Girl in a jacket

காடன் மலை

கடான்மலை,
ஆசிரியர் மா. அரங்கநாதன்,
தாமரைச் செல்வி பதிப்பகம்,
31/48, ராணி அண்ணா நகர்,
சென்னை-600 078.
விலை: ரூ.20.

தனித்தனியான சின்னஞ்சிறிய சம்பவங்கள் – காட்சிகள் – ஓர் அரங்கில் வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு குழந்தை தன் போக்கில் முன்னும் பின்னுமாக அடுக்கிக் காட்சிக்கு வைத்திருப்பதுபோல. உள்ளே நுழையும் ரசிகனோ முதல் காட்சியின் மெல்லிய கோடுகளிலேயே சிக்கிக்கொள்கிறான். கவனமாகக் காட்சி அடுக்குகளின் ஊடாக நகர்கிறான். ஆங்காங்கே சின்னஞ்சிறிய சித்திரங்கள் அவனை குடையத் தொடங்குகின்றன. நகர்ந்து நகர்ந்து முடிவுக்கு வரும்போது, ஒரு முழுமையான – வீரியமான வாழ்க்கைச் சித்திரம் தனக்குள்ளே விரிவதைக்கண்டு பிரமித்துப் போகிறான். காடன் மலையிலுள்ள ஒவ்வொரு சிறுகதையும் படிக்கும் போது ஒரு வாசகனுக்கு ஏற்படும் அனுபவம் இதுதான்.

அரங்கநாதன் கையாளுவது எளியமொழி, வட்டார அழகு எளியமொழி. வட்டார அழகு ததும்பும்மொழி. அந்த மொழிக் கோடுகளால் அவர் உருவாக்கும் காட்சிகளும் மிகவும் எளிமையானவைகளே. ஆனால் அதன் ஊடாக சொல்லும்செய்தி இருக்கிறதே... அற்புதமானது! பொருளாதார அதீத மதிப்புகளால் சிதைந்து போகின்ற வாழ்க்கை, காலமாறுதல்களால் ஜாதிய அடுக்குகளில் ஏற்படும் முரண்கள், தொலைந்து முகம் இழந்த உயிர்கள், எனப் பல தளங்களின் ஊடாக மனித மேன்மைகளை அற்புதமாக சொல்லிவிடுகிறார்.

இவருடைய கதையாக்க பாணி அருமையானது. ரகசியம் பேசுவதுபோல அவ்வளவு மென்மையாக நம்மிடம் பேசுகிறார். அந்த மேன்மையில் இழைந்தோடும் கிண்டல்கள் நம்மைக் கவ்விப்பிடிக்கும் காந்த சக்தி உடையன. நம் சிந்தனை கதையின் மையச்சரடை லேசில் அண்ட விடாமல் விலக்கிவிலக்கி நம்மை அலைக்கழிக்கும் சொல்முறை.. கண்கட்டி வித்தைக்காரனின் இலாவகத்துடன் வார்த்தைகளை நகர்த்துகிறார். நாம் தவிக்கிறோம் – என்ன சொல்ல வராரு இவரு? கதை முடியும்போது தான் இந்தத் தவிப்பும் முடிகிறது. இவருடைய பாத்திரங்களும் இவருடைய மொழியைப் போலவே மெல்லியவைகளாகத்தான் தெரிகின்றன, உரத்துப் பேசாதவை. அதிசயம் என்னவென்றால் உக்கிரமான போராட்டங்கள் – காட்சிகள் கூட இதே பாணியில் அதன் தீவிரம் கொஞ்சம் கூட குறையாமல் சொல்லப்படுவதுதான். இது இவருடைய தனித்தன்மை.

பலதளங்களைக் கொண்டவைகளாக இருக்கின்றன இவர் கதைகள். ஒரு உதாரணத்துக்கு, முதற்கதை. வேலையில்லாத் திண்டாட்டப் பிரச்சினையின் உக்கிரத்தால் மகன் தந்தையை அழித்துவிடக்கூட துணிந்து நிற்கும் நிலை அதன் முதல் தளம். இந்தத் தளத்துக்கு அடியில் நிழல்போல இன்னொரு தளமும் தெரிகிறது. வழிபாடு, தவம், இறைத்தொண்டு இவைகளில் எது சரி, எது தவறு என்பது நுட்பமாக சுட்டப்படுகின்றது. இதுபோல சுய அடையாளங்களின் சிதைவில் ஏக்கம் கொண்டு திரியும் மனிதர்கள் சோகத்தை ‘பனை’ ‘பெருநகரத்தடம்’, ‘செட்டிவளாகம்’ போன்ற கதைகளில் காணலாம்.

இன்றைய பண்பாட்டு நெருக்கடியில் பெருந்தெய்வ சிறுதெய்வமோதல்கள் என்பவற்றின் சுயரூபம் என்ன, என்பதை ‘ரோபோக்கதை’ அருமையாகச் சொல்கிறது. அதேபோல் இன்றைய ஜாதிய மோதல்களையும் அவற்றில் வீழ்ச்சியையும் நுட்பமாகக் காட்டுகிறது. இவற்றின் சிறப்பு அம்சம் என்னவென்றால், தான் இவற்றில் எந்தப் பக்கம் என்பதை ஆசிரியர் கத்திமுனையின் கூர்மையோடு துல்லியமாகச் சொல்லிவிடுவது தான்.

அவருடைய கதை ஒரு காட்சி அரங்கு போன்றது என்று ஏற்கனவே சொன்னேன். சாதாரண வாசகனுக்கு உள்ளே வெளிச்சம் பத்தாது. அதற்காக இது உன் விதி, கிடந்து தடுமாறு என்று அலட்சியமாக விட்டுவிடல்லை அவர். ஆங்காங்கே சில ‘‘அமுக்குப் பொத்தான்களை’’ வைத்திருக்கிறார். அவற்றை அமுக்கிவிட்டால் போதும், முழு மண்டபமும் ஒளியில் நிறைந்து விடும். காடன் மலையில் வரும் ‘மாமியார்’, பனையில்வரும் ‘நாராய் நாராய்’, கச்சிப்பேடில் வரும் மாம்பழம் அல்லது காக்கை, பெருநகர் தடத்தில் வரும் பாடல், இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

காடன்மலையில் உள்ள எல்லா கதைகளிலும் வருகின்ற முக்கியமான பாத்திரம் முத்துக்கருப்பன். இவன் ஆசிரியரின் மனச்சாட்சியின் குறியீடு என்றே தோன்றுகிறது. பிராமணர் தவிர்த்த அனைத்துச் சாதிகளிலும், முத்துக்கருப்பன் பிறக்கிறான். பல்வேறு நிலைகளில் செயல்படுகிறான். போராடுபவனாக, தன்மானம் உள்ளவனாக, படிப்பவனாக, உழைப்பவனாக சுய அடையாளங்களை விட்டுக் கொடுக்காதவனாக எந்த கூச்சமும் இல்லாமல் பறையன் முதல் கோனார்பிள்ளை வரை எந்த சாதியிலேயும் இயங்குகின்ற இவன் யார்? ஒரு கோணத்தில் இவன் தான் எழுத்தாளர் அரங்கநாதன். இப்படிதான் அவருடைய மாண்புகளைப் புரிந்து கொள்கிறேன். அற்புதமான கலைஞர்.                            

- பொன்னீலன்

 
ஆவணப்படம்

முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...

மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved