Girl in a jacket

கேணி

பேருந்து கொண்டு வந்து சேர்த்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட மூன்று மைல் நடக்க வேண்டும். தூரத்தே கண்ணுக்கெட்டியவரை வெட்டவெளிதான். புல் பூண்டு கூட இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் அதுமட்டும் கண்ணில் பட்டது. அது மட்டும்தான் நன்றாகத் தெரிந்தது.

இரண்டொருவர் என் கூடவே பேருந்தில் வந்து இறங்கியிருந்தனர். அவர்களுடன் நடக்கத் தொடங்கினேன். ஆனால் அவர்கள் வேகமாக நடந்தனர். அந்த வேகம் நம்மால் முடியாது.

பரந்து பட்ட வெளியில் தூரத்தின் அளவு தெரியவில்லை. அந்த இடம் கண்ணிற்குத் தெரிந்தாலும், நடக்க, நடக்க, அதுவும் பின் சென்று கொண்டிருப்பது போல் தெரிந்தது.

முன்னால் நடக்கத் தொடங்கியவர்கள் சீக்கிரமாகவே அதை அடைந்து வரிசையில் இடம் பிடித்துக் கொண்டார்கள்.

வரிசை-அது ஒன்றும் பெரியதாக இருக்கவில்லை. ஒரு பத்து பேர்தான் இருந்தனர். ஆனாலும் எல்லாம் முடிந்து பழையபடி பேருந்து, ரயில் எல்லாம் ஏறி ஊர் வந்து சேர இரவு ஆகிவிடும்.

வெயில் தகித்தது. பரவாயில்லை. தண்ணீர் தான் தலையில் விழப்போகிறதே-சுகமாகத் தான் இருக்கும். ஆனாலும் இங்குள்ள தண்ணீர் நம் தலைக்கு ஒத்துக் கொள்ளுமோ என்னமோ-எப்படி சொல்ல முடியும்-எல்லாம் இந்த ஏழரை நாட்டுச் சனி செய்கிற வேலை. சிவபாலன் ஏற்கனவே சொல்லியிருக்கிறார்.

அதை முதலில் சொல்ல வேண்டும்-எங்கிருந்தோ ஆரம்பித்து விட்டேன்.

சிவபாலன் என் பக்கத்து வீட்டுக்காரர். அரசுப்பணி சொந்தத்தில் கார் எல்லாம் உண்டு. ஏறக்குறைய எல்லா கோவில்களுக்கும் சென்று வந்தவர். வடநாட்டுக் கோவில்களையும் விடவில்லை.

"முத்துக்கறுப்பன், நீ மகாலட்சுமி கோவில் பார்க்கணும். அடுத்த தடவை வடக்கே போகும் போது நீயும் வா."

"சார்-கோவில் எல்லாம் தென்னாட்டில் தான். அங்கே தலம் தான் முக்கியம். பக்தி இயக்கம் இங்கே தானே தோன்றியது" என்றெல்லாம் சொன்னால் காது கொடுத்து கேட்கமாட்டார். அவரென்ன-பொதுவாக எல்லாருமே அப்படித்தான். தென்னாட்டில் முதலில் தோன்றியது என்று சொல்லி விட்டாலே ஏதோ தேச பக்திக்கு முரண் என்பது போல நினைக்கிறார்கள். அதென்ன-தேசபக்திக்கும் இந்த வரலாற்று உண்மைகளுக்கும் என்ன சம்பந்தம்-அப்படி எல்லாம் கேட்க முடியாது. சகித்துக் கொள்ளத் தான் வேண்டும்-வேறு வழியில்லை.

சிவபாலனைப் பொறுத்த வரை வேறு ஒரு விஷயம். அவருக்கு சோதிடம் நன்கு தெரியும்-முறையாகப் படித்தவர்.

"முத்துக் கறுப்பன் உனக்கு ஏழரைச் சனி நடக்கிறது. இரண்டரை வருஷம் என்று மூன்று தடவை. மூன்றிலே கடைசி போர்ஷன்-உனக்கு முடிக்கிற சமயம் எனக்கு ஆரம்பிக்கும்."

"திருநள்ளாறு போகலாமே-வடநாடு எல்லாம் அப்புறம் பாத்துக்கலாமே".

"அதைச் சொல்லலை. திருநள்ளாறு போகலாம். நீ ஒரு முறை இங்கே போய் வா. போனால் தலையிலே தண்ணி ஊத்திக்கலாம். பிறகுதான் கோவில் எல்லாம்."

வழியும் சொல்லித்தந்தார். போக வேண்டிய இடம் பக்கத்தில்தான். ஒரு நாற்பது மைல்தான் இருக்கும். அதுதான் முதலில் போன கிணறு. வேறொன்றும் சொன்னார்.

"மூணு போர்ஷன் உண்டுன்னு சொன்னேனே-அது ஒன்பது-பதினெட்டு இருபத்தேழு அப்படின்னு ஊத்திக்கணும் அதாவது நீ இப்ப பதினெட்டு வாளி தண்ணி ஊத்திக்கோ. சனி முடிகிற சமயம் இருபத்தேழு. கடைசியா ஊத்திக்கிற கிணறு இங்கே இல்லை. அதைப் பிறகு பாத்துக்கலாம்."

வழியும் சொன்னார். இடம் பக்கத்து மாவட்டம்தான். ஒரு மணி நேரப் பயணம்.

அந்த இடம் கடற்கரை பிரதேசமாகயிருந்தது. மனிதவாடையற்று காணப்பட்டது. கிட்டத்தட்ட கைப்பிடிச்சுவரே இல்லாத கிணறு. மணற்கேணியாக இருந்திருக்க வேண்டும். காத்துக் கொண்டிருப்போர் ஒரு நாலைந்து பேர்தாம்.

லுங்கிக் கட்டிக் கொண்டிருந்த ஒருவன் கிணற்றிலே தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தான். கைகளால் மிகவும் லாவகமாக வாளியில் தண்ணீர் எடுத்து தரையில் உட்கார்ந்து கொண்டிருந்தவரின் தலையில் ஊற்றிக் கொண்டிருந்தான். அவன் ஒரு கையாலேயே தண்ணீரை இறைத்து விடுபவன் போல இருந்தான். அந்தக் கையைக் கூர்மையாக பார்த்தால் அதில் ஆறு விரல்கள் இருந்தன.

கிணற்றின் பக்கத்திலே கூரை போட்டு நீண்ட தாடியுடன், துண்டால் மார்பைப் போர்த்தியவாறு ஒருவர்-அப்படி போர்த்தியிருந்தாலும் முப்புரி நூல் வெளியே தெரியும்படியாக.

எனது வரிசை வந்ததும் நீர் இறைப்பவன் "எத்தினி" என்று கேட்க, பதினெட்டு என்றதும் அவன் மடமடவென வேலையைக் கவனித்தான் இடையிலே பேசவும் செய்தான்.

"நீங்க சாமிகிட்டே பதினெட்டு ரூபாயா அல்லது உங்க இஷ்டப்படியோ கொடுத்துடுங்க. அவரு கைநீட்டி வாங்க மாட்டாரு. கால் பக்கத்திலே வைச்சிடுங்க. குறையைச் சொல்லுங்க-பதில் சொல்ல மாட்டாரு. ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்துடுங்க" என்று கூறி வரிசையில் நின்ற அடுத்தவரை கவனிக்க ஆரம்பித்தான்.

சாமி பக்கம் சென்றேன். உட்கார் என்று சைகை காட்டினார். உட்கார்ந்து பணத்தை அவரது காலடியில் தரையில் வைத்தேன். என்னை உற்றுப்பார்க்கவே, கஷ்டங்களைச் சொல்ல ஆரம்பித்தேன். அலுவலகத்தில் இடமாற்றம், பொருளாதார நெருக்கடி, பிள்ளைகளுக்குக் கல்லூரியில் இடங்கிடைத்தல் போன்றவைதாம்.

அவர் தலையசைத்துக் கொண்டார். எங்கேயோ பார்த்தவாறு சிறிது நேரம் இருந்துவிட்டு திரும்பவும் என்னைப் பார்த்தார். அந்தப் பார்வையில் சாந்தம் தெரிந்தது. எனக்கு சிறிது நிம்மதி ஏற்பட்டது.

திரும்பவும் தலையசைத்தார். அது எனக்கான உத்தரவு என்று தெரிந்தது. நான் எழு முன்னர் தனது கைகளை அகலமாக விரித்து எனது தலை மீது வைத்து ஆசீர்வதித்தார். கண்களை மூடிக்கொண்டிருந்தார்.

நான் எழுந்து கிணற்று பக்கம் வந்து தண்ணீர் இறைப்பவனிடம் ஓர் ஐந்து ரூபாய் நோட்டைத் தர அவன் ஆறு விரல் கையால் வாங்கிக் கொண்டான்.

அவ்வளவுதான் அங்கு நடந்தது.

கிட்டத்தட்ட இதெல்லாம் மறந்து வருகிற காலத்தில், ஒரு நாள் சிவபாலன் என்னைக் கூப்பிட்டுச் சொன்னார்.

"முத்துக்கறுப்பன், இப்ப உங்களுக்கு சனி முடிகிற சமயம். எனக்கு ஆரம்பிக்கப் போகிறது. இந்த வாட்டி நீ இருபத்தேழு வாளி தண்ணீர் ஊற்றிக்கணும். ஆனா ஒரு கஷ்டம். இந்தக் கிணறு கர்னாடகாவிலே இருக்கு. ரயில்லே போய் பஸ் ஏறி அந்த இடம் போகணும். நான் அட்ரஸ் தறேன். கேட்டுக் கேட்டு போயிடலாம். கர்னாடகா ஆனாலும் இது இருக்குமிடம் பக்கத்திலேதான். ஒண்ணு மட்டும் கட்டாயம். சனிக்கிழமை மட்டும்தான் அங்கே சாமியார் இருப்பாராம். தண்ணியும் அன்னைக்கு மட்டும்தான் ஊத்துவாங்களாம். அப்படியிப்படி யோசிக்காம போயிட்டு வா-நானும் இனி அலைய வேண்டியதுதான்".

அவர் தந்த விவரம் இவ்வளவுதான். நான் அதன்படி ரயில் ஏறி கர்னாடகா வந்து, பஸ் ஏறி இந்த இடத்து கிணற்றுப்பக்கம் வரிசையில் நிற்கிறேன்.

••••

கிட்டத்தட்ட வரிசையில் நின்ற அனைவருமே இருபத்தேழு தடவை ஊற்ற வேண்டியவர்களானபடியால் நேரம் சென்றது நிற்பது கஷ்டமாக இருந்தது.

எனது முறை வந்த போதுதான் நீர் இறைப்பவனை நெருக்கத்தில் பார்க்க முடிந்தது. லுங்கி கட்டி அரைக்கை பார்த்த ஆள் அல்ல என்று தெரிந்தது. ஆறு விரல் அடையாளம். அந்தக் கிணற்றில் பார்த்தவனின் தனி அடையாளம். ஏற்கனவே வரிசையில் நின்றவர்களிடம் கன்னடத்தில் சரளமாகப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். அந்த விவரங்கள் தெரியுமாதலால் அவன் பேசும் மொழியும் புரிந்தது.

எனது முறை வந்ததும் நான் ஆங்கிலத்தில் இருபத்தேழு என்று கூறினேன். சொல்வதற்கு முன்பே அறிந்து கொண்டவன் போல் அவன் இறைக்க ஆரம்பித்து விட்டான். சிறிது சீக்கிரமாகவே முடிந்து விட்டது. கையைச் சாமியார் பக்கம் காட்டினான் பேசவில்லை.

சாமியார் பக்கம் நான் உட்கார்ந்து இருபத்தேழு ரூபாயை காலடியில் வைத்தேன். அவர் உடனேயே 'என்ன நச்சத்ரம்' என்று கேட்கவே எனக்கு வியப்பு. சொன்னேன். கஷ்டங்களையும் சொன்னேன். நீண்ட தாடியை உருவிய வண்ணம் அண்ணாந்து பார்த்து கண்களைச் சிறிது நேரம் மூடிக் கொண்டிருந்தார். பின்னர் சாந்தத்துடன் என்னைப் பார்த்து தலையசைத்தார். தனது கைகளை அகல விரித்து எனது உச்சந்தலையில் வைத்து ஆசீர்வதித்தார். எழுந்து கை கூப்பினேன்.

அவர் கைகளை விரித்து தலையில் அழுத்தி என்னை ஆசீர்வதித்த போது அதில் ஏதோ ஒரு வித்யாசம் இருந்ததாக எனக்குத் தோன்றியதால், திரும்பவும் அவரைப் பார்த்தேன். அவரது கையில் ஆறு விரல்கள் இருந்தன.

திரும்புகையில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தவனிடம் ஐந்து ரூபாய் என்று எதுவும் தரவில்லை. ஊர் திரும்பியதும் சிவபாலனிடமும் எதுவும் சொல்லவில்லை.

 
முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...

மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved