முன்றில்
1988 - 1996
- ம.பிரகாஷ்
தமிழ்ச் சூழலில் அச்சு ஊடகத்தின் வருகைக்குப் பின் பக்திரிகைகள் உருப்பெறுகின்றன. இதன் ஊடாக ஒருவித வாசிப்புப் பழக்கம் உருவானது. இதனையே, இயக்கம் சார்ந்தவர்கள் வெவ்வேறு வகையில் பயன்படுத்தினர். அதாவது, தேசிய இயக்கம் சுதந்திரம் பெற, திரவிட இயக்கம் பகுத்தறிவு பெற, பொதுவுடைமை இயக்கம் வர்க்க வேறுபாடுகளைக் களைவதற்கும் அச்சு ஊடகத்தினைப் பயன்படுத்தின. எனவே, தங்களுடைய எண்ணங்களை அச்சு ஊடகத்தின் ஊடாக மக்களிடையே பரவச் செய்தனர். இத்தகைய சூழலில் சமய நிறுவனங்களும் தங்களுடைய பங்கினை விட்டுக் கொடுக்கவில்லை. இத்தகைய செயல்பாடுகள்வழி ஒவ்வொரு இதழ்களின் தோற்றத்தினைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதேபோல், முன்றில் இதழும் தொடங்கப்பட்டதன் நோக்கம், செயல்பட்டவிதம், உள்ளடக்கம், தொகுக்கப்பட்ட விஷயம் என இவை குறித்து இக்கட்டுரை ஆராய்கின்றது. சிறுபத்திரிகைகளின் வரிசையில் முன்றில் இதழுக்கும் ஓர் இடம் உண்டு. இவ்விதழ்களின் அமைப்பினைப் பலதரப்பட்ட வாசிப்பின் ஊடாக, கவிதைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புச் சிறுகதைகள், மதிப்புரைகள், விமர்ச்னக் கட்டுரைகள், தலையங்கங்கள், அக்கம்பக்கம், பேட்டிகள் எனப் பிரித்து அறியலாம்.
முன்றிலில் கவிதை எழுதியவர்களாகக் க.நா.சு., நகுலன், பிரமிள், ஞானகூத்தன், பழமலய், ஜெயமோகன், பாவண்ணன், பிரம்மராஜன், நீல. பத்மநாபன், ரா. விஸ்வநாதன், தேவதேவன், சமயவேல், நீலமணி, கலாப்ரியா, பா. வெங்கடேசன், ஆர். ராசகோபால், பொதிகைவேற்பன், நந்தலாலா, ஷங்கன்னா, காயிபன், கோலாகல சீனிவாஸ், நஞ்சுண்டேசுவரன், மேட்டுப் பாளையம் நிஷா, திலகவதி, வசந்தி சுப்ரமணியன், யூமாவாசுகி, பாரதிராமன், ரிஷி, புனிதன், வி.நம்பி, தேவரசிகன், மயன், குடியரசு, கனகதாரா, சுந்தர்ஜி, திருத்துறைப்பூண்டி மோனாலிசா, விஜெய்ஜி, ஆசான், அம்சகோபால், வண்ணைவளவன், கௌசிக், மானுடன், கோபிகிருஷ்ணன், கவிதாராஜன், சின்னக்கபாலி, விக்ரமாதித்யன், நீலமணி, கல்யாணராமன் ஆகியோரைக் கூறலாம்.
புனிதன் கவிதை வரிகளில் வரதட்சணையாக என்னவெல்லாமோ கேட்டார்கள். ஆனால், தற்போது “ஒரு மாறுதலுக்கு/ ஏன் ‘O’ பாசிட்டிவ் ரத்தம், ஒரு KIDNEYன்னு / கேட்டாக்க என்னவாம்/ தரப்போறது – பெண் வீட்டார்தானே!” (சு.சண்முகசுந்தரம் (தொ.ஆ.): 2010: 7) என்ற கவிதையின் மூலமாக ஆண்வீட்டாரின் மனநிலையை நன்கு உணர முடிகிறது.
மேலும், க.நா.சு.வின் ‘உயில்’ கவிதை மிகவும் ஆழமான கருத்துக்களைக் கொண்டுள்ளது. தன்னுடைய அனைத்துப் பொருட்களையும் மற்றவர்களுக்குத் தனித்தனியாகப் பிரித்து இது இன்னாருக்கு எனக் கொடுக்கிறார். பெட்டியில் உள்ள கிழிசல் காகிதங்கள் முதற்கொண்டு, தன்னுடைய பெயர் (க.நா.சு.) வரை யாருக்குத் தேவையோ அவர்கள் பயன்படுத்திக் கொண்டு முன்னேறட்டும் என்று கூறுகிறார். வாழ்வின் பற்றுகளையெல்லாம் துறந்த ஒருவரினால் மட்டுமே இவ்வளவு ஆழமான ஒரு படைப்பினைத் தரமுடியும் என்பதற்குக் க.நா.சு. ஒரு சான்றாகும்.
முன்றிலில் மொழிபெயர்ப்புக் கவிதை எழுதியவர்களாக, காதம்பரி, அமுதன், அத்தன், நஞ்சுண்டேஸ்வரன், ப்ரமிள், பிரம்மராஜன், தம்பி சீனிவாசன், திலகவதி, நிர்மால்யா, மே.சு. இராமசுவாமி, வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை ஆகியோரைக் கூறலாம். இவர்களுடைய படைப்புகள் ஆங்கிலம், ஜப்பான், உருது, ஜெர்மன், ஸ்பானிஸ், குஜராத்தி, பஞ்சாபி, மலையாளம், சீனம் எனப் பல்வேறு மொழிகளில் இருந்து ஆங்கிலம் சீனம் எனப் பல்வேறு மொழிகளில் இருந்து ஆங்கிலம் வழியாகவும் நேரடியாகவும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.
வட்டம் என்னும் மொழிபெயர்ப்புக் கவிதையில், “சீதையைப் போல / என் வாழ்க்கையும் / அதன் விதியை / எதிர் நோக்கி நிற்கிறது / வாரி வாரி வழங்கும் இராமன் / எப்போது திரும்புவான் என / என்னால் நிச்சயமாகக் கூற முடியாது / ஏதாவது ஒரு ராவணனாவது / இந்த வழி வந்திருக்க வேண்டும்” (சு.சண்முக சுந்தரம் (தொ.ஆ.): 2010 : 128) என்று உருது கவிதையில் கூட இராமன் பற்றிய குறிப்பு காணப்படுவது சிந்திக்க வேண்டிய இடமாகும். இதனைக் கவிஞர் அமுதன் எடுத்துக்காட்டுகிறார். மேலும், ‘மழை’ என்னும் ஸ்பானிஸ் கவிதையில் இயற்கை நிகழ்வுகளைக் கூறுககையில், “மேகங்கள் கட்டித் தழுவுகையில் / ஒளிச்சிதறல் / அவற்றின் ஆனந்தக் / கண்ணீர் தான் மழையோ?” (சு.சண்முகசுந்தரம் (தொ.ஆ.) : 2010 : 131) என்று தனிமையில் உள்ள மனிதன் எண்ணித் துயரம் அடைவதை உள் உணர்வோடு கவிஞர் காதம்பரி எடுத்துரைக்கிறார்.
“மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்தவர் பஞ்சாபி மொழிக் கவிஞரான அவ்தார் சிங் பாஷ் (Avtar Sing Paash). இவரது கவிதைகளை இவற்றை ஆங்கிலமொழி வழித் தமிழில் வ.கீதாவும், எஸ். வி. ராஜதுரையும் வழங்கியுள்ளனர்.” (சு.சண்முகசுந்தரம் (தொ.ஆ.) : 2010 : 152) இப்படைப்பில் கனவு காண நெஞ்சுரம் வேண்டுமென்றும், தூக்கம் இழந்து இருக்க கவலைப்படாத நிலையும் கவிஞரின் உணர்வாக மொழிபெயர்த்துள்ளனர்.
முன்றிலில் சிறுகதை எழுதியவர்களாக, அசோகமித்திரன், மா. அரங்கநாதன், நகுலன், தமிழவன், கோபிகிருஷ்ணன், உதயஷங்கர், பா.வெங்கடேசன், ராம்ஜீ ஸ்வாமிநாதன், பாவண்ணன், மாயன், சுரேஷ்குமார் இந்திரஜித், அநாமிகா, சமயவேல், கோணங்கி, நாகார்ஜுனன், எஸ். ராமகிருஷ்ணன், ஜி. காசிராஜன், பஞ்சாட்சரம், செல்வராஜ், இரா. முருகன், பெருந்தேவி, பா. விசாலம் ஆகியோரைக் கூறலாம்.
‘ரகஸிய ஆண்கள்’ சிறுகதையில் வறுமையின் நிலையை உணர்ந்த உணர்வுகளை எடுத்துக் கூறுவதுபோல் அமைந்துள்ளது. கதையின் போக்கு மிகவும் விறுவிறுப்பாகவும் கடுமையான வறட்சி, பஞ்சம் போன்றவற்றால் மக்கள் பாதித்த நிலையினையும் நம் கண் முன்னே நிறுத்துகிறார். இதில், “இரட்டைப் பெண்களான பெரிய பாண்டியம்மாவும், சின்னப் பாண்டியம்மாவும் உடல் நலிவுற்று சோர்ந்து கிடந்தனர். மூத்தவள் சின்னப் பாண்டியம்மாளின் வற்றிய மார்புகளைப் பார்த்தபடியே ‘நான் செத்து போகப் போறனடி, உன்னைய விட்டுட்டு’ எனச் சப்தமிட்டுக் கொண்டிருந்தாள். சின்னவளுக்குப் பேச்சு கொள்ளவில்லை. இருவருமே சூடான சோளக்கஞ்சிக்கு ஆசை கொண்டிருந்தனர். சின்னப் பாண்டியம்மாள் அக்காளிடம் தோன்றிய முகவிகாரங்களைக் கண்டு அஞ்சியபடியே உறங்கினாள்” (சு.சண்முகசுந்தரம் (தொ.ஆ.) : 2010 : 278). மேலும், “தெருவில் சப்தத்தை கொட்டியபடியே மேய்ந்து கொண்டிருந்த கோழிகள் உணவாகிப் போனதால் நிசப்தம் மட்டுமே நிரம்பியிருந்தது” (சு.சண்முகசுந்தரம் (தொ.ஆ.) : 2010 : 279) என்றும், “தானியங்களின் உரசல் சப்தம் கேட்டு சுல்பொந்துகளிலும் கிணற்று உள்அடுக்குகளிலும் மறைந்திருந்த பறவைகள் விழிப்புற்று படைபடையாக கடைசி கூட்டு முன் இறங்கின” (சு. சண்முகசுந்தரம் (தொ.ஆ.) : 2010 : 279) என்றும், “எறும்புப் புற்றிலிருந்த தானியம் தேடி கரிசல்வெளியைத் தோண்டிக் கலைத்தனர் ஆண்கள்” (சு.சண்முகசுந்தரம் (தொ.ஆ.) : 2010 : 280) என்றும் வறுமையின் நிலையை எஸ். ராமகிருஷ்ணன் எடுத்துரைக்கிறார். சீனக்கதை ஒன்றினைக் க.நா.சுப்பிரமண்யம் ‘கிழவனும் மரமும்’ என்ற தலைப்பில் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து ‘வெகுமதி’ என்ற ஒரியாமொழிச் சிறுகதை தேவகி குருநான் மூலமாக ஆங்கிலம் வழித் தமிழில் வந்தது.
ஒரியாமொழிச் சிறுகதையை எழுதியவர் பவதிசரண் பாணிக்ராகி. இவர் ஒரியா மொழியின் இலக்கியக் கர்த்தாக்களுள் மிகவும் குறிப்பிடத்தக்கவர். முற்போக்கு எழுத்தாளர்களின் முன்னோடி எனவும் கருதப்படுபவர். துரதிருஷ்டவசமாக அந்த அற்புத எழுத்தாளரை அக்காலத்திலேயே இழக்க வேண்டியதாயிற்று. இந்தச் சிறுகதை (ஷிகார்) மிருணாள் சென்னால் ‘ம்ருகாயா’ என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டது. அக்கதையானது “கினுவா என்ற ஒரு வேட்டைக்காரன், அவன் உணர்ச்சிவசப்படாதவனாய் இருந்தான். அக்காட்டில் உள்ள மிருகங்களைத் தனது வலிமையினால் வேட்டையாடி டெபுடி கமிஷனருக்குத் தர பதிலுக்கு அவர் வெகுமதி அளிப்பார். அதேபோல் ஒருநாள் கோவிந்த சர்தார் என்பவன் கினுவா மனைவியை அடைய முயற்சித்தபோது, கினுவா அவனைக் கொன்றான். ஊரில் உள்ள மக்கள் பெரும்பாலானோர் காட்டில் உள்ள புலி, சிங்கம் இவற்றைக் கண்டு அஞ்சுவார்களோ இல்லையோ கோவிந்த சர்தாரைக் கண்டு அஞ்சுவார்கள். அத்தகைய கொடுமைக்காரன். அவன் செல்வந்தராக இருந்தமையால் அவனுக்குப் பின் அரசு இருந்தது. இதனால், அவரைக் கொன்று கமிஷனரிடம் கொடுக்க, அவர்கள் கினுவாவைக் கைது செய்தனர். ஆனால், இதேபோல் வேறொருவனைக் கொன்ற நபருக்கு வெகுமதி அளித்துப் பாராட்டினார்கள். வெகுமதி தருவார்கள் என்று எண்ணிய கினுவாவிற்கு அங்கு கைது நடவடிக்கை புரியவில்லை. தூககு தண்டனை என்னவென்று தெரியாதவனுக்கு, வெகுமதி அளிப்பதாகக் கூறிக் கறுப்புத் துணியால் முகத்தை மூடினார்கள். இதன் பின் வெழுமதி தந்தால் அதனைத் தன் மனைவியிடம் காட்டி அதில் கூடுகட்டியும் நன்கு விவசாயம் செய்தும் செழிப்பாக வாழலாம் என்று எண்ணிய அவனுக்குத் ‘திடீரென்று’ ஏதோ ஒன்று அவன் கழுத்தைத் தாக்கியது” (சு.சண்முகசுந்தரம் (தொ.ஆ.): 2010 : 336) என்று கூறிக் கதையை முடிக்கிறார். எவ்வளவு நுட்பமான ஒரு படைப்பினை மிக சாதாரணமாகக் கூறியுள்ளார். இதன் மையத்தை உற்றுநோக்கும்போது வர்க்க வேறுபாட்டினைக் கதையில் உணர முடிகிறது.
முன்றிலில் மதிப்புரைகள் எழுதியவர்களாக நகுலன், மா.அரங்கநாதன், க.நா.சு., ப. சுப்பிரமணியன், லதா. ராமகிருஷ்ணன், ராம்ஜி ஸ்வாமிநாதன், சிவனொளிபாதம், தேவகி குருநாத், வல்லிக்கண்ணன், ஏ.எஸ். பன்னீர்செல்வன், இரா. முருகன், ஷங்கன்னா, பாஸ்கரன், ருத்ரன், கோபி கிருஷ்ணன், முபீன், த. பழமலய், நீல. பத்மநாபன், மோனிகா ஆகியோர் ஆவார். இவர்களின் பல்வேறு தரப்பட்ட வாசிப்பின் ஊடாக உருவான மதிப்புரைகள் அனைத்துமே சிந்தனைக்குரியதாகும்.
முன்றிலில் விமர்சனக் கட்டுரைகள் எழுதியவர்களாக, க.நா.சு., அசோகமித்திரன், அ.அந்தோனிகுருசு, விட்டல்ராவ், வல்லிக்கண்ணன், பிரகாஷ், ராஜன், ராம்டி.பிரமிள், பிரமிள், ஞானி, கோபிகிருஷ்ணன், சா.கந்தசாமி, இந்திரன், அருண்மொழி, காதம்பரி, நகுலன் ரவிக்குமார், மா. அரங்கநாதன், சிவனொளிபாதம், அக்னிபுத்திரன், சுஜாதா, சாருநிவேதிதா, தமிழவன், லதா. ராமகிருஷ்ணன், நீல. பத்மநாபன், காசியப்பன் ஆகியோரைக் கூறலாம்.
‘வறுமை ஒழியட்டும்’ விமர்சனக் கட்டுரையில் க.நா.சு. குறிப்பிடும்போது, “வறுமையை ஒழிக்க அரசியல்வாதிகள் திட்டங்கள் தீட்டுகிறார்கள். தங்கள் வறுமையை ஒழிக்கவே அவர்களுக்குப் பொழுது போதுவதில்லை. பிறர் வறுமையை எப்படி, எங்கே ஒழிக்கப் போகிறார்கள்?” (சு.சண்முகசுந்தரம் (தொ.ஆ.) : 2010 : 409) என்று கேட்கிறார். மேலும் “வறுமை வறுமை என்று போலிக்கண்ணீர் வடிக்காதீர்கள். வறுமை என்பது உங்கள் மனத்தில்தான் இருக்கிறது. இலக்கியசிரியனிடம் சாப்பாட்டுக்கு இல்லாமல் இருக்கலாம் – மனத்தில் வறுமையில்லை. உலகத்தின் இன்பங்களைக் காண்பதிலும் அவனுக்கு வறுமையில்லை” என்றும், “வறுமை வறுமை என்று சொல்வது உங்கள் வறுமையைத்தான் காட்டுகிறது. நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க முடியாத வறுமை, படித்ததில் நல்லது எது என்று தெரிந்து கொள்ள முடியாத மன வறுமை, புஸ்தகங்களைத் தேடிப்பிடித்து அதில் ஆனந்தம் காண இயலாத வறுமை, சிந்தனை வறுமை, செயல் வறுமை, நூல்கள் மூலம் சிந்திக்கும் சக்தியை வளர்த்துக் கொள்ள இயலாத வறுமை. சிந்திக்கும் சக்தியை உங்களுக்குத் தரக்கூடிய நூல்களைத் தெரிந்து கொள்ள முடியாத வறுமை” (சு.சண்முகசுந்தரம் (தொ.ஆ.) : 2010 : 410) என்று கூறுகிறார். இதன் மூலம் மக்கள் நல்ல நூல்களைப் பயின்று தங்களுடைய அறிவினை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கூறுகிறார்.
க.நா.சு.வும், அசோகமித்திரனும் தலையங்கங்களில் தத்தம் கருத்தினைப் பதிவு செய்துள்ளனர். அவற்றில் சிறுபத்திரிகைகள் பற்றிக் க.நா.சு.கூறும்போது, "இலக்கியத்துக்காகப் பாடுபட நினைக்கும் ஒரு சிறுபத்திரிகை கூடியவரை கோஷ்டி மனப்பான்மைக்கு இடம் தரக்கூடாது. ஒரு பெரிய மனித brain washing-குக்கு இடம் தரக்கூடாது. போலி அறிவுத்தனத்துக்கு இடம் தரக்கூடாது. தவறான அர்த்தத்தில் ஸஹிருதயர்களைத் தேடிப் போகக்கூடாது. ஆசிரியருக்கு ஒவ்வாத, உடன்பாடில்லாத கருத்துக்களும் ஒரு பத்திரிகையில் இடம்பெற வேண்டும். அதுதான் இலக்கிய சேவை. மற்றதெல்லாம் சுயலாபம் முயற்சிகள்தான். கம்யூனிசம் பேசிக்கொண்டே அதை முதலாக வைத்துப் பணம் பண்ணுவதற்குச் சிலர் முயல்வது போலத்தான் இதுவும்” (சு.சண்முகசுந்தரம் (தொ.ஆ.) : 2010 : 595) என்று தன்னுடைய சிறுபத்திரிகை சார்ந்த புரிதல்களை விளக்கியுள்ளார். மேலும், இன்றைய இலக்கியச்சூழல் பற்றியும் குறிப்பிடுகிறார். அதற்கு அடுத்தபடியாகக் க.நா.சு.வின் நினைவு மலராக முன்றில் இதழ் வெளிவருகிறது.
மற்றொரு தலையங்கத்தில் “நீல.பத்மநாபன் படைத்த இலக்கியப் படைப்பு தன்னைப்போல் உண்டென்று கூறி அவருடைய கை முறிக்கப்பட்டிருந்த விஷயத்தைப் பற்றி எழுதியிருந்தனர். இதேபோல் அனைவரும் கூறினால் எப்படி இலக்கியவாதியால் வாழ, எழுத முடியும்? அத்தகைய வன்முறையில் ஈடுபட்டவருக்கு தண்டனை என்று கூறுகையில், இலக்கிய சம்பந்தமான சில புத்தகங்களைக் கொடுத்து படிக்கச் சொல்லி வற்புறுத்தலாம்” (சு.சண்முகசுந்தரம் (தொ.ஆ.) : 2010 : 606) என்று கூறித் தன்னை எதிர்த்தவனுக்கும் நல்அறிவினைக் கட்டாய என்று கூறித் தன்னை எதிர்த்தவனுக்கும் நல்அறிவினைக் கட்டாயமாகப் புகட்ட வேண்டுமென எண்ணியதை அறிய முடிகிறது. இதழ் ஒன்பதில் க.நா.சு. நினைவாகக் கூறும்போது “படைப்பிலக்கியங்களை சிறந்த முறையில் கொண்டு வருவதே க.நா.சு.வுக்கு சிறந்த அஞ்சலி. அதைச் செய்ய முற்பட்டிருக்கிறோம். அவருடைய படைப்புகள் பல இன்னும் வெளியாகவில்லை என்பது தெரிந்ததே. இது பதிப்பாளர்கள் யாவரும் கவனிக்க வேண்டிய விஷயம்” (சு. சண்முகசுந்தரம் (தொ.ஆ.) : 2010 : 608) என்கிறார். இப்பின்புலத்தில் க.நா.சு.வின் படைப்புகளைத் தொகுத்து வெளியிட்டுவரும் காவ்யா சண்முக சுந்தரம் அவர்கள் பாராட்டுதலுக்குரியவர்.
முன்றில் செய்திகள் என்ற பகுதியில் (இதழ்-13) பகுத்தறிவு சார்ந்த கருத்துகள் சிறப்பானவை. அவை, “உக்ர நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் போன்ற உயர்சாதிக் கடவுளெல்லாம் திடீர் திடீரென பூமியைத் துளைத்துக் கொண்டு எழும்பி வருவதைப் பார்க்கும்போது – சமீபத்தில் மறைமலை நகரில் நடந்த – ஏன் நம்முடைய சுடலை மாடசாமியும் மாரியம்மனும் ஐயனாரப்பனும் தோன்றவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. மூன்று மாதத்திற்கு முன்னரே இப்படி தோன்றப் போவதாக லட்சுமி நரசிம்மர் அந்நகரவாசிக்கு தெரிவித்திருக்கிறார். மூன்று மாதம் என்ன கணக்கு? சிலை செய்ய வேண்டாமா உடனே கிடைத்து விடுமா என்ன?” (சு.சண்முகசுந்தரம் (தொ.ஆ.) : 2010 : 625) என்று கூறி உண்மைத் தன்மையை மக்களுக்கு விளக்குகின்றனர்.
செ. யோநாதன், விட்டல்ராவ், ஆர். மகாதேவன், மாயன் தாமோதரன், வல்லிக்கண்ணன், ஐயன், சிவனொளிபாதம் முதலியோர் அக்கம் பக்கம் பகுதியில் எழுதியவர்களாவார். இப்பகுதியில் நூல்களின் அறிமுகம், பாராட்டு விழாவில் நடந்த நிகழ்வுகள், மறுபதிப்பு நூல்கள் தொடர்பான தகவல்களும், மலிவு விலை நூல்கள் இவை என்ற செய்தியும் வெளியாகியுள்ளன. விருது வழங்கும் விழாவில் நடந்த நிகழ்வைச் செ.யோகநாதன் கூறும்போது, “வள்ளுவர் திருநாளன்று சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்குவது, தமிழ் வளர்ச்சித் துறையினரின் வழக்கம். இம்முறை அரசியல்வாதிகள், இலக்கிய மேடைகளில் இல்லை. சிலர் விருதுகள் பெறும்போது, காலில் விழுந்து வணங்குவது வழக்கம். சில இலக்கிய வேங்கைகள் இன்னும் சில பரிசுகளுக்கு அச்சாரமாகச் சாஷ்டாங்கமாக விழுந்ததும், பெரிய பரிசுகள் பெற்றதும் இலக்கிய வரலாறு. ஆனால், பல்கலைக்கழக வேந்தர்கள் கவர்னரின் காலில் விழுந்ததை ஜீரணிக்க முடியவில்லை. வள்ளுவர் திருநாளன்றும் இப்படிப் பலர் காலில் விழுந்தும் திரு. வி.க.விருது, பாவேந்தர் விருது, அண்ணாவிருது என்பவை இன்னும் யாருக்கும் வழங்கப்படாமல் இருக்கின்றன அல்லவா”? (சு.சண்முகசுந்தரம் (தொ.ஆ.) : 2010 : 646) என்று எடுத்துக் கூறுகிறார். இதுபோன்ற நிகழ்வுகளினால் உண்மைத்தன்மையை எழுத்தாளன் இழக்க வேண்டிய நிலையும், சரியான அளவில் இலக்கியம் உருவாக இடமில்லாமலும் போகக்கூடும் என்ற செய்தியை அறிய முடிகிறது.
நீல.பத்மநாபனிடம் ஒரு கேள்வி – பதிலும், கவிகள் உலகை மாற்ற இயலுமா என்ற வானொலி உரையாடலும், நகுலனிடம் ஒரு வானொலிப் பேட்டி என்ற மூன்று பேட்டிகள் இடம் பெற்றுள்ளன. முன்றில் ஆசிரியர் மா.அரங்கநாதன், இதில் சிறப்பாசிரியராகக் க.நா.சு.வும், அசோகமித்திரனும் இருந்துள்ளனர். இதழின் காலம் 1988 முதல் 1996 வரை 9 ஆண்டுகள். வெளிவந்த மொத்த இதழ்களின் எண்ணிக்கை 19. இவற்றில் ஏறக்குறைய 108 கவிதைகளும், 21 மொழிபெயர்ப்புக் கவிதைகளும், 32 சிறுகதைகளும், 74 விமர்சனக் கட்டுரைகளும், 3 பேட்டிகளும், 12 தலையங்களும், 13 சிறுசெய்திகளும் இடம் பெற்றுள்ளன. முன்றில் இதழுக்கு இலக்கியக் கூட்டங்களும், மூன்று நாள் கருத்தரங்குகளும் நடந்து இதழ் தொடர்பான பல செய்திகள் விவாதிக்கப்பட்டுள்ளன. க.நா.சு. கையெழுத்துப் போட்ட நோட்டுப்புத்தகங்களை அவரது துணைவியார் உதவியுடன் பெற்று முன்றில் இதழ் பயன்படுத்தியதுடன் விருட்சம், கவிதாசரண் போன்ற பத்திரிகைகளும் அந்தக் கையெழுத்துப் பிரதியைப் பயன்படுத்திக் கொண்டன. இவ்விதழின் நோக்கத்தினைப் பின்வருமாறு அடையாளப் படுத்தலாம்.
நவீனத்துவத்தை முன்னிலைப்படுத்தும் நோக்கில் உருவான இதழ் முன்றில். கலை, இலக்கியம் என்று இருந்தாலும் தமிழ் – சைவம் – திராவிடம் இதனை முன்னெடுப்பதாக இருந்தது. தமிழ் நவீன இலக்கிய விமர்சன வளர்ச்சியை நாம் தெரிந்து கொள்ள உதவியாக முன்றில் இதழ் தொகுக்கப்பட்டது. இதில் வியாபார நோக்கம் இருப்பதாகக் கூறமுடியாது. ஏனெனில், முன்றில் இதழே சரியான அளவு விற்பனை இல்லை. தொகுப்பு இதழை வாங்கிப் படிக்க, விமர்சனம் செய்ய வேண்டுவோர் உபயோகத்திற்காகத்தான் பயன்படுகிறது. இந்தப் பின்புலத்தில்தான் முன்றில் இதழ்த் தொகுப்பைக் காவ்யா சண்முக சுந்தரம் தொகுத்து படைப்பாளிக்கும் வாசகனுக்கும் பதிப்பாளருக்கும் இடையே ஓர் உறவை ஏற்படுத்த முயன்றுள்ளார்.
- இதழ்களின் தொடக்கம் என்பது ஏதாவது ஒரு கட்டத்தில் முடிவு / நின்றுபோகும்போது, அதனைப் பின்வரும் சந்ததியினர் அறிந்துகொள்ள தொகுப்பு பயன்படுகிறது.
- மூலப்பிரதியில் உள்ள அனைத்துப் பகுதிகளும் இதழ்த் தொகுப்பில் உள்ளன.
- விளம்பரம் இல்லாமல் முன்றில் இதழ் வெளிவந்துள்ளது.
- ‘வரலாற்று உண்மைகளை உள்நோக்கத்தோடு மறுக்கும் சிலரைத்தான் அவர்கள் யாராக இருந்தாலும் முன்றில் சுட்டிக்காட்டிவிடும்’ என்று கூறுவதிலிருந்து இதழின் தன்மையை ஒருவாறு உணர முடிகிறது.
- நவீன தமிழிலக்கிய ஆக்கங்களுக்குச் சீரிய தளத்தையும் தந்துள்ளது. மேலும் நவீனம் தொடர்பான படைப்புகளை வெளிக்கொணர பல்வேறு இதழ்கள் உருவாவதற்கு முன்றிலும் ஒரு காரணம் என்பதனை யாரும் மறுக்க முடியாது.
துணைநூற்பட்டியல்
1. அரசு. வீ., சிறுபத்திரிகை அரசியல், பரிசல் வெளியீடு, சென்னை, 2006.
2. சண்முகசுந்தரம். சு., முன்றில் இதழ்த்தொகுப்பு, காவ்யா வெளியீடு, சென்னை, 2010.
3. சோமலே, தமிழ் இதழ்கள், பதிப்புத்துறை, சென்னை, 1975.