Girl in a jacket

சோ. தர்மன்

தீராநதி: இதுவரை தமிழில் பதிவாகியுள்ள தலித் இலக்கியங்கள் என்று பறைசாற்றப்படுகின்ற எந்த எழுத்துமே என்னை ஆகர்ஷிக்கவில்லை என்று எழுதி இருக்கிறீர்கள். தலித் கதையாடலை, தலித்தின் தனித்தன்மையை தலித் சமூகச் சித்திரங்களை கலாபூர்வமாக சித்திரித்து சிருஷ்டிக்கும் ஒரு உன்னதக் கலைஞன் இனிமேல்தான் வர வேண்டும் என்று முன்பு ஒருமுறை எழுதி இருந்தீர்கள். நீங்கள் சொல்லும் கலா பூர்வம் என்பதன் அளவீடு என்ன?

சோ.தர்மன்: நீங்கள் கேட்டிருக்கும் கேள்வி ரொம்ப ரொம்ப முக்கியமான கேள்வி. கலாபூர்வமான சிருஷ்டி என்பது என்னவென்றால் கதை எல்லோருக்கும் தெரியும். கதை தெரியாத ஆட்களே கிடையாது. அந்தக் கதையை எழுதுவதற்கும் எல்லோருக்கும் தெரியும். அதைக் கலாபூர்வமாக எழுதுவதற்கு எழுத்தாளனுக்கு மட்டும்தான் தெரியும். அந்த எழுத்தாளன் என்பவன் யார்? முதலில் உதாரணத்திற்கு புதுமைப்பித்தனின் ஒருகதை. அவர் எழுதுகிறார்: “வாய்க்காலில் ஓடிய தண்ணீரில் குழந்தை தன்னுடைய கால்களை முக்கி விளையாடிக் கொண்டிருந்தது. கால்களை முக்கி முக்கி விளையாடியபோது தன் காலில் அணிந்திருந்த வெள்ளிக் கொலுசு சூர்ய ஒளி பட்டு மின்னியது. இப்போது குழந்தை கால்களை தண்ணீருக்குள்ளேயே வைத்துக் கொண்டது.” இந்த மூன்று வரிகளையும் எழுதிவிட்டாரா? அப்புறம் மேற்கொண்டு அடுத்த வரியை எழுதுகிறார். “அப்புறம் மேற்கொண்டு அடுத்த வரியை எழுதுகிறார்.” “அப்புறம் என்ன? ஆணானப்பட்ட சூர்யபகவான் குழந்தையின் கால் தரிசனத்திற்காக காத்திருந்தார்.” இதுதான் கலாபூர்வம்.

இன்றைக்கு இந்த மாதிரி கலாபூர்வமான எழுத்தில் நம்பர் ஒன் யார் என்றால் மா.அரங்கநாதன். தமிழ்ச் சிறுகதையில் சமகால சாதனையாளர் யாரென்றால் மா. அரங்கநாதனைதான் நான் சொல்வேன். இன்றைக்குப் பேசுகிறார்கள் தலித் கதை, தலித் கதை என்று… எத்தனை தலித் கதைகளை மா.அரங்கநாதன் எழுதி இருக்கிறார் தெரியுமா? தலித் எப்படி உருவானான் என்று எழுதி இருக்கிறார். தொழில் ரீதியாக எப்படி ஜாதியைப் பிரித்தார்கள் என்று எழுதி இருக்கிறார். அவருடைய ‘உவரி’ என்று ஒரு கதை. டூர் வருகின்ற பஸ் ஒன்று உவரி என்ற கிராமத்தின் பக்கத்தில் வரும்போது பிரேக் டவுண் ஆகி விடுகிறது. அப்போது ஒரு தம்பதி பச்சைக் குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு வந்து “பக்கத்தில் கடை எங்கிருக்குங்க… குழந்தை அழுகிறது. பால் வாங்கிக் கொடுக்க வேண்டும்” என்று எதிரில் வருகின்ற ஒரு விவசாயிடம் கேட்கிறார்கள்.

நல்ல மதிய நேரம். உடனே அவர் சொல்கிறார். “இந்த வெயிலிலாம்மா போகப் போறீங்க. பாவம் அந்தக் குழந்தை என்ன பாடுபடும். இந்தாங்க இந்தத் துண்டை போத்திக்கிடுங்க. நான் இந்த மரத்தடியில்தான் நிற்பேன் பிறகு வரும்போது துண்டைக் கொடுங்க” என்று கொடுக்கிறார். இதுவரை கதை. அப்போது இருவரும் போன பின்பு விவசாயி சொல்வதாக எழுதுகிறார். “இந்த ஊர்லதான் முதன் முதல்லா சாலமன் வந்து இறங்கினானாம். இந்த ஊர்ல இறங்காம, வேற எந்த ஊர்ல இறங்குவான்” என்று எழுதுகிறார். இந்த இரண்டு வரியில் சாலமன் பற்றிய பெரிய ஹிஸ்டரியை அப்படியே கொண்டு வந்து இறக்குகிறார் இல்லையா, இதான் கலாபூர்வம். அதற்குப் பிறகும் கதை நமக்குள் ஓடிக்கொண்டே இருக்கும்.

அதேபோல “சிலுவையில் தொங்கிய ஏசு கிறிஸ்துவை வழிபட்டுக் கொண்டிருந்த முத்துக்கருப்பனை ஜன்னல் வழியாக ஃபாதர் பார்த்தார். நேரடியாக போய் “யாரப்பா நீ” என்றார். முத்துக்கருப்பன் சொன்னான்: “சாமி ஸ்தோத்திரம். நான் சுசீந்திரன் தானுமலையானை தரிசித்துக் கொண்டிருந்தேன்.

தானுமலையானை தரிசிக்கும்போது அங்கு எனக்கு கர்த்தர் தரிசனம் தந்தார். நேரடியாக கோத்தாறு வந்துவிட்டேன்” என்று சொன்னான். அப்போது ஃபாதர் சொன்னார்: “இனிமேல் நீ வழிபட வேண்டியது தானுமலையானை அல்ல; கர்த்தரைத்தான்” என்றார்.

முத்துக்கருப்பன் சொன்னான்: “ஃபாதர் நான் இப்போது கர்த்தரை வழிபட்டுக் கொண்டிருக்கும்போது தானுமலையான் அல்லவா தெரிகிறார்” என்று எழுதுகிறார். இது கலை. இது மாதிரி நான் முயற்சி பண்ணி இருக்கிறேன். அதில் நான் தோற்று இருக்கலாம். போர் ஹே எழுதுகிறார். புலி, கடவுளிடம் போய் சாகா வரம் கேட்டது கடவுள் சொன்னார்: முடிந்தால் கவி தாந்தேயிடம் போய்க் கேள்: நீ கேட்கும் வரம் சாத்தியமாகலாம் என்கிறார். புலி தன் கம்பீரமான நடையை கவி தாந்தேவிடம் காட்டி விட்டு சுருண்டு படுத்துக் கொண்டது. கவி தாந்தே புலியின் கம்பீரத்தையும் அதன் வரிக் கோடுகளையும் தன்னுடைய கவிதையின் ஒரு வரியில் பதிவு செய்தார். புலி சாகா வரம் பெற்றது. என்ன சொல்கிறார். கவிதைக்குதான் சாகவரம் உண்டென்கிறார். இதான் கலாபூர்வம் என்பது.

 
முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...

மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved