Girl in a jacket

ஏறு தழுவுதல்

எர்னெஸ்ட் ஹெமங்வேயின் நாவலில் – கதைகளில், மாட்டுச் சண்டை பற்றி நிறைய இருப்பதை கவனித்திருக்கலாம். அவரே, அந்த விளையாட்டில் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டிருக்கிறார். ஸ்பெயின் நாட்டு மேட்டடார் – டாரிடார் (Matador – Torydor) வீரர்கள், அந்த விளையாட்டில் பலகாலம் பயிற்சி பெறுகின்றனர். சண்டைமாடுகள் அதற்கென வளர்க்கப்படுவது போல், அந்த வீரர்களும் தயார்ப்படுத்தப்படுகின்றனர். மாடுகள் பாய்ந்து வரும் திசையைக் கணக்கிட்டு எதிராகத் திரும்பி பலமுறை அதை களைப்படையச் செய்து வெற்றி பெறுவர். கூரிய கத்தியால் கடைசியில் சோர்ந்து போன, அந்த மாட்டைக் குத்தியும் கொல்வதுண்டு. மாடு வெற்றி பெற்றுவிட்டால், அது வேறு கதை. அவ்வாறு மாடு கொல்லப்படுவது விளையாட்டில் அனுமதிக்கப்பட்ட விதிகளில் ஒன்று. மாடு ஜெயித்து விட்டாலும் சில சமயங்களில் கொல்லப்படுவதுண்டாம். இறந்த மாட்டை, அந்த மைதானத்தைச் சுற்றி தூக்கிச் செல்வதும் உண்டு. மேற்படி காட்சிகள் பலவற்றை ஆங்கிலப் படங்களிலும்  பார்க்கலாம்.


வரலாற்று காலத்திற்கு முன்பிருந்தே இங்குள்ள விளையாட்டு மாட்டுச் சண்டை. அது ஏறுதழுவுதல் என்றழைக்கப்பட்டது. பெயரிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். அந்த விளையாட்டில் மாட்டிற்கு எந்த தீங்கும் விளைவிக்கக் கூடாது என்பது – ஸ்பெயின் நாட்டு விளையாட்டு விதிமுறைபோல் அல்ல.

அந்தக் கால ஏறுதழுவுதல் மங்கையர் தங்கள் துணைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறையாகவும் இருந்திருக்கிறது. முல்லைநிலத்து மாட்டுச்சண்டை வீரன், கண்ணன் – நப்பின்னை கதை தெரியும். இந்த நப்பின்னை கண்ணன் கதையே. பக்தி இலக்கியக் காலத்தில் ஆண்டாள் கண்ணன் கதையாகியது. அந்தக் கதை திரும்பவும் ரொம்ப காலங்கழித்து வடநாடு சென்று மீரா கண்ணன் கதையாகியது. கதைகள் நாடு விட்டு நாடு பாயும் தன்மையுடைத்து.

வரலாற்றுக் காலத்திற்கு முன்பாகவே, இந்த ஏறு தழுவுதல் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது என்ற ஒரு காரணத்தால் மட்டுமே இது சமயஞ்சார்ந்த ஒன்று எனக் குறிப்பிட முடியும். இதன்பின்னர் நாட்டில் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில்தான் தமிழரின் சமய உணர்வை வெளிக்காட்ட முடியும். எடுத்துக் கொள்ள முடியும் – என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.  எது உண்மையான தமிழர் சமயம் என்பதை யார் முடிவு கட்டுவது? ஆய்வாளர்கள் சொல்வதை மட்டுமே கருத்தில் கொள்ளலாம். அது எந்த நாட்டு மனித கலாச்சார ஆய்வாளதாக இருந்தாலும் சரி. சொல்லப்போனால் பெரும்பாலான தமிழர் நாகரீகப் பழமைச் செய்திகளை வெளிநாட்டினர் தாம் உலகிற்கு எடுத்துரைத்திருக்கின்றனர். எனவே, இந்த ஏறுதழுவுதல் போன்ற விஷயங்களை அம்மாதிரி ஆய்வாளரிடம்தான் விடமுடியுமே தவிர மதாச்சாரியிடம் அல்ல.


ராமநவமியும் கிருஷ்ண ஜயந்தியும் இந்த மண்ணில் “சமயம் சார்ந்த” விழாக்களாக ஆனது, அவதாரக் கதைகளாக ராமாயணமும் பாரதமும் மாற்றமடைந்த பின்னர்தான் ஆய்வின்படி பாரதத்தின் பின்னர்தான் ராமாயணம் எழுதப்பட்டிருக்க முடியும் – அவதார கதைகளின்படி அப்படி அல்ல. புத்தரை ஓர் அவதாரமாக ஒரு சாரார் கருத, மகாத்மா காந்தி காலமான போது அவர் பரமாத்மாவின் இந்த நூற்றாண்டு அவதாரமாகக் கல்கி தமது பத்திரிக்கையில் கட்டுரை எழுதினார். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வழக்கமாக ராமனையும் கிருஷ்ணனையும் அவதாரமாகக் கருத முடியுமானால், புத்தரையும் காந்தியையும் அவதாரமாகக் கருதி இந்த மண்ணின் சமயஞ்சார்ந்த விழாக்களாக ஏற்றுக் கொள்ள முடியாமல் போனது ஏன் – அது தான் வைதீகம். “இவற்றிற்கெல்லாம் முன்பான ஏறு தழுவுதலை தமிழரின் விழாவாக எண்ணி அப்படிக் கருதமுடியாது – ராமனும் மகாபாரத கிருஷ்ணனும்தான் இந்த மண்ணின் அவதார புருஷர்களான விழாக்களின் சொந்தக்காரர்கள்” என்று சொல்லப்படுமானால் அதன் எதிர்வினை எப்படியிருக்கும்?

இது ஒருபுறமிருக்க, உயிரினங்களுக்கு காயம் ஏற்படுத்தக்கூடாது என்கிற ரீதியில்தான் இந்த மாட்டுச் சண்டை – சேவல்சண்டை போன்றவை எதிர்க்கப்படுகிறது என்றால் அந்த ஜீவகாருண்ய தகைமை பற்றிச் சொல்ல வேண்டும்.


ஜகர்நாட் (JUGGERNAUT) என்றொரு சொல் ஆங்கில அகராதியில் ஏறியது. இது பெர்னாட்ஷா எழுத்துகளிலும் வந்துள்ளது. ஒரு சாதாரண ஆங்கில பிரஜையானவன் INDIAN FOOL என்ற பதத்தை வெகு சகஜமாகப் பயன்படுத்துவான். சமீபத்தில் சார்லஸ் இளவரசர் கூட பயன்படுத்தி அவஸ்தைப்பட்டது தெரிந்திருக்கும். வெள்ளைப் பரங்கி என்று பாரதியார் வெள்ளைக்காரனைக் குத்திக் காட்டினார்.

எதற்காக இத்தனையும் சொல்ல வேண்டியுள்ளதென்றால் “ஜெகர்நாட்” என்ற வார்த்தை பூரி ஜெகந்நாதர் ஆலயத்து தேர்த் திருவிழாவின் போது சிலர் அதன் சக்கரத்தின் முன் தலையை வைத்து தற்கொலை செய்து கொள்வது பற்றி குறிப்பிடும் வார்த்தை கிரகண நாள்களில் இலட்சக்கணக்கான நபர்கள் ஒரே நேரத்தில் பிரயாகை – திரிவேணியில் குளித்து சடங்கினை முடிப்பது குறித்தும் எடுத்துக்கொள்ள இவ்வார்த்தை இடங்கொடுக்கும்.

இவையெல்லாம் என்ன – உயிர்க்கொலை இல்லையா – பாராளுமன்றத்தில் பண்டித நேரு அவர்கள் nonsense என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டாரே. இந்த உயிர்க்கொலை பற்றியல்லாது இப்போது மாடுகளின் துன்பத்தையும் சேவல்களின் கூப்பாடுகளையும் பற்றிப் பேசுவது எம்மாதிரிப்பட்ட மதம் சாராத ஜீவகாருணிய செயற்பாடு – எமக்குத் தெரியவில்லை – ஆய்வாளர் சொல்ல வேண்டும்.

ஒன்றுமட்டும் வெளிப்படை. மாட்டுச் சண்டை சேவல் சண்டை ஆகிய விளையாட்டுகளில் ஈடுபடும் பழக்கம் எந்த வைதீகருக்கும் இல்லை – தங்களை ஆரியர்கள் என்று எண்ணிக் கொள்பவர்கள்.

அவர்களைப் பொறுத்தவரை கிரிக்கெட், டென்னிஸ் போன்ற ஐரோப்பிய விளையாட்டுகள்தாம் தரம். ஐரோப்பா என்றாலே “ஆர்ய” என்று தானே

 

பொருள்.
மா. அரங்கநாதன்
21.02.2012

 

பிற கட்டுரைகள்

புதுச்சேரி
நிலைப்பாடுகள்
காவியமும் பஜனை கோஷ்டியும்
 
முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...





மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved