Girl in a jacket

ஆழமும் நுட்பமும் மிகுந்த மனிதராக தொகுப்பில் வெளிப்படுகிறார் மா. அரங்கநாதன்.

- க. பஞ்சாங்கம்

தமிழ்ப் புனைகதை வெளியில் குறிப்பிடத் தக்க ஓர் எழுத்தாளர் மா. அரங்கநாதன். முன்றில் மூலம் சிறுபத்திரிகைத் தளத்திலும் அவர் அழுத்தமாகத் தடம் பதித்தவர். ஆரவாரமில்லாமல் தனக்கான ஒரு புள்ளியில் நின்று கொண்டு எதிர்பார்ப்புகள் அற்ற ஒரு தளத்தில் தீவிரமாக இயங்கும் பழக்கத்திற்கு உள்ளாகிவிடும்போது, நுட்பமான பார்வைகளும், அவற்றை மேலான முறையில் பதிவு பண்ணும் மொழிவாகும் இயல்பாக்க் கூடி வந்துவிடும் போலும். அப்படி ஒரு முறையில், அவர் ‘நவீன விருட்சம், தீபம், ஞானரதம், முன்றில், கதைசொல்லி, கவிதா சரண் முதலிய இதழ்களில் எழுதியவற்றை தொகுத்துக் காவ்யா வெளியிட்டுள்ளது பாராட்டத்தக்க நல்லதொரு முயற்சியாகும்.

நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு. பிறக்கிற குழந்தையிலிருந்து இறக்கிற முதியவர் வரை அனைவருக்கம் அறிவுத்தளம் ஒன்றாகவே இருந்துவிட்டால் இந்த ‘மாய வாழ்வுதான்’ எவ்வளவு எளிதான ஒன்றாகப் போய்விடும். ஆனால் அடுத்த கணமே அப்படி அமைந்துவிட்டால் இந்த வாழ்க்கையில் படி அமைந்துவிட்டால் இந்த வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருக்கும்? வாழ்வதற்கான ஆதாரம் என்னவாக இருக்கும்? வாழ்வதற்கான ஆதாரம் என்னவாக இருக்கும்? என்ன தேடல் இருக்கும்? அழகு இருக்குமா? அசிங்கம் இருக்குமா? போன்ற சிந்தனைகள் மேலோடி அந்த நினைப்பின் தட மேயில்லாதபடி அழித்துவிடும். வாழ்வின் அழகே அதன் பன் முகத்தன்மையில்தான் இருக்கிறது. இந்தப் புத்தகத்தில் மா. அரங்கநாதன் ‘பொருளின் பொருள்’ என்ற தலைப்பில் இதுவரையிலான கவிதை குறித்த பன்முகப்பட்ட அனைத்துக் கருத்துக்களையும் முன்னே நிறுத்தி அலசிவிடுகிறார். அந்த அலசலும் கவித்துவம் மிக்க நுட்பமான மொழியில் நிகழ்த்தப்படுகிறது என்பதுதான் அதன் சிறப்பு.

கவிதை கருத்தில் இல்லை. உவமை, உருவகம், படிம்ம், குறியீடு முதலியவற்றில் இல்லை. யாப்பில் இல்லை; வசனத்தில் இல்லை; ரிதத்தில் இல்லை; வார்த்தையில் இல்லை; மரபிலும் இல்லை; புதுமையிலும் இல்லை; தத்துவத்திலும் இல்லை. இவ்வாறு இதுவரை கவிதைக்குக் கொடுத்திருக்கும் விளக்கங்களையெல்லாம் தள்ளிவிட்டால், பிறகு கவிதை எதில்தான் இருக்கிறது என்றால், இவை எல்லாமும் கலந்த ஒன்றில் இருக்கிறது என்கிறார் அரங்கநாதன். மேலும், ‘இதுதான் புத்தரின் கொள்கைகள் என அறிந்துகொள்வதன் மூலம், புத்தரின் கொள்கைகளை அறியாதவராகி விடுகிறார்கள்’ என்று சொல்லப்படுவதை எடுத்துக்காட்டி, கவிதையும் விளக்கங்களுக்கு அப்பாற்பட்டது, புரிதலுக்குள் அடங்காத்து என்கிறார்.

‘கொலை வாளினை எட்டா!’ என்றாலும் ‘எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்ற்றியேன் பராபரமே!’ என்றாலும் வெளிப்படுகிற கவிதை அம்சம் என்பது ஒன்றுதான் எனக் கூறினால் மண்ணைவாரித் தூற்றுவார்கள் (ப.81) எனக் கூறும் அரங்கநாதன், கவிதையை அடையாளங்காண வேறுவழியில்லை என்கிறார். ஞானக்கூத்தனின் ‘அம்மாவின் பொய்கள்’ என்ற கவிதையையும் இப்படித்தான் அடையாளம் கண்டு பாராட்டுகிறார். இத்தகைய இடங்களில் அரங்கநாதனின் நமது வாழ்க்கை குறித்த புரிதல், மின்சாரம் போல நமக்குள் பாய்ந்து பரவத்தக்கதாக இருக்கிறது.

நாவல்கள் குறித்த விமர்சனத்திலும் அரங்கநாதனின் தனிப்புலமை பிரகாசமாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ‘இந்தக் கதை மாந்தர் என்னைப்போல் இருக்கிறார் என்று கையொடிக்க்க் கிளம்பினால் ஒரு கதைக்கு மேல் எந்த எழுத்தாளனாலும் எழுத முடியாது’ என்று நீல. பத்மநாபன் அடிபட்ட தகவலைத் தெரிவித்துவிட்டு இவ்வாறு எழுதுகிறார்: ‘நீல. பத்மநாபனை அடிக்கத் துணிந்தவன் வேறொன்றைச் செய்திருக்கலாம். நேராக அவரிடம் சென்று, ‘நீங்க எழுதியது நன்றாக இல்லை, குணச்சித்திரமே தப்பு’ என்று சொல்லி இதைவிடப் பெரிய வலியை ஏற்படுத்தியிருக்கலாம்’ (ப.99) என்கிறார். இதுதான் அரங்கநாதன்.

பா.விசாலத்தின் ‘உண்மை ஒளிர்கவென்று பாடவோ’ என்ற நாவல் குறித்த விமர்சனத்தில் நாவலில் இல்லாத பல வரலாற்றுக் குறிப்புகளைத் தருகிறார். நாவலில் வரும் மார்த்தாண்டவர்ம மகாராஜா, ‘பிராமணப் புரோகிதர் அறிவுரைப்படி, அனந்த பத்மநாப சுவாமிக்கு நடத்திய வேள்விக்காக தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த பதினைந்து குழந்தைகளை (நாடார், ஈழவர், பரதவர்) திருவனந்தபுரத்தில் பல இடங்களில் உயிருடன் புதைக்கச் செய்தவர்’ (ப.103). இவ்வாறு ஆதாரங்களோடு கூடிய பல அரிய தகவல்களையும் கனமான மேற்கோள்களையும் தனது எழுத்தினூடே விதைகள் போலத் தூவிச் செல்வது இவரது நடையின் தனிச்சிறப்பு எனச் சொல்ல வேண்டும்.

சிறுகதைகளைப் பற்றிப் பேசும்போதும் அரங்கநாதனின் மொழியாடல் புதருக்குள் நுழைந்து ஏதாவது கிடைக்காதா என்று கிளறுவதைப் போல புதிதாக நீள்கிறது. ஜராவதம், மௌனி, வெங்கட்சாமிநாதன் முதலியோரின் வைதீகச் சார்பு நிலையைச் சுட்டிக்காட்டும்போது அரங்கநாதன் மொழியிலும் கோபரசம் முறுக்கேறுவதைப் பார்க்க முடிகிறது (ப.115). க.நா.சு.வின் வைதீக எதிர்ப்பு நிலைப்பாட்டினையும் தனக்கு ஆதரவாகத் திரட்டிக் கொள்கிறார். சங்க இலக்கியமும் திருக்குறளும் வைதீக எதிர்ப்பால் விளைந்தவை (ப.126) என்று க.நா.சு. கூறுவதையும் எடுத்துக்காட்டுகிறார். ‘தாய்மொழியும் தந்தை மொழியும்’ என்ற பெரிய கட்டுரையிலும், ‘யாதும் ஊரே, மேலும் சில குறிப்புகள்’ ஆகிய கட்டுரைகளிலும் அரங்கநாதனின் வைதீக எதிர்ப்புப் பார்வை அழுத்தமாகப் புலப்படுகிறது.

மொத்தத்தில் அவரே ஒரு இடத்தில் கூறுவதுபோல, ‘அப்பாவிகள் அதிகம் நிறைந்த இலக்கிய உலகில்’ (ப.117) அரங்கநாதன் ஆழமும் நுட்பமும் நிறைந்த ஓர் அரிய மனிதராக இந்த எழுத்தின் மூலம் வெளிப்படுகிறார். ‘சாதாரணமான ஒரு மனிதனேயானாலும் எந்த ஒரு மேலான புத்தகத்தையும் விட அவனே உயர்ந்தவன்’ என்பார் கார்க்கி. அதுபோல அரங்கநாதனின் எழுத்திலும் மானுடம்தான் முதன்மை அறமாக என்று செயல்படுகிறது.

 
புகைப்படங்கள்




ஆவணப்படம்

முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...





மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved