ந்த நூல்கள் இங்கே அதிகம் எழுதப்படாததற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? கவிதை குறித்து இத்தனை புரிதலும் சிலாகிப்பும் கொண்ட நீங்கள் கவிதைகள் எழுதியிருக்கிறீர்களா?

‘‘உண்மையோடு உறவுவைத்துக் கொள்ளாத எதுவும் படைப்பு ஆவதில்லை. கவிஞனின் படைப்பு உண்மையைத் தவிர வேறு எதையும் கொண்டதில்லை. கவிதையில் நோக்கம் என்ற ஒன்று இருந்திருந்தால் அது நிறைவேறியவுடன் அது இல்லாமல் போய்விடும். எடுத்துக்காட்டாக உலகில் பசிப்பிணி இல்லாத நிலை ஒன்று ஏற்பட்டுவிட்டால், பொருளாதார சம்பந்தமான நூல்கள் அனைத்தும் வேண்டாதவை ஆகிவிடலாம். அந்த நிலையிலும்கூட, ‘இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக’ என்ற வள்ளுவனின் கவிதை ஒரு - கணம் நம்மை மவுனமாக்கிவிடும். இத்தனைக்கும் பசிப்பிணியைப் போக்க எந்த வழியையும் அந்தக் கவிதை சொல்லவில்லை. காரண காரியங்களோடு இருக்கும் எந்தப் பொருளும் நிலைப்பது கிடையாது. அன்பு என்று நாம் உணர்வதிலே நோக்கமோ எந்தவித காரண காரியங்களோ இல்லை.

கவிதையியல் சார்ந்த நூல்கள் இங்கே அதிகம் எழுதப்படவில்லை செய்யுள் மூலமாக எல்லாவற்றையும் எழுதிப் பார்க்கப்பட்ட ஆதிகால மொழிகளில் பின்நவீனத்துவ - மாந்திரீக எதார்த்தப் படைப்புகள் தமிழில் மட்டுமே இருக்கின்றன.

நான் கவிதை எழுதியது கிடையாது எழுதும் உத்தேசமும் இல்லை என்னால் எழுத முடியாது என்று சொன்னால் அதையும் ஒப்புக் கொள்ளலாம் கவிதை பற்றி எழுதுவற்கு கவிஞனாக இருக்க வேண்டும் மென்று சொல்லுவது வேடிக்கையாகிவிடும்.’’

உங்கள் படைப்புலகை முன்வைத்து ரவிசுப்ரமணியம் இயக்கியிருக்கும் டாக்குமென்டரியில், ஆங்கிலப் படங்களை விரும்பிப் பார்ப்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். உங்கள் படைப்பாளுமைக்கு ஆங்கிலப் படங்கள் எந்த வகையிலாவது உதவி இருக்கிறதா? சினிமா பற்றி எழுதியிருக்கிறீர்களா?

‘‘சிறு வயது முதற்கொண்டே ஆங்கிலப் படங்களை முடிந்த வரை பார்த்து வந்தேன். சொந்த கிராமத்திலிருந்து பத்து மைல் நடக்க வேண்டியிருக்கும் உலக இலக்கியம் பற்றி அறிந்து கொள்ள இப்படங்கள். பெருமளவில் உதவி இருக்கின்றன. கிராமங்களில் புத்தகங்கள் கிடைப்பது அரிது. சிலசமயம் படங்கள் பார்த்த பின்னரே அந்தப் புத்தகங்களைப் படிக்கும் நிலை ஏற்படும். டிக்கன் ‘இரு நகரக் கதை’, பெர்ல்பக் ‘நல்ல நிலம்’ போன்றவை அப்படித்தான் பார்க்கப்பட்டன. படிப்பதற்கும் பார்ப்பதற்கும் ஆங்கிலப் படங்களைப் பொறுத்தவரை சிறிதளவு வித்தியாசமே தெரிந்தது. எல்லாவற்றாலும் பாதிக்கப்பட்டுத்தான் நாம் இருக்கிறோம். பிறகு சென்னை வந்து புத்தகங்கள் படிப்பதும் படங்கள் பார்ப்பதும் எளிதான பின்னர், அவைபற்றி ‘சினிமா கதிர்’ பத்திரிகையில் எழுதி உள்ளேன். சில குறிப்பிட்ட இயக்குனர்கள் (வில்லியம் வைலர், ஸ்டான்லி கிராமர் போன்றோர்), சில குறிப்பிட்ட நடிகர்கள் (பிராண்டோ, ஜேம்ஸ்டீன்), சில இலக்கிய கர்தாக்களின் படங்கள் (‘ஹெமிங்வே’, ‘டிக்கன்ஸ், ‘டென்னஸி வில்லியம்ஸ்’) பற்றியும் எழுதி இருந்தேன். ஆனால் அதைத் தொடரவில்லை.’’

அதே டாக்குமென்டரியில் நவீனப் பெண் கவிஞர்களில் பலர் ஆபாசமாக எழுதுவதை ஆதரித்துக் கருத்து தெரிவித்துள்ளீர்களே?

‘‘பெண் கவிஞர்கள் என்று சொல்வதுகூட தவறு. ஆபாசம் எது என்பது பற்றித்தான் பேசினேன். எழுத்தில் அல்லது படைப்பிலக்கியத்தில் ஆபாசம் தேவையா, தேவையில்லையா என்று அல்ல. உலக எழுத்துக்களில் தொண்ணூறு சதவிகிதம் ஆபாசம்தான். அவற்றைக் கொளுத்தலாம். ஆனால் எது ஆபாசம்?

டால்ஸ்டாய் மகாத்மா காந்தியின் கரு போன்றவர் அவருடைய ‘அன்னா கரினீனா’ நாவலில் அந்த அன்னாவும், விரான்சியும் நடந்து கொள்வது பாலியல் நெறிமுறைக்கு எதிரானது என்பதை எல்லாரும் அறிவர். ஆனால் அந்த அன்னாவை நினைத்தால் வருத்தமல்லவா ஏற்படுகிறது? டால்ஸ்டாய் தூரத்தில் வாழ்ந்தவர். நம்மிடையே இருக்கும் அசோகமித்திரனின் ‘மணல்’ என்கிற கதையை எடுத்துக்கொள்ளுங்கள். அதிலே அந்தப் பெண்மிகுந்த மனப் போராட்டத்திற்குப் பின்னர் அந்தப் பூங்காவை நோக்கி நடக்கத் தொடங்குகிறாள் என்று கதையை முடிக்கிறார். எதற்காகப் போகிறாள் என்று அவர் சொல்லவில்லை. கதையின் தொனி தெளிவுபடுத்துகிறது. அது பாலியல் நெறிமுறைக்கு இழுக்கு தரும்’ விஷயம்தான். ஆனால் அந்தப் பெண்ணை நினைத்தால் கண்ணீரல்லவா வருகிறது. ஆபாசத்தில் கண்ணீர் வருமா?

கவிதையில் நவீனம், சங்க காலம் என்றெல்லாம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. கவிதை அம்சம்தான் அதன் தலையாய விதி. பின்நவீனத்துவம் என்றும்; மாந்திரிக எதார்த்தம் என்றும் வேறு பல பெயர்களாலும் அழைக்கப்படுகிற படைப்பில் கவிதை அம்சம் இருந்தால் அது கவிதை தான். பாரதத்தில் பாஞ்சாலி, சபை முன்னிலையில் துகில் உரியப்பட்டபோது, அது துச்சாதனன் மீது கோபத்தைக் கிளறிற்றே தவிர ஆபாசம் தொனிக்கவில்லை. நளாயினி என்ற பத்தினிப் பெண் தனது கற்பினால் சூரியனையே உதிக்காமல் செய்துவிட்டு, வரம்வாங்கி, கணவன் குஷ்டரோகம் நீங்கிய பின்னர் ஐந்து மிருகங்களாக உருமாறி தம்பதிகளாக வாழ்ந்து, அடுத்த ஜென்மத்தில் பாஞ்சாலியாகப் பிறந்து ஐந்து கணவர்களை அடைந்தது பற்றிக் கூற வேண்டுமானால், முன்னதுஅதாவது சூரியனையே உதிக்காமல் செய்தது ஒரு வைதீக நோக்கு இரண்டாவது ஐந்து மிருகங்களாக மாறியது பற்றிச் சொல்வது, அந்தக் காலத்தின் அந்த படைப்பாளி மறைமுகமாக வெளிப்படுத்திய ஒரு பெண்ணின் மவுனமான எதிர்ப்புக் குரல் என்று சொல்ல வேண்டும். பெண்ணின் எதிர்ப்புக் குரல் ஆபாசமா? நால் வருணம் அவசியம் என்பதை நேரடியாகவும் மறைமுகமாகவும் தோன்றச் செய்யும் எழுத்துக்கள் ஆபாசமா இல்லையா? ஆபாசம் என்றால் என்ன? உண்மை அல்லாதது எல்லாமே ஆபாசம். இதுதான் சரி என்று நான் நம்புகிறேன்.’’

தமிழ்க்கவிதைப் பரப்பில் பாரதிக்குப் பிறகு, எழுத்து பாணிக் கவிதைகள், எழுத்துக்குப் பிறகான நவீனபாணிக் கவிதைகள், இப்போது பெண்மொழிக் கவிதைகள், ஈழ மற்றும் புகலிடக் கவிதைகள் என்று பகுக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கவிதைகளில் எதை நீங்கள் முன் நிறுத்துகிறீர்கள்?

‘‘கவிதைகள் எழுதப்பட்ட பிற்பாடு ஒரு வசதிக்காக இதுபோல பகுத்துக் கொள்ளலாம். கவிதை அம்சம் கொண்ட எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.’’

இனி உங்கள் கதைகளுக்கு வருவோம்... நீங்கள் குறிப்பிடும் வைதீக எதிர்ப்பு என்பது உங்கள் படைப்பில் அதிகமிருக்கும் அதே நேரம், சைவ சமயத்தை முன்னிறுத்தும் ஒரு தன்மையும் இருக்கிறது. ஒரு படைப்பாளிக்கு மதம் சார்ந்த பற்று அவசியமா?

‘‘ஒரு சித்தாந்தம் பின்னர் சைவ சமயம் என்ற பெயரால் தன்னை முன்னிறுத்தி இருக்கலாம். பின்னர் அதில் வைதீகமும் கலந்து இருக்கலாம். ஆனால் நான் குறிப்பிடும் அந்த சித்தாந்தம் வைதீக மதம் சார்ந்தது அல்ல. ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி பற்றி எழுதும்போது பின்புலமாக இருக்கும் சிலவற்றைச் சொல்லத்தான் வேண்டும். இந்த தென்னாட்டிற்கே உரிய சிலவற்றிலும் வைதீக சாயல், தெரிகிறது. அதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.’’

உங்கள் மொத்த கதை உலகமும் முத்துக்கருப்பன் என்ற பாத்திரம் வழியே அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தகைய குறியீட்டுத் தன்மை தரும்தாக்கம் ஆழமானதாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்திற்கு முத்துக்கருப்பனைக் குறியீடாகக் கொள்ள முடியுமா? தமிழன் தனது எல்லா அடையாளங்களையும் துறந்து வரும் நிலையில், முத்துக்கருப்பனும் கட்டுடைந்து போகிறான் இல்லையா?

‘‘கட்டுடைந்து போதல் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும். மனிதனின் வீழ்ச்சியை முத்துக்கருப்பனின் வீழ்ச்சியாகவும் எடுத்துக்கொள்ளலாம். எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதே முத்துக்கருப்பனை இன்றைய காலகட்டத்திற்குக் குறியீடாகக் கொள்ள முடியும் என்பதால்தான்.’’

சமீபத்தில் வெளிவந்திருக்கும் ’காளியூட்டு’ நாவல் சுதந்திரப் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது... இத்தனை தாமதமாக அச்சுக்கு வந்தது ஏன்?

‘‘குறிப்பிட்ட எந்த காரணமும் இல்லை. பாதி எழுதி, பின்னர் சில ஆண்டுகள் கழித்து தொடர்ந்து எழுதி முடித்தேன்.’’

தமிழில் விமர்சகர்கள் குறைவாக இருப்பதன் பின்னணி என்ன?

‘‘பூர்வகால மொழிகள் எல்லாவற்றிற்குமே இம்மாதிரிப்பட்ட குறைகள் உண்டு. நவீனத்தில் சீக்கிரமாக உள்புகுந்துவிட முடியாது.’’

முன்றில்’ சிற்றிதழை நீங்கள் ஆரம்பித்த பின்னணி என்ன? அதன் பங்களிப்பாக நீங்கள் கருதியது என்ன? உங்களது இலக்கிய நண்பர்கள் என்று யாரையெல்லாம் சொல்வீர்கள்?

‘‘ஐம்பதுகளின் ஆரம்பத்திலேயே நான் சென்னை வந்து விட்டபோதிலும் இலக்கிய நண்பர்கள் என்று யாரும் இல்லை. புதுமைப்பித்தன், கு.ப.ரா. போன்றோரின் படைப்புகளைப் பதினைந்து வயதிலேயே படித்துக் கொண்டிருந்த போதிலும், சென்னை வந்த பின்னர் க.நா.சு.வைக்கூட சந்திக்கவில்லை. பள்ளியில் படிக்கும்போது நம்பி என்கிற கிருஷ்ண நம்பி ஒருவனைத்தான் சொல்ல முடியும். சென்னையில் பெரிய நூல் நிலையங்கள் எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. அப்போது ‘பிரசண்ட விகடன்’, ‘பொன்னி’, ‘கலைமன்றம்’, ‘சினிமா கதிர்’, ’புதுமை ஆகிய பத்திரிகைகளில் முடிந்த வரை எழுதிவந்தேன். அலுவலக நண்பர்கள் அதிகமில்லை. திரு பக்தவத்சலம் என்னும் நண்பர் ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றச் செயலாளராக இருந்தார். என் அலுவலக நண்பரும் கூட கவிதை பற்றி நான் சொன்ன சில விஷயங்களைப் பட்டிமன்றத்தில் பேசலாமே என்று கூறினார். நான் தயங்க, முதலில் கட்டுரையாக எழுதிப் படிக்கலாம் என்று வற்புறுத்தினார். என்னுடைய முதல் மேடைப்பேச்சு அங்கேதான். அந்தக் கட்டுரைக்கு எதிர்ப்பு ஒன்றும் இல்லை. எனவே தொடர்ந்து இலக்கியக் கட்டுரைகளை அங்கே படித்தேன். அந்தக் கட்டுரைகளையே சிறிது விரிவாக எழுதி ‘பொருளின் பொருள் என்ற நூலாக நண்பர்களின் உதவியோடு வெளியிட்டேன் அதற்கு சிறுபத்திரிகை வாசகர்களிடம் வரவேற்பு இருந்தது. இந்தப் புத்தகத்தைப் பற்றி ஒரு விமர்சனக் கூட்டமும் நடந்தது. அதிலே அசோகமித்திரன், ஞானக்கூத்தன், சா.கந்தசாமி, ஆத்மநாம், இராசகோபால், கலைஞன் மாசிலாமணி போன்றோர் கலந்து கொண்டனர். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் இவர்களில் யாருக்குமே என்னைப் பற்றித் தெரியாது. பின்னர் க.நா.சு. அவர்களும் சென்னைவந்து அந்த புத்தகத்தைப்பற்றி பேசினார். அந்த சமயத்தில் என்னுடைய சிறுகதைகள் நிறைய வெளிவந்து ‘வீடுபேறு’ என்ற தலைப்பில் தொகுதியாகவும் வெளிவந்தது. க.நா.சு. சென்னையிலேயே நிரந்தரமாகத் தங்க ஆரம்பித்தபடியால், சிறுபத்திரிக்கை ஒன்று ஆரம்பிக்கலாம் என்று அப்போது நண்பர்கள் ஆர்வமூட்ட, ‘முன்றில்’ ஆரம்பிக்கப்பட்டது. சிறப்பாசிரியராக க.நா.சு. இருந்தார். அசோகமித்திரன், சா. கந்தசாமி, ஞானக்கூத்தன் ஆகியோரும் நகுலன், வல்லிக்கண்ணன் போன்றோரும் தொடர்ந்து எழுதினர். இருபது இதழ்கள் வரை வந்தது. எதையும் எதிர்பார்க்காதபடியால் எந்த ஏமாற்றமும் இல்லை. ‘முன்றில்’ சிறுபத்திரிகையோடு ‘முன்றில்’ பதிப்பகத்தையும் தொடங்கி சில புத்தகங்களை வெளியிட்டோம். புதிய எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்று ‘முன்றில்’ அறிமுகப்படுத்தி இருக்கிறது.

தொண்ணூறுகளில் ‘முன்றில்’ கருத்தரங்கு சென்னையில் மூன்று நாட்கள் நடந்தது. கிட்டத்தட்ட எல்லா எழுத்தாளர்களும் கலந்து கொண்டனர். பக்கத்து மாநிலங்களிலிருந்தும் வந்திருந்தனர். கவிஞர் பழமலய், நாகார்ஜூனன், சாரு நிவேதிதா, பன்னீர் செல்வம், எஸ் இராமகிருஷ்ணன், கோணங்கி, கோவை ஞானி ஆகியோருடன் காசியபன், லாச.ரா. போன்றோரும் வந்து உரையாற்றினர். இந்த கருத்தரங்கு பற்றி ஒரு தொகுப்பு நூலும் வந்தது. இதை முக்கியமாகச் சொல்ல வேண்டும்.

தருமு சிவராமு என்னும் பிரமிள் தனது கடைசி காலத்தில் ‘முன்றி’லில் எழுதினார். அவருக்கு வேண்டாதவர் யாரோ, அவர்கள் கட்டுரைகளைப் பிரசுரித்து விட்டால் போதும் - மன்னன் கோபத்தில் நிலை கொள்ளாமல் தவிப்பார். ஆனால் மிகச் சிறந்த கவிஞர்.

‘முன்றி’வில் புதிதாக எழுதத் தொடங்கிய சிலர் பின்னால் தீவிர எழுத்தாளர்களாக ஆயினர். அவர்களில் பா. வெங்கடேசன் ஒருவர். இன்னொரு விஷயம் ‘முன்றி’லில் எழுதியவர்கள் எதையும் - அதாவது பணம் எதையும் எதிர்பார்த்தது கிடையாது. ‘முன்றில்’ வெளியீடுகளான சில புத்தகங்களைத் தந்ததுண்டு.

வல்லிக்கண்ணன், நகுலன், மீரா ஆகியோர் வருவதுண்டு. தி.க.சி. அடிக்கடி வருவார் கருத்தரங்கு தவிர இலக்கிய கூட்டங்களையும் மாதம்தோறும் பல்வேறு இடங்களில் ‘முன்றில்’ நடத்தியது. க.நா.சு. இருக்கும்போதும் உலக இலக்கியங்கள் பற்றிக் கூட்டங்கள் நடந்தன. அவர் மறைவிற்குப் பின்னும் பல கூட்டங்கள் அசோகமித்திரன், இராஜதுரை, பேராசிரியர். பஞ்சாஙகம் போன்றோருடன் நடந்தன. இதையெல்லாம் ‘முன்றில்’ பங்களிப்பாகச் சொல்லலாம்.

சிறந்த எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் பக்கத்திலேயே இருந்தபடியால் அவருடைய உதவிகள் - அவர் காலமாவது வரை கிடைத்தது. ஆதிமூலத்தின் பங்கை குறிப்பாகச் சொல்ல வேண்டும். எழுத்தாளர்கள் லதா இராமகிருஷ்ணன், அமரந்தா, க்ருஷாகினி, பெருந்தேவி ஆகியோரும் உதவினர்.

இஞ்சி காய்ந்து சுக்கான ஒரு கவிஞன் வந்து பெற வேண்டியதைப் பெற்றுச் சென்றது உண்டு.’’

இன்றைய இலக்கிய உலகம் என்பது, பெரும்பான்மையானவர்கள், தங்களுடைய படைப்புகளை அல்லது புத்தகங்களை வியாபார ரீதியாக வெற்றிபெறச் செய்யும் விற்பனைப் பிரதிநிதிகளாகச் செயல்படும் அவலநிலையில் கவிழ்ந்து கிடக்கிறது. ஆனால் தகுதியும் எழுத்தில் சாதனையும் இருந்தும், குறைந்த பட்சமாக உங்களை முன்னிறுத்திக் கொள்வதில் கூட எத்தனம் எதுவும் இல்லாமல் அதை காக்கிறீர்கள். ஆரவாரமான இலக்கிய உலகில் உங்களின் இந்தக் குணம் ஆச்சரியமூட்டுகிறது... உங்களின் கூச்ச சுபாவம்தான் இதற்குக் காரணமா?

‘‘மேடைக் கூச்சம் இருந்தது. இப்போது இல்லை. எழுபது வயதிற்குமேல் என்ன கூச்சம் வேண்டிக் கிடக்கிறது. என்னைவிட சிறந்தவர்கள் என்னளவு வசதிகூட இல்லாமல் இருப்பதை நினைக்கும்போது வேறு எந்த எதிர்பார்ப்பும் வேண்டியதில்லை; ஏமாற்றமும் இல்லை.’’

எந்தப் படைப்பாளியிடமும் காணப்படாத - கேள்விப்படாத ஒரு விஷயம் உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன்... உங்களுக்கு ஜோதிடத்தில் ஈடுபாடு உண்டாமே... நிஜம்தானா? இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?

‘‘கன்னிமாராவில் வேண்டிய புத்தகங்கள் கிடைக்காதபோது, கிடைத்த சிலவகைப்பட்ட புத்தகங்களில் ஒன்று ஜோதிடம் அங்கே இருக்கிற ஜோதிடப் புத்தகங்கள் முழுவதும் ஆங்கிலம் படித்து முடிக்கப் பெற்றன. உடனடியாக ஒன்று தெரிந்தது. வேண்டுமென்றே தமிழில் அவசியமில்லாத வார்த்தைகளைப் போட்டு நம்மைக் குழப்பியிருக்கிறார்கள். ஆங்கிலம் எளிமையாக இருந்தது. காலண்டர் இல்லாத காலத்தில் பஞ்சாங்கம்தான் அந்த வேலையைச் செய்தது. ஜோதிடத்தில் தொண்ணூறு சதவிகிதம் வானசாஸ்திரமும், மனோதத்துவ ரீதியில் மனித மனம் போகிற போக்கில் ஒவ்வொரு கிரகத்தின் பலன்களையும் எழுதி வைத்துள்ளனர். இதைப் பற்றி விரிவாக எழுதினால் ஒரு புத்தக அளவிற்கு வரும்.

கலைஞன் மாசிலாமணி அவர்கள் பட்டண வாழ்க்கையை விரிவான அளவில் ஒரு நாவல் உருவத்தில் கொண்டுவர முடியுமா என்று கேட்டிருக்கிறார். முடியுமா என்று பார்க்க வேண்டும்.’’

நேர்காணல்: ஆர்.சி.ஜெயந்தன்

படங்கள் : செழியன்

 
புகைப்படங்கள்




ஆவணப்படம்

முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...





மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved