தமிழிலக்கியத்தில் அவ்வாறுண்டு. ‘‘ஆரியர் கயறு ஆடு பறையின் கால் பெறக் கலங்கி’’ என்ற குறுந்தொகை வரிகள், நர்மதை ஆற்றின் வடக்கேயிருந்த ஆரியர் அல்லது புதிதாய்த் தோன்றிய கலப்பினத்தார் யாவருமே கழைக்கூத்தாடிகள் என்ற பொருளைத் தரும். வேதத்திலும் ஸ்மிருதிகளும் சொல்லப்படுவது மாதிரிதான். வரலாறாக எடுத்துக் கொள்ள முடியாது. சமஸ்கிருதம் என்ற பாஷை காற்றிலிருந்து மூக்கால் இழுக்கப்பட்டு, அந்தக் காலத்து ரிஷிகளால் நாக்கால் வெளியிடப்பட்டது என்று கொண்டாடும் நபர்கள் ‘‘கல் தோன்றி மண் தோன்றாகாலத்து’’ என்ற தமிழ்ப் பெருமை பேசும் வரிகளைக் கேட்டுவிட்டால் முகம் சிவந்து போவார்கள். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பெயரைச் சொல்லிவிட்டால் விமர்சகர் வெங்கட் சாமிநாதன் எப்படிக் கொதிப்பார் என்று தமிழர்களுக்குத் தெரியும். சந்திரகுப்தன் போன்றவர் பெயர்கள் எல்லாம் அவர்களுக்கு சாந்தியைத் தரும். தமிழ்நாட்டில் வேண்டுமானால் மகேந்திர பல்லவனைச் சொல்லுங்கள். இப்படி கரிகாலன், நெடுமுடிக்கிள்ளியின் பெயரெல்லாம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்கிறீர்களே என்று அவர் வருத்தப்படுவது நியாயம். அதுதான் தந்தைமொழி தாய்மொழி விஷயம்.
ஓர் இனத்தோடு இன்னொரு இனம் கலந்து, புதியதோர் இனம் உண்டாவது எந்த வகையிலும் குறைபட வேண்டியது அல்ல, உலக நாகரிகங்கள் யாவும் அப்படித்தான் தோன்றியிருக்க முடியும். ஆரியர் என்பாரும் பல இடங்களுக்குப் பரவிச் சென்றவர்தாம். ஆனால், இங்கு மட்டுந்தான் புதிதாய் ஏற்பட்ட இனமானது, சாதி என்ற வேறுபாட்டைக் கொண்டு நிற்கிறது. உலகில் வேறு எங்கிலும் கலப்புத் திருமணங்கள் (ஆரியரால் ஏற்பட்ட) பிரிவை உண்டாக்கியதில்லை. இனக்கலப்பை பெருமையோடு பேசித் தம் தம் குலத்தை விளக்கிக் கூறுவது மேல்நாட்டில், குறிப்பாக ஐரோப்பிய இனத்தவரிடையே சகஜம். ‘‘என் தந்தை பிரஞ்சு - தாய் ஓர் ஆங்கிலமாது" என்று ஒருவன் கூறுவது அங்கே சாதாரணம் இரண்டு மொழிக்காரரும் இலத்தீனையும் கிரேக்கத்தையும் பண்டை மொழிகளாக ஏற்றுக் கொண்டவர். அதே போன்ற நிலை இங்கு எந்நாளும் இருந்ததில்லை.
"எழுதாக் கற்பின் நின் செல்லுள்ளும்" என்று வருகிற குறுந்தொகை வரிகள் பார்ப்பனப் பாங்கனை முன்னிறுத்திச் சொல்பவை. சங்க காலத்தில் பார்ப்பனர் இருந்தனர் என்பது மட்டுமல்ல யவனரும் இருந்தனர். பார்ப்பனச் சேரிபோல யவனர் சேரியும் உண்டு. அவர்களுக்கும் மொழி இருந்திருக்கிறது. அந்தந்த மொழியைச் சுட்டிக்காட்டிச் சொல்லும் போது ஒருவன் "நின் சொல்" என்றுதான் சொல்லுவான்.
சங்க காலத்தில் கோவில் இல்லை. சமஸ்கிருத மொழியைத் தங்களது தந்தை மொழியாகவோ தாய் மொழியாகவோ பேணிய பார்ப்பனர் இருந்தனர். பின் எந்த விஞ்ஞான உண்மையை அடிப்படையாகக் கொண்டு பார்ப்பனர் இங்கே கோவில்களைக் கொண்டு வந்தனர் என்று சொல்ல முடியும்? அப்படி எதுவும் நடக்கவில்லை. பார்ப்பனர் எவரும் இங்கே ஆரியராக வந்து சேரவில்லை. காளிந்தர் - புளிந்தர் போன்ற திராவிட இன மன்னர்கள் ஆரியப் பெண்களை காளிந்தர் - புளிந்தர் போன்ற திராவிட இன மன்னர்கள் ஆரியப் பெண்களை மணந்தால் தென்னகத்தில் முதலில் கொங்கணத்தில் ஓர் கலப்பு இனம் தோன்றியது. இந்தக் திராவிட இன மன்னர்களுக்கும் விசுவாமித்திரருக்கும் சம்பந்தம் உண்டு என்று கூறுவோரும் உளர். இந்தக் கலப்பினம் அரசர் மூலம் தோன்றியபடியால் செல்வாக்கும் பெற்றிருந்தது. அரசர்களுக்கு யோசனை சொல்லவும் அவர்கள் சிறிது காலம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அவர்கள் எந்தத் தொழிலையும் செய்யவில்லை. அரண்மனையிலேயே உணவு கிடைத்தது. அரண்மனையானது மக்கள் வணங்கும் கோவிலாக பிற்காலத்தில் மாற்றமடைந்தபோது, அவர்கள் அந்தக் கோயிலின் மடப்பள்ளியிலேயே வேலை செய்தனர். கருவறையில் பூசனை செய்தது அறிவர் – ஆதிசைவர் என்னும் மருநில மக்கள். மன்னர்களிடமுள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, பின்னர் பூசனை உரிமையைப் பெற்றனர். (பார்க்க: கே.கனகசபையின் தென்னிந்திய வரலாறு டி.கே.சி. கடிதங்கள், ஐதரேய பிரம்மாணம்) நாற்பதுகளில் சென்னை அரசுப் பணியில் இருந்து இப்போது ஓய்வுபெற்றிருக்கும் பெரியவர்களுக்குத் தெரியும், அவர்கள் காலத்தில் ஆங்கிலோ – இந்திய இனத்தைச் சேர்ந்த ஒருவர் தொலைபேசி இயக்குபவராகவோ, காவல்காரராகவோ பணியிலிருந்தால் அவர்களுக்கு 15 ரூபாய் சிறப்புச் சம்பளம் உண்டு. இது ஆங்கில அரசு ஆங்கிலோ – இந்தியர்களுக்கு அளித்து வந்த சலுகை, இனத்திற்காகவே அளிக்கப்பட்ட சலுகை. இப்போது அது இல்லை. அரசர்களும் அரசும் சலுகை அளித்தால் யார் கேட்க முடியும்?
சங்க காலத்திலே பூசனை இருந்தது.
"நடுகற் பீலி சூடி துடிப்படித்து" என்ற வரிகள் அக்கால முறையைக் காட்டும். நல்லது. நடு கல்லைத்தானா மன்னன் வணங்கினான்? வேறு விக்கிரக ஆராதனை இருந்ததா? மந்திரங்கள் இருந்தனவா? இப்போது இருக்கும் முறை கோவிலில் சமஸ்கிருத மந்திரம் ஓதுதல் - எப்போதும் இருந்த ஒன்றா? இங்கே வணங்கப்பட்ட கடவுளர் ஆரியராலும், அதாவது இந்தோ - ஆரியராலும் மதிக்கப்பட்டனரா? ஆரியர்க்கு விக்கிரக ஆராதனை இருந்ததா? திருமணத்தில் சொல்லப்படும் மந்திரங்கள் தமிழ்நாடு சம்பந்தப்பட்டதுதானா?
"இந்தப் பெண் என்னைக் கொல்லாதிருப்பாளாக - ஏ வைவஸ்துவே" என்று மணமகன் தனது திருமணத்தில் சொல்ல வேண்டிய மந்திரத்திற்கு இங்கே ஏதாவது காரண காரியங்கள் உண்டா? எல்லாவற்றிற்கும் மேலாக தென்னாட்டைப் பற்றிய குறிப்புகள் வேதங்களில் இருக்கின்றவா?
இக்கேள்விகளுக்கெல்லாம் "இல்லை" என்றே பதில் சொல்லிவிடலாம். "சேர" என்ற ஒரு சொல் வேதத்தில் வருவதாகக் கூறி சொந்தம் கொண்டாட முனையும் நபர்கள் - ஆராய்ச்சியாளர்கள் கூட இச்சொல் "சாரை" என்றே ஒப்புக் கொள்கிறார்கள். சாரை என்றால் தமிழில் பாம்பு. நர்மதை நதியின் தெற்கேயுள்ளவர்கள் நாகர்கள். அவர்களோடு எந்த வித சம்பந்தமும் வைத்துக் கொள்ளாதீர்கள் என்ற பிற்கால பிரமாணங்களுக்கு ஆதி இச்சொல்தான்.
ஆனால் தென்புலம், தென்னாடு ஆகிய சொற்கள் வழக்கத்தில் இருந்து வந்திருக்கின்றன. "தென்னாடுடைய சிவனே போற்றி" என்று மணிவாசகர் பாடுகிறார். அப்படியானால் வடநாடு என்று இருந்திருக்க வேண்டுமல்லவா என்ற கேள்வி எழுகிறது. தென்னிந்தியா - தட்சிண பாரதம் போன்றதல்ல இது. தென்பாண்டி என்று இருப்பதால் வடபாண்டி இருக்கிறது என்று ஆகாது. பாண்டிய நாட்டின் பெயரே தென்பாண்டிதான். மேலும் இது இந்தியா - பாரதம் என்ற பெயர்கள் புழக்கத்திற்கு வருவதன் முன்னேயுள்ளது. இது திசையைக் குறிக்கும் சொல் அல்ல. தென்னாடு முத்துடைத்து தொண்டை மண்டல நன்னாடு சான்றோருடைத்து என்ற பிற்காலத்து ஔவையார் பாட்டிலும் தென்னாடு பாண்டிய நாட்டையே குறிக்கிறது. அப்படியானால் தொண்டை மண்டலமும் சோழநாடும் மலைநாடும் தென்னாடு இல்லையா என்றால் எதனுடைய தெற்கு என்ற எதிர்க்கேள்விதான் எழும். இலங்கை ஆஸ்திரேலியா எல்லாங்கூட தென்திசைதான். இந்தியா என்ற ஒரு நாடிருந்து அந்த நாட்டின் தென்னாடு என்றால் வேறு விஷயம். அப்படியில்லை. தென் என்பது திசையை மட்டும் குறிக்கும் பொருள் கொண்டதல்ல. "தென்" என்றால் தோன்றும் ஒளி என்றும் பொருள். எடுத்துக்காட்டு: தென்படுவது, தென்பட்டான். தானாகத் தோன்றும் ஒன்று. நாமாக முயன்று கண்டதல்ல என்றெல்லாம் பொருள் உண்டு. "தென்புலம், தென்னை, தென்னாடு" எல்லாம் அந்தப் பொருளைக் கொண்டு நிற்பவைதாம்.
சாதி என்ற வழக்கு, தமிழில் இருந்ததாகத் தெரியவில்லை. வர்ணாசிரம தர்மம் இங்கு எந்நாளும் இல்லை. ஆயினும் பிரிவுகள் ஏராளமாக அன்றும் இன்றும் உள்ளன. பலவித அறிவியலாளரும் இது பற்றிக் கூறியிருக்கின்றனர்.
தமிழிலுள்ள பிரிவுகளைப் பார்க்கு முன்னர் வர்ணாசிரம தர்மத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ளுதல் நலம். பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற பிரிவுகள் மனித குலம் அனைத்திற்கும் பொருந்தும். பிராமணன் என்பவன் குலத்தால் வருபவன் அல்லன் - குணத்தால் மட்டுமே என்று சொல்லும் மனித நேயக்காரர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். உயர்ந்ததாகச் சொல்லப்படும் எந்த இனத்தையும் குலத்தையும் அப்படித்தான் வர்ணிப்பார்கள்! எடுத்துக்காட்டாக யாரும் கிறித்தவராகப் பிறந்து விடுவதில்லை. ஏசுவை ஏற்றுக்கொண்ட பின்னரே கிறித்தவனாக முடியும். மற்றவர் அந்த மதத்தில் பிறந்தாலும் ஆக முடியாது. Unchristian என்ற சொல்லே அகராதியில் உண்டு. சைவர் - வைஷ்ணவர்களைப் பற்றியும் இப்படிச் சொல்வது வழக்கம்தான்.
அடுத்து, பூர்வகுடி மக்களும் பிராமணராகப் போற்றப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படும் கூற்று வெறும் பம்மாத்து. விசுவாமித்திரரை பிரம்மரிஷி என்றழைக்கலாம். ஆனால் கஷ்டப்பட்டு வாங்க வேண்டிய அந்தப் பட்டத்தைப் பிறப்பால் பிராமணன் ஆன ஒருவனிடமிருந்து தான் பெற்றிருக்கிறார். பிரம்மரிஷி பட்டம் பெற்ற விசுவாமித்திரரின் குழந்தைகள் சந்திரியர்தாம். இது நம்மவர் Sir பட்டம், Right Honourable பட்டம் ஆகியவற்றை ஆங்கிலேயரிடமிருந்து பெற்றது போலத்தாம். அவ்வாறு வாங்கிவிடுவதால் ஒருவன் ஆங்கிலேயன் ஆகிவிட முடியாது.
இந்த வகைப்பட்ட சாதிகள் தமிழர்களிடையே இல்லை. திணைகள் இருந்தன. மக்கள் ஒரு திணையில் வாழ்ந்திருந்து மற்ற திணைக்கு மாறி வந்திருக்கின்றனர். அவை எல்லாவற்றிலும் வாழ்ந்தவரே தமிழ் பேசும் மக்கள். ஒவ்வொரு திணையும் வெவ்வேறு குண நலன்களைக் கொண்டிருந்தாலும் ஒரு திணைவிட்டு மற்றொன்றிற்குச் செல்லும்போது, வாழ்ந்திருந்த திணையின் பண்புகள் அவர்களிடமே நிலைத்திருந்தன.
ஒவ்வொரு திணையும் சமுதாய வாழ்வில் தனிப் பண்பு உடையதாயினும் சங்க காலத்தில் அவை ஒன்றைவிட்டு ஒன்று பிரிந்து தனியாக நிற்கவில்லை. அவர்தம் வாழ்க்கை நிலையின் மிகுந்த வேறுபாட்டை, அவர்களது அறைவிடங்களில் மட்டுமே பார்க்க முடிந்தது. மருத நிலத்தின் ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் பெரிய வீடுகளிலிருந்தன. அரசர் தம் கோவில்கள் பெரிய மதிலையும் கோபுரங்களையும் கொண்டிருந்தன.
மருத நிலம் என்று வரும்போது தமிழரிடையே பிரிவு பற்றி அதிகம் சொல்லலாம். விவசாய நாகரிகத்தின் தொடக்கத்தில் நடந்தேறிய கொடுமை அது. நிலத்தை கைப்பற்றிக் கொண்டோர் நிரந்தரமாகத் தங்குமிடம் ஊராகி, சம்பந்தப்பட்ட வேறு தொழிலைச் செய்து மருத நிலத்தில் இணைந்தனர். உடையவர்கள் வேளாளர். நிலமற்றவர் கலப்பை செய்து கொடுத்தும் பானை செய்து கொடுத்தும் "வேள் கோவர்" ஆயினர். எந்த நிலத்தைச் சார்ந்தவரும், எந்தத் தொழிலைச் செய்தவரும் "எங்களையும் தமிழர்களாய்ச் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்று யாரிடமும் சென்று கெஞ்சவில்லை. என்றாலும் இவ்வகைப்பிரிவுக்குக் காரணம் வேளாளர்தாம் என்று சொல்லுவதில் உண்மையில்லாமல் இல்லை. இவ்வகைப் பிரிவு வர்ணாசிரம தர்மம் இல்லை என்று சொல்வதும் உண்மை. இவ்வாறு ஏற்பட்ட பிரிவு ஒட்டுமொத்தமாக மனித இனங்கள் எல்லாவற்றிலும் உள்ளதுதான். எல்லாமே, அதாவது அக்காலத்து, செல்வதைக் கைப்பற்றி, அதனால் புதுவாழ்வு பெற்றுவிட்ட ஒரு சிலரின் புத்திசாலித்தனத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். இங்கே, அது அவர்களின் நாகரிகத்தைச் சுட்டிக் காட்டினாலும், அவர்கள் அந்தத் தனித்தன்மையை நீடிக்க வைக்கவும், பெற்ற செல்வத்தைப் பாதுகாக்கவும் அவர்கள் எடுத்துக் கொண்ட முறைகள், அவர்களை நிலமில்லாத மற்றோரிடமிருந்து பிரியச் செய்து, தற்பெருமையாக ஆயிற்று. குறவர் கடவுளைத் தங்களுடையதாக்கி அதை "முருக வேள்" என்று அழைத்த பாங்கு தேர்ந்த புத்திசாலித்தனமாக இருக்க முடியும். உணவுப் பொருட்களில் அவர்கள் கண்ட மாற்றங்கள் - புலாலை நீக்கியது, தட்ப வெப்பத்து கேற்றவாறு ஆடைகளை மாற்றியது போன்றவையெல்லாம் படிப்படியாக மருத நில மக்களுக்கும் அவர் சந்தியினருக்கும் தாம் உயர்ந்தவர் என்ற எண்ணம் தோன்றக் காரணமாயிருந்திருக்கும்.
இருக்கலாம். இருந்தபோதிலும் அவற்றில் வர்ணாச்சிரம சாயல் இல்லை. நிலவுடைமைக் காரர்களின் முன்னோர் குறவரும் கானரும் மீனவரும் என்பதில் கருத்து வேறுபாடில்லை. இனக்கலப்பால் ஏற்பட்ட பேதமல்ல இது.
வசிட்டன் ஒரு பூர்வ குடிப் பெண்ணை மணஞ்செய்து, அவர்களுக்குப் பிறந்த மகன் சக்தி என்றால் அந்த மகன் ஒரு பிராமணனாகக் கருதப்படுவான். தந்தை வழி சமுதாயத்தில் அது சரி. ஆனால் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, பின்னர் அந்தப் பெண் ஒரு பூர்வகுடி ஆணை மணஞ்செய்து, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை எந்த சாதியை கொண்டிருந்தது? இக்கேள்வி தந்தை வழி சமுதாயத்தில் பிரச்சனையான பின்னர் ஏற்பட்டது ஆரிய வர்ணாசிரம தர்மம். தமிழர்களிடையே அந்த நிலை இன்றுகூடக் கிடையாது. என்றும் இருந்ததில்லை. ஒன்று சொல்லலாம். கலப்பு ஏற்பட்ட ஆரியப் பெண்களைச் சில திராவிட மன்னர்கள் மணஞ் செய்து கொண்ட பின்னர் தோன்றிய தென்னாட்டு பிராமணர், தங்கள் அடையாளத்தைக் காட்டுவதற்காக இந்த வர்ணாசிரம் தர்மத்தையும் சமஸ்கிருத மொழியையும் விடாது பிடித்துக் கொண்டிருக்கலாம். வேறு வகையில் தென்னாட்டுப் பிராமணரை வட இந்தியர் ஏற்பதில்லை. இந்நிலையில் தென்னாட்டுப் பிராமணருக்கு வடமொழி தவிர்க்க முடியாத அடையாளமாக இன்றளவும் இருக்கிறது.
சங்க காலத்திலேயே இம்மாதிரி அடையாளந் தேடி, தமிழர் பழக்கங்களை ஆரியர் கடைப்பிடிக்கும் நிலையும் கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது. குறிஞ்சி முருகனை கார்த்திகேயனாக நினைத்துப் பார்க்கும் வழக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். அரசர்களின் ஆணை பலத்தைக் கொண்டு பெற்ற சலுகை அது. அரசன் எவ்வழி அவ்வழி குடிகளாக இருந்த காலத்திலும் உண்மை புகைந்து கொண்டிருந்தது. சங்காலப் பாடல்கள் பல இதற்குச் சான்று.
கற்காலத்திலிருந்து விவசாய நாகரிகம் வரை மனித குலத்திற்கு நேர்ந்த கொடுமைகள் அனைத்தையும் அவற்றின் சின்னங்கள் எல்லாவற்றையும் தமிழரிடையே காணலாம். விவசாய நாகரிகம் மெள்ள மெள்ள ஏற்பட்டவொன்று. அப்படி இங்கு ஏற்பட்ட ஒரு நாகரிகத்தின் காரண கர்த்தாக்கள் யார்? வேளாளர் நாகரிகம் இது என்று சொல்லி விடுவது சரியான பதிலல்ல. அது எல்லாராலும் ஏற்பட்ட வொன்று.
கள்ளர், மறவர், அகமுடையார் ஆகியோர் எல்லாம் மெள்ள மெள்ள வேளாளராயினரே என்ற பாடல்கூட வேளாளர் தம் பெருமையைக் கூறுவதாக எண்ணிப் பயனில்லை. உண்மையில் அவர்கள் விவசாய நாகரிகத்திற்கு மெள்ள மெள்ள வந்து, அதன் பின்னர் பெற்ற பெயர்தான் வேளாளர். அதாவது மலைக் குறவரும் மாடுகளைப் பாதுகாத்து நின்றோரும் மீனவரும்தாம் மெள்ள மெள்ள அந்த நிலையை அடைந்திருக்க முடியும். இதில் வர்ணாசிரம தருமத்திற்கு எங்கே இடம்?
இந்த வர்ணாசிரம தர்மமும் (இதை தர்மம் என்றால் உலகு சிரிக்கும்) தமிழினப் பிரிவுகளும் வெவ்வேறு என்பதை பல வகையிலும் சொல்ல முடியும். ஓர் இன மக்களின் உயர்வு தாழ்விற்கு அவர்களது செல்வநிலை அல்லது வாழ்க்கை வசதி மட்டுமே காரணமாயிருக்கிறது என்று பார்த்தோம். செவ்விந்திய இன மக்களில் APACHE, SEMINOLE போன்ற பிரிவுகள் உண்டு. முதலில் குறிப்பிட்டது உயர்ந்தது எனக் கருதப்படுகிறது. அந்த APACHE மக்கள் விவசாயத்தில் நாட்டம் செலுத்தியது ஒரு காரணம். இதேபோல் ஆப்ரிக்க நீக்ரோ இன மக்களில் Nigerian, Biafran பிரிவுகளில் இரண்டாவதாகக் குறிப்பிட்டது தாழ்ந்த வகையாகக் கருதப்படுகிறது.
இப்போது இங்கே வேளாளர் மற்ற திணை மக்களை விட உயர்ந்தவர் என்று கருதிக் கொள்வதைப் போலவே பிராமணர் தங்களை அந்த வேளாளரை விட உயர்ந்தவர் என்று கருதுகிறார்கள் - இதில் என்ன தவறு என்று கேட்பது நியாயமாகாது. அப்படியானால் APACHE பிரிவினர் மற்ற செவ்விந்தியரை விட தாங்கள் உயர்ந்தவர் என்பதுபோல, வெள்ளை மனிதனும் தான் எல்லா சிவப்பிந்திய இனங்களை விட உயர்ந்தவன் என்று நினைக்கிறான். அதையும் நியாயம் என்று ஏற்க வேண்டும். ஆனால் சிவப்பிந்தியரும் ஆப்ரிக்க இனத்தவரும் தங்களது கலாச்சாரம் வெள்ளையரை விடத் தாழ்ந்தது என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா? தங்களை ஆண்டவர்கள் - ஆண்ட கொண்டிருப்பவர்கள் என்ற ரீதியில் பணிந்து போய்க் கொண்டிருக்கலாம். கலாச்சார ரீதியில் அல்ல. ஆண்டு கொண்டிருப்பவர்கள் யாராக இருந்தாலும் உயர்ந்த இனந்தான் என்பது மூடநம்பிக்கை.
மனித இனத்தில் பாதியே இனக்கலப்பால் ஏற்பட்டதாகும். மெக்சிகோ, கொலம்பியா நாடுகளின் பெரும் பகுதி மக்கள் சிவப்பந்தியருக்கும் ஐரோப்பியருக்கும் பிறந்த கலப்பினந்தான்.