Girl in a jacket

வீடுபேறு

சாலை நெடுஞ்சாலையானது சமீபத்தில் தானிருக்க வேண்டும். முனிசிப்பாலிடி ஆவணக் கோப்புகளில் எந்தவிதச் சான்றுமில்லை. ஓங்கி நின்ற கட்டிடங்களும் சினிமா அரங்குகளுமே அதை நெடுஞ்சாலையாக ஆக்கியிருக்கும். இரண்டு மைல் அளவிற்கு அது நீண்டு சென்றது. இடையே கணக்கற்ற உணவு விடுதிகள் - கடைகள். அதன் இரு கோடிகளிலும் இரண்டு காவல் நிலையங்கள் அவசியமாகையால் அவைகள் எல்லைக் கற்களாக நின்றன.

நட்ட நடுவில் ஒரு சந்தை - இரண்டு பட்சிணிகளுக்கும் உதவிற்று.

நெடுஞ்சாலை போலவே அந்தப் பட்டிணத்தில் எல்லாமே மாறிவிட்டிருக்கின்றன. மாற்றத்தை அவர் கவனித்தவாறே வந்திருக்க வேண்டும். பேருந்துப் பயணத்தைக் கட்டாயமாக மேற்கொண்டு வந்தவர், சிரமப்பட்டு பிரயாணம் செய்தார். எதிர்பார்த்திருந்ததைவிட அதிகமாகவே சிரமம் இருந்தது. ஆந்ச் சாலையில் டிராம் வண்டியில் செல்ல முடியவில்லையே என்ற நிராசை ஏற்கனவே ஏற்பட்டாகிவிட்டது. எட்டு தடவை அந்த நெடுஞ்சாலையில் வண்டி நின்று பிரயாணிகளை ஏற்றி இறக்கிவிட நிறுத்தம் செய்ய வேண்டும் என்பது அவருக்கு தொந்திருக்கவுமில்லை. இன்னும் ஒரு நிமிடம் அந்த வண்டியிலிருந்தால் தனக்கு ஏதாவது நேர்ந்து விடும் என்று அஞ்சியவராக அதிலிருந்து இறங்கி சாலையில் காலை வைத்தார். நெடுஞ்சாலை மண் அவர் காலில் பட்டது.

அதென்ன - இந்த நெடுஞ்சாலை பரிசுத்தமான ஏதாவது ஒருபடை வீடா – ஏதோ கோபுர தரிசனத்திற்காக தலையை உயர்த்திப் பார்ப்பது போல நின்றவிடத்திலேயே சுற்றிக் கொண்டார்.

ஒரு பத்து நிமிட அவகாசத்தில் அவர் உத்தேசமாக ஒரு குறிப்பிட்ட பிரதேச பக்கம் நெருங்கினார்;. நடுத்தரமான அந்த வீட்டை ஆழ்ந்த யோசனையுடன் வெகு நேரம் பார்த்து திருப்தியுடன் தலையசைத்துக் கொண்டார்.

நெடுஞ்சாலையின் மெத்தப் பெரிய கட்டிடங்களின் பக்கத்திலும் சிலவிடங்களில் முடி வெட்டும் கடைகளின் பின்புறங்களிலும் இருப்பவைதாம் குடும்பத்தலங்கள். சொல்லப் போனால் இவை அந்தச் சாலையில் இருப்பதில் அர்த்தமில்லை. அவைகள் வேறெங்காவது மைதானங்களில் மாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நெடுஞ்சாலையும் பழைய நிலைக்குத் திரும்பி விடும் என்ற நப்பாசை அந்தக் குடித்தன வாசிகளுக்கு இருந்தது போலும். அவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து தலை குனிந்து வந்துபோகும் நபர்களாயிருந்தார்கள்.

502 என்ற எண்ணைப் பெற்றிருந்த அந்த வீடு திறந்திருந்தது. முகப்பில் பெயர்ப் பலகையொன்று  அடித்து மாட்டப்பட்டிருந்தது. கதவைத் தட்டுவதானால் என்ன சொல்ல வேண்டுமென்பதை ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்து ‘Sir’ என்பதைத் தமிழாக்கம் செய்துகொண்டு வந்தவருக்கு வேலையில்லாது போயிற்று. ‘யாரு’ என்று கேட்டுக் கொண்டே வெளியே வந்தவர், வீட்டுக்காரராயிருக்கும். குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டிருந்தார். கட்டியிருந்த வேட்டி சரியான நிலையிலில்லை. நரைத்த அவரது தலைமுடி குழந்தையின் கைப்பிடியில் சிக்குண்டு கிடக்க, ஒரு கையால் மட்டும் உடையை சமன் செய்தவாறு ‘யாரு’ என்று கேட்டார்.

வந்தவர் பதில் சொல்லுமுன்னர் குழந்தை முரண்டு பிடித்தது. அதை உள்ளே கொண்டு விட்டுவிட்டு வந்து “வாங்க – எங்கிருந்து வாறீக” என்று கேட்டார். திரும்பவும் குழந்தை உள்ளிருந்து தன்னை வந்தடைவதற்குள் சம்பாசஷணை முடிந்துவிடும் என்ற நம்பிக்கை.

இரண்டாவது கேள்விக்கு “ஸான்பிரான்ஸிஸ்கோ” என்று வந்தவர் பதில் சொல்லி விடுவது சுலபம். நல்ல ஆரம்பத்திற்கு அது வழி கோலாது என்பதால் இயல்பாகவே பேசினார்.

“நான் பாலகிருஷ்ணன். இரண்டு நாள் முன்புதான் பட்டணம் வந்தேன். இந்த வீட்டைப் பார்த்துப் போகலாம்னு வந்திருக்கேன் - ஒரு நாற்பது வருடம் - அதற்கு முந்தி நாங்க இங்கதான் இருந்தோம்.”

வீட்டுக்காரர் பேசவில்லை. பேசாது உள்ளே சென்று விநோதமான ஒரு நாற்காலியைத் தூக்கி வந்தார். தரையில் ஒரு தட்டுத் தட்டி, அதை விரித்தார். உட்காரும்படிச் சொல்லிவிட்டு பக்கத்து முக்காலியொன்றில் அமர்ந்து கொண்டார்.

பாலகிருஷ்ணன் சிறிது நேரம் தலை குனிந்து உட்கார்ந்திருந்தார். பிறகு மெதுவாக “நாம சந்திச்சதில்லே. உங்க அப்பாவை மட்டும் ஒரு தடவை பார்த்திருக்கேன். நாம இரண்டு பேருக்கும் ஒரெ வயசுன்னு அவர் சொல்லியிருக்கார் – உங்க பேரு முத்துக்கறுப்பன் - இல்லையா?”

வீட்டுக்காரர் தலையசைத்தார். சப்தம் கேட்டு உள்ளே திரும்பிப் பார்த்து ‘வந்துட்டியா – வா’ என்று கைகளை விரித்துக் கொண்டு வந்த குழந்தையைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டார். பிறகு ‘பேத்தி’ என்று வந்தவரிடம் சொன்னார்.

பேத்தி இப்போது சாதுவாக உட்கார்ந்திருந்தாள். உள்ளே குடத்தைக் கவிழ்த்துவிட்டு வந்த காரணத்தாலிருக்கலாம் - பல்லியைப் பார்த்து விட்டதாலுமிருக்கும்.

சம்பாஷணை தொடர்ந்தது. பாலகிருஷ்ணன் கம்பளிவுடை அணிந்திருந்தார். டிசம்பர் குளிர் முத்துக்கறுப்பனை ஒன்றும் செய்ததாகத் தெரியவில்லை.

“உங்க அப்பாவை ”நான் பார்க்கும்போது எனக்கு இருபது வயசிருக்கும். கழுத்தில் மாலை போட்டிருப்பார். பேரு ஞாபகமில்லே.”

“பண்டாரம் பிள்ளை” என்று உதவினார் முத்துக்கறுப்பன்.

“ஆமாம்-நிறையப் படிச்சவர்னு எங்கப்பா சொல்லுவார்.”

முத்துக்கறுப்பன் குழந்தையின் தலையைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அது மெதுவாக அவர் மடியிலிருந்து கீழே இறங்கி தரையில் உட்கார்ந்து கொண்டது. அடிக்கொரு தரம் இருவரையும் பார்த்துக் கொண்டு தூணைப் பிடித்துச் சுற்றி வரவாரம்பித்தது.

“அவங்க இப்போ...”

“போயாச்சு – அது ஆச்சு ஒரு நாப்பது வருசம் - இந்த வீட்டுக்கு வந்து ஒரு தடவை ஊருக்குப் போயிருந்த சமயம். அது கதை – நீங்க இங்க விட்டு போயி எவ்வளவு காலமாச்சு.”

“ஆச்சே-கிட்டத்தட்ட அத்தனை வருசம்-இப்ப ஸ்டேட்ஸ்லேயிருக்கேன. அங்கேயேதான் எல்லாம். இங்க எல்லாவற்றையும் ஒரு தரம் பாத்துட்டு போயிரலாம்னு வந்திருக்கோம்.”

“யாரெல்லாம்.”

“நானும் என் மனைவியும்தான். அங்கேயே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.”

“அப்படியா-நீங்க அழைச்சுக்கிட்டு வந்திருக்கலாமே.”

“வரேன், சொல்லுங்க உங்க அப்பா...”

“திருச்செந்தூர் போய் வாரேன்னு புறப்பட்டாரு. போய் ஒரு வாரமாயும் திரும்பலே. இங்கிருந்து போய் எல்லாருமா தேடியாச்சு. பேப்பரிலே கூட விளம்பரம் கொடுத்தோம். தகவலில்லே. ஆச்சு நாப்பது வருசம்.”

பாலகிருஷ்ணன் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

“நீங்க ஏதாவது சாப்பிடரேளா” என்று ஏதோ திடீர் நினைவுடன் கேட்டார் முத்துக்கறுப்பன்.

“வேண்டாம் - அடையார் ஹோட்டலில்தான் இப்போ தங்கியிருக்கோம். சாப்பிட்டாச்சு. நிறைய இட்லியும், தேங்காய்ச் சட்னியும் - நல்லாவேயிருந்தது.”

“ம் - தேங்காய் எங்க கிடைக்குது – ஏதோ ஒரு சட்னி.”

“ஆமா – ரொம்பவும் மாறிப்போச்சு – உங்க அப்பா விஷயம் சொன்னீங்களே இம்மாதிரி யாருக்கும் ஏற்படறதில்லே... அம்மா.”

“அம்மா வந்து அப்பாவுக்கும் முந்தியே போயிட்டா – நீங்க அங்க இருக்கிற இடம் - ஏதோ ஒரு இடம் பேரு சொன்னேளே.”

“அமெரிக்காவிலே உள்ள பட்டணம் - ஸான்பிரான்ஸிஸ்கோ – நல்ல இடம். தென்னை கூட உண்டு. வெயிலும் குளிரும் நம்ம ஊர் மாதிரிதான் - கிட்டத்தட்ட நாப்பது வருசம். ஊர்ப்ப்பக்கமே வரலே. வரணும்ன்னும் தோணலே.”

குழந்தை இரண்டு பேராகப் பேசிக் கொண்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. பாலகிருஷ்ணன் கழுத்தை உயர்த்தி மேல் விட்டத்தைப் பார்த்துக் கொண்டார்.

ஒரு பெண் தடதடவென வெளியிலிருந்து வந்து அவர்களை கடந்து உள்ளே விரைந்து சென்றாள். குழந்தை அவளைக் கண்டதும் மலர்ச்சியுடன் சிரித்துக் கொண்டே பின் தொடர்ந்தது.

“இவ வீட்டு வேலைகளையெல்லாம் பாத்துக்கறா. என் வீட்டுக்காரி பள்ளிக்கூடம் போயிருக்கறா – அவ ஹெட்மாஸ்டர் – ரிட்டையராகிற வருசம்தான்.”

“நீங்க ரிட்டையராகி நாளிருக்கும்.”

“இல்லே – நான் வேலையே பார்க்கல்லே – படிப்பை நிறுத்திட்டேன். படிப்பு வராதுன்னு அப்பாவே சொல்லிகிட்டிருப்பார். இந்தத் தெரு கடைசியிலிருக்கிற அச்சாபிசிலேதான் இரண்டு வருஷம் வேலை பாத்தேன். அம்மா இரண்டு நாளிலே படுக்கையிலே கிடந்து போயிட்டா. எனக்கு தகவல் கிடைக்கல்லே. நான் அப்போ ஊருக்குப் போயிருந்தேன். வருவதுக்குள்ளே எல்லாம் முடிஞ்சு போச்சு. அடுத்த வருஷம் அப்பா போயிட்டாரு – காணாமல் போயிட்டாரு.”

“மக வயத்துப் பேத்திதானே இது.”

“ஆமா – அவளும் இல்லே. இந்தக் குழந்தையை என்கிட்டே கொண்டு வந்து தந்தா – “இரண்டு நாள் இங்கே இருக்கட்டும். பிறகு வரேன்”னு வேலூருக்குப் போனா. மருமகப் பிள்ளைக்கு அங்கே வேலை – பிறகு வரவேயில்லை. போய்ப் பார்த்தேன். மருமகப் பிள்ளையை கைது பண்ணியிருக்கிறா – ஏதொ ஒரு கேஸ் - அது முடியறதுக்குள்ளே இந்தப் பெண் என்னவோ ஏதோன்னு பயந்து எதையோ சாப்பிட்டுட்டா. நான் அவ கடைசிக் கால முகத்தைப் பாக்கல்லே. சொல்லப் போனா பிறகு கேசே இல்லே. போலீசிலே விட்டுட்டா. இப்போ அவன் சௌகர்யமா கல்யாணம் பண்ணிட்டு அங்கேயே இருக்கான். இங்கே கூட அடிக்கடி வந்து குழந்தையைப் பார்த்துப்பான். சொல்லப்போனா மூணு பேருமே காணாமல்த்தான் போயிட்டா. அப்பாவே சொல்லிக்கிட்டுருப்பாரு – “எல்லாம் நல்லாத்தான் இருக்கு. எங்க போனாலும் நல்லாவேயிருக்கும். எங்காவது போய் அப்படியே எங்க போனோம்னு தெரியாமலேயே போயிதிரும்பி வராமலேயிருந்துட்டா இன்னும் நல்லாயிருக்கும்” அப்படின்னு.”

சொல்லிவிட்டு முத்துக்கறுப்பன் உள்ளே போய் ஏதோ சொல்லி விட்டு வந்தார். அந்தப் பெண் இரண்டு தம்ளர்களில் பானம் கொண்டு வந்தாள். அவள் சேலையைப் பிடித்துக் கொண்டு குழந்தையும் பிரசன்னமாகியது.

மணி பதினொன்று ஆகிவிட்டது. நெடுஞ்சாலையில் நெரிசல் குறையத் தொடங்கிருந்தது. வண்டி இரைச்சல் லேசாகியது.

இப்போது குழந்தை பாலகிருஷ்ணனை நேருக்கு நேராகப் பார்த்தது. முத்துக்கறுப்பன் அதன் தலையைத் தடவிக் கொடுக்க வாரம்பித்தார்.

‘டமார்’ என்று எதிர்டீக்கடையில் சப்தம். முத்துக்கறுப்பன் வெகுவேகமாகப் பார்த்தார். தலையை அசைத்து புரிந்து விட்டதற்கான அறிகுறியைக் காட்டினார். சாவதானமாக பாலகிருஷ்ணனைப் பார்த்து ‘சாப்பிடுங்க’ என்றார். வெளியே கேட்ட சப்தம் அலுமினியப் பாத்திரம் ஒன்று தெருவில் வீசப்பட்டதாலும் அதைத் தொடர்ந்து டீக்கடைப் பக்கம் நின்று கொண்டிருந்த ஒரு பிச்சைக்காரியாலும்தாம்.

“இவள் எப்பவும் இந்தக் கடையில்தான் வந்து நிப்பா. நீங்க பாக்கறேளே இந்தப் பிச்சைக்காரி - இவள் இந்தக் கடை வாசலில்தான் நிற்பா – பத்தடி தள்ளியுள்ள கடைக்குப் போறதில்லே. அங்கே போக ஒரு மதிப்புக் குறைவு – அந்தக் கடைக்காரன் இவளது ஊர் ஆள் - போகமாட்டா - இங்கே ஏச்சும் பேச்சும்னாலும் பழிக்கிடையா இங்கேதான் - எப்படி இருக்கு – ஒரு பதினைந்து வருசமா நடக்குது.”

பதினைந்து வருட கால எண்ணிக்கையைக் கூறியதும் பால கிருஷ்ணன் சிறிது வியப்புக் குறி காட்டினார்.

ஸான்பிரான்ஸிஸ்கோவில் அவர் குறள் வகுப்புக் கூட நடத்தியிருக்கிறார். வருபவர்கள் அந்த ஊர் நண்பர்கள்தாம். ஐம்பது மைல் தூரத்திலிருந்து வந்து போவார்கள் - ஒரு பத்து வருட காலம்.

“அங்கே நல்ல சாப்பாடெல்லாம் கிடைக்குதா?”

“ஓ. நம்ம சாப்பாடே கிடைக்கும். ஆனா நான் சாப்பிடறது ரொட்டி தான். அதுவே போதும். இடம் ரொம்ப நல்லது – பழங்களெல்லாம் நல்லபடியாக கிடைக்குது – நம்ம அன்னாசி தாராளமா.”

அன்னாசியென்று சொன்னது சரிதானா என்ற கேள்வியில் ஒரு கணம் பேச்சு தடை பட்டது. முத்துக்கறுப்பன் தலையாட்டிக் கொண்டார். இருவரும் காப்பி சாப்பிட்டு முடித்தனர்.

“காப்பியெல்லாம் இங்கே அத்தனை வளமாகயிருக்காது. எல்லாமே மாறிப் போச்சு.”

“இங்கே ரோடு கடைசியிலே ஒரு ஹோட்டல் இருந்ததே – அங்கே கிடைக்கும் காப்பி.”

“நான் ஹோட்டல் பக்கம் போயி வருசமாச்சு” என்றார் முத்துக் கறுப்பன்.

() () ()

நெடுஞ்சாலையிலிருந்து கிழக்காகப் பிரிந்து செல்வது கடற்கரைக்கும் தென்கிழக்காகப் பிரிந்து செல்வது சுடுகாட்டிற்கும் வழி காட்டும். மேற்கே திரும்பிப் போவது பட்டணத்தின் நாகரிகம் புழக்கத்திலுள்ள இடங்களுக்கு.

“பீச் ரோடில் அந்தக் காலத்தில் ஒரே ஒரு புத்தகக் கடைதான் இருந்தது” என்று பாலகிருஷ்ணன் கூறினார். “நான் அங்கேயுள்ள ஒருவரிடம் தமிழ்ப் பாடங்கேட்பேன். தலைப்பாகை போட்டிருப்பார். பேர் மறந்து போய்விட்டது.”

“தெரியலே - இருக்கும். நீங்க இந்த வீட்டிலிருந்த பிறகு திண்டிவனம் போயிட்டதாக அப்பா வொல்வாகளே” என்று விசாரித்தார் முத்துக்கறுப்பன்.

“ஆமா. அங்கு போய் கொஞ்ச காலம் இருந்தோம் - அப்பாவும் நானும்.”

“அம்மா.”

“அம்மா” என்றார் பாலகிருஷ்ணன். “அவ இங்கே இந்த வீட்டில் இருக்கையிலேயே போயிட்டா” என்று சொல்லி மேலே விட்டத்தைப் பார்த்தார்.

“இதுக்கு மேலே ஒரு ரூம் இருக்கல்லவா? அங்கதான்” என்று திரும்பவும் சொன்னார்.

“அப்படியா எனக்குத் தெரியாதே” என்று முத்துக்கறுப்பன் தலையை உயர்த்தினார்.

“ஆமா – நான் காலேஜ் விட்டு வர சமயம் - அப்பதான் போய்ட்டேயிருக்கிறா.”

முத்துக்கறுப்பன் நேராக பாலகிருஷ்ணனை பார்த்தார்.

“அம்மா தொங்கிக் கொண்டிருக்கிறா. நான் கதவை உடைக்கப் பார்க்கிறேன். சன்னலை மட்டுமே திறக்க முடிந்தது.”

இருவரும் சிறிது நேரம் பேசாதிருந்தனர். “எனக்குத் தெரியாதே” என்று முனகிக் கொண்டார் முத்துக்கறுப்பன். காரண காரியங்களைப் பற்றிக் கேட்க துணிவில்லை.

“ஏதாவது சாப்பிடலாம்-பகல்லே கொஞ்சம் பலகாரம்தான் நான் சாப்டறது – உப்புமா ஏதாவது இந்தப் பெண் செய்வாள். பள்ளிக்கூடம் முடிந்து அவள் வர ஆறு ஆயிடும். வந்துதான் பொங்குவா.”

முத்துக்கறுப்பனின் ஆலோசனைக்கு பாலகிருஷ்ணன் கையமாத்தினார்.

“இப்ப வேண்டாம் - நான் ஆறு மணிக்கு சாப்பாடே எடுத்துப்பேன். பகல்லே ஏதாவது சாண்ட்விச் காப்பிதான்.”

குழந்தை உள்ளே தூங்கிக் கொண்டிருந்தது. பாலகிரு‘;ணன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

“அம்மா விஷயம் முடிந்த பிறகு திண்டிவனத்தில் நாங்க இருந்தது கொஞ்சகாலம்தான் - இங்க இருந்த மாதிரி என்னால் அங்கே முடியல்லே. வயல் வரப்பிலேயெல்லாம் நடப்பேன் - அது ஒண்ணுதான் எனக்குக் கிடைச்சுது.”

“உங்க சொந்த ஊரு திண்டிவனம்தானே.”

“ஆமா – அப்பா அங்கேதான் காலமானது. அதுவும் வயல்க் கரையில் வைத்து – என் மடியில். காலையிலே வரப்பிலே நடந்து கொண்டே என்னைத் திரும்பிப் பார்த்து ‘டேய் வலிக்குது – தலை சுத்துது’ அப்படின்னார். கொஞ்சம் உட்காரேன்னேன். உட்கார்ந்தவர் என் மடியிலே தன் தலையை வைத்துக் கொள்ளும்படி சைகை செய்தார். இரண்டு நிமிடத்திலே போயிட்டார். அந்த இடத்தைப் பார்த்துட்டுத்தான் இங்கே வரேன்.”

‘சிவா’ என்ற பழகிப்போன வார்த்தை முத்துக்கறுப்பனிடமிருந்து வந்தது.

“திண்டிவனத்திலே எனக்கு ஒரே ஒரு நண்பன். என்னோடு காலேஜ் வரை படிச்சான். நாங்க அங்க போனதும் ரெண்டு பேரும்தான் எங்கேயும் போவதும் வருவதும். ஏரியிலே போய் குளிப்போம். அவன் ஏரியிலே மூழ்கிச் செத்தான். தண்ணீரிலே மூழ்கி கைவிரல் இரண்டும் வெளியே தெரிய நான் பார்த்து நின்றேன். நான் பார்த்த கடைசிச் சாவு! நான் அதன் பிறகு அங்கு இருக்க விரும்பல்லே. விவசாய சம்பந்தமா படிச்சிருந்தேன். எனக்கு ரொம்ப சுலபமா வெளியே பேக வழி கிடைச்சுது. உருளைக் கிழங்கு சம்பந்தமா ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதி எனக்கு பேரு கிடைச்சு – உத்யோகமும் ஆச்சு.”

“அமெரிக்காவிலேயா?”

“இல்லே முதலில் கானடா. எனக்கும் பிடிச்சுப் போச்சு. இரண்டாம் உலகச் சண்டே சமயமெல்லாம் அங்கேதான். பிறகுதான் ஸ்டேட்ஸ். நல்லகம்பெனி. விவசாயப் பண்ணை உள்ளேயே - இடமும் நல்லாவேயிருந்தது. நிறைய சருசம் அங்கேதானிருந்தேன். பதினைஞ்சு தமிழ்க்காரங்க சேர்ந்து சங்கம் கூட வைச்சோம். ஒரு நாள் பூரா தமிழ்லேயே பேசுவோம். கம்பெனி டைரக்டர் குடும்பத்தார்க்கு விடுமுறை நாளில் குறள் சொல்லுவேன். அவருடைய மகள் மட்டும் நல்லா படிச்சா. நாங்க ரெண்டு பேருமே படிச்சுக்கிட்டோம் - ஆமாங்க. ரெண்டு வருசங்கழிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஒரு முப்பத்தஞ்சு வருஷம் சௌகர்யமாயிருக்கோம்.”

“பிள்ளைக.”

“இல்லே – வேண்டாம்னு தீர்மானிச்சுட்டோம். காரணந்தெரியாமலேயே எனக்கு அது சரியாப்பட்டது. பல சமயம் என்னை தமிழ்ப் பேசச் சொல்லிக் கேட்டிருப்பா. ஒரு சமயம் ஒரு சந்தேகம் கேட்டா – நல்ல சந்தேகம் - என் பதிலைக் கேட்டுச் சிரிச்சா – ஆனா சிரிக்க வேண்டிய விஷயம்தான்.”

“திண்டிவனத்தை நினைத்துக் கொண்டு இந்த ‘கப்லெட்’டைச் சொன்னால் வேறு எப்படியிருக்கும் - நன்றாகத்தானிருக்கும்” என்பது தான் அவ சொன்னது. நீங்க என்ன நினைக்கறீங்க.”

முத்துக்கறுப்பன் பதில் சொல்லவில்லை. அது பதில் எதிர்பாராத கேள்வியென்று எண்ணிக் கொண்டது போல் சம்பாஷணையில் ஆழ்ந்திருந்தார்.

“எடித் - அவ பேரு – என்ன சொன்னாலும் மறுபேச்சே இல்லே. தமிழ்நாடு போலாம்னாலும் இங்கேயே இருக்கணும் அப்படின்னாலும் ஓ.கே.தான்.”

இருவர் முகங்களிலும் ஒரு மலர்ச்சி தெரிந்தது. அவர்கள் தங்கள் சம்பா‘ணையை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.

“மிஸ்டர் முத்துக்கறுப்பன், நான் உங்களுக்கு கடன் பட்டிருக்கேன். நான் இங்க வந்தது அந்த ரூம் - என் அம்மா போய்ச் சேர்ந்த அந்த அறை-அதை ஒரு தடவை பார்க்கலாம்னுதான்.”

“அதுக்கென்ன?”

“எப்படியிருக்குமோன்னு நான் எடித்தை ஹோட்டலிலேயே விட்டு வந்தேன். உங்களுக்கு கஷ்டமில்லையென்றால் ஒன்று செய்யலாம்.”

“சொல்லுங்களேன்.”

“வீட்டிலே குழந்தையைப் பாத்துக்க ஆள் இருக்கில்லா?”

“அவ – அந்தப் பெண் இருக்கா - இருப்பா – சாயந்தரம் வரைக்கும்.”

“அப்போ – வாங்களேன். ஒரு தடவை இந்த சாலையிலே நடந்து வரலாம் - டிசம்பர் வெயில்தானே.”

() () ()

கடற்கரை செல்லும் சாலையில் ஒரு சந்திலிருப்பது சுப்புவையர் உணவு விடுதி – பலகாரங்களும் கிடைக்கும். இலைகள் கழுவி வைக்கப் பட்டிருக்கும். யாரும் தண்ணீர் ஊற்றக் கூடாது. கூட்டு – கறி எதுவும் இரண்டு தடவைக்கு மேலே போடப்பட மாட்டாது. ‘வேண்டாம்னா போயிடுங்கோ” என்பார் சுப்பு. ரொம்பவும் கண்டிப்பு. ஆனால் அத்தனைக்கத்தனை சாப்பாடு ருசி.

அந்த விடுதி என்றில்லை. புழுங்கலரிசிச் சோற்றிற்கு ஏற்கும் நபர் காண வேண்டிய இடமும், ரவா தோசைக்கு போக வேண்டிய பவனமும் அந்த நெடுஞ்சாலையில் வகை வகையாக வரையறுக்கபட்டிருந்தது. உண்ணுங்கலை பொதுவாக வரவேற்கப்பட்டது. புதிய தயாரிப்புகள் உற்சாகப்படுத்தப்பட்டன.

இது தவிர நடைபாதைகளில் தயாரிக்கப்படும் ஆப்பங்கள் சொல்லப்பட வேண்டியவை. முதிய பெண்கள் தயாரிக்கும் ருசியான பண்டங்கள் நெடுஞ்சாலை வாசிகளின் நாகரீகத்தைத் தூளாக்கும். அந்தச் சிறிய தெரு வழி புகுந்து வருகையில் ‘நான் இங்கே சாப்பிட்டிருக்கேன்’ என்று முத்துக்கறுப்பனுக்கு அந்த ‘மெஸ்’ஸைக் காட்டினார் பால கிருஷ்ணன்.

“அப்படியா - இந்த வழியிலேயே இப்பதான் வாரேன் -  ஹோட்டல் போய் வருசக் கணக்காச்சு.”

“ஒரு காப்பி சாப்பிடலாமா – பசியில்லே – ஆனால் சாப்பிடலாமே.”

பாலகிருஷ்ணன் கெஞ்சினார். முத்துக்கறுப்பன் வாய் விட்டுச் சிரித்தார்.

காப்பி சாப்பிடுகையில் அந்த இடத்தையும் சாப்பிடுபவர்களையும் இருவரும் பார்த்துக் கொண்டனர்.

“வீடாகத்தானிருந்தது. நடுவில் முற்றமிருக்கும். இப்போ இல்லை – மற்றபடி மாற்றமில்லை” என்று ரசித்தார் பாலகிருஷ்ணன்.

“இருக்கும் - எனக்குத் தெரியாது. ஆனா காப்பி நல்லாயிருக்கு.”

“அங்கே ஸ்டேட்ஸ்லே நானும் சில சமயம் வெளியே சாப்பிடப் போவோம். முன் கூட்டித் தெரிவிக்கணும். இப்பவெல்லாம் கார் நிறுத்த முடியாது. ஆனா சாப்பாடு ரொம்ப ஆரோக்யமாயிருக்கும். கடைசியா அவள் ‘டெசர்ட்’ எடுத்துக் கொள்வா – நான் காப்பி.”

“வீ டெல்லாம் சௌகர்யமா இருக்குமா?”

“நாங்க இப்ப இருக்கிறது ஸான்பிரான்ஸிஸ்கோ சிட்டியிலேயே – சௌகர்யம்தான். ரோடு ஒரு குன்னிலிருந்து இறங்கிப் போவது மாதிரி ஒரு இடம் உண்டு – நீங்க சினிமாவிலே கூட பார்த்திருக்கலாம் - அடிக்கடி அதே இடத்தைக் காட்டுவாங்க.”

“சிவகவி படம்தான் நான் பார்த்த ஒரே படம்” என்றார் முத்துக் கறுப்பன்.

“இப்பவெல்லாம் அங்க தமிழ் சினிமா நிறைய பார்க்கலாம். போன வருசம்தான் நான் மனோன்மணி பார்த்தேன்.”

“அப்பாவுக்கு சினிமா பிடிக்காது. எனக்கும் அந்த பழக்கம் வரலே. நம்ம சாலையிலே ரெண்டு தியேட்டர். ஒண்ணை நான் பார்த்ததேயில்லை. இன்னொன்ணு வீட்டு வாசல்லே நின்னா கண்ணில்படும்.”

இருவரும் சந்திலிருந்து கடற்கரைச் சாலைக்கு வருகையில் பால கிரு‘;ணன் அந்த ஒரேயோரு புத்தகக் கடையைத் தேடினார். ‘அவ்வளவு தூரம் போக வேண்டாம் - இந்த இடத்தில்தான்’ எனறு காற்றிலே வரைபடம் வரைந்து சுட்டிக் காட்டினார் – ஒரு மிலிட்டரி ஹோட்டல் தான் காட்சியளித்தது.

“கடற்கரை பார்க்கணுமா?” என்று முத்துக்கறுப்பன் கேட்டார்;.

“வேண்டாம்” என்று சுருக்கமாகப் பதில். பாலகிருஷ்ணன் யோசித்துக் கொண்டே நடந்தார்.

சாலையின் மேற்குப் பக்கமாகவிருக்கும் மைதானத்தின் ஒரு மூலையில் பெண்ணொருத்தி உடை மாற்றி நின்றாள். வெட்ட வெளியில் நாலைந்து கள்ளிப் பெட்டிகள், அந்தக் குடும்பத்தின் உறைவிடத்தை எடுது;துக் காட்டின. அவள் தன்னுடைய இடத்தில் பாதுகாப்பான நிலையில் குடும்பத்தைப் பரிபாலித்துக் கொண்டிருந்தாள்.

அவர்கள் மைதானத்தின் ஒரு பகுதியைக் கடந்து நெடுஞ்சாலையைத் தொடுமிடத்திற்கு வந்து சிறிது நேரம் நின்றனர். சுகமான குளிர். “இந்த இடத்தை குளிர் காலத்தில்தான் பார்க்க வேண்டும் - மழைக்கும் வெயிலுக்கும் பயந்து அடைந்து கிடக்க வேண்டியதில்லை” என்று கூறிய பாலகிருஷ்ணன் ஏதொ நினைப்பில் திடீரென நிறுத்திக் கொண்டார்.

அவர்கள் வீடு திரும்புகையில் குழந்தை வெளி நடையில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. அதைத் தூக்கிக் கொண்டார் முத்துக்கறுப்பன். “வா” என் கைகளை நீட்டிய பாலகிரு‘;ணன் அழைப்பை யோசனை செய்து தாத்தாவைப் பார்த்தது. அவர் பார்வை எதிரே சென்றது.

எதிரே டீக்கடைப் பக்கம் பிச்சைக்காரி ஒரு குவளையுடன் தரையில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். முத்துக்கறுப்பன் வெகுநேரம் வாசலருகேயே நின்றிருக்கக் கூடும். கூட்டம் தெருவில் அதிர்ந்தது. தூசுப்படலம் புதிதாக எழ ஆரம்பித்தது. அவர்கள் உள்ளே சென்றனர். இருவரும் இருமிக் கொண்டனர்.

முன்பு உட்கார்ந்திருந்த அதே நிலையில் நாற்காலியும் முக்காலியும் கிடந்தன. அவர்கள் உட்கார, வேலைக்காரப் பெண் வந்து குழந்தையை வாங்கிச் சென்றாள். “மூன்று மணிக்கு ஏதாவது தந்தால் போதும். உப்புமா செய்” என்று அவளிடம் கூறிவிட்டார் முத்துக் கறுப்பன்.

டீக்கடையைத் தாண்டி தூரத்தில் நெடுஞ்சாலை முனையில் இருந்தது உடுப்பி ஹோட்டல். அது முன்பு அச்சகமாக இருந்தபோது மட்டுமே முத்துக்கறுப்பனுக்குப் பாரிச்சயமான இடம். நெடுஞ்சாலையின் கடைசியிலிருந்ததால் இப்போது முத்துக்கறுப்பன் அதைப் பார்த்ததேயில்லை. அந்த ஹோட்டலின் மேல் மாடிகளில் அறை வசதிகள் உண்டு. வசதியான அறையொன்றில் தங்கியிருந்த வாலிபன் செய்த காரியமொன்றை சொல்வதற்காக உடுப்பிக் கடைக்காரர் முத்துக் கறுப்பனை முன்பு தேடி வந்தார். சொல்ல வந்த வி‘யத்தை அழுது கொண்டே சொல்வதுதான் நல்லது என்று தீர்மானித்தவர் போன்று ஆரம்பித்தார். கண்களும் உதடுகளும் கூம்பி சொற்கள் தீனமாக வெளிவந்தன. தங்கியிருந்த வாலிபன் முத்துக்கறுப்பனுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்பது நம்பிக்கை – ஊர் சம்பந்தப்பட்ட நம்பிக்கை.

“தெரியாது” என்றார் முத்துக்கறுப்பன்.

“ஆனா திருச்செந்தூர் பக்கம்தான் - உங்க ஊர்தான். லெட்ஜரில் எழுதும்போதே சொன்னான் - பாவி.”

“இருக்கட்டும் - இதுலே நான் செய்ய என்ன இருக்கு – சவத்தை விட்டுத் தள்ளுங்க.”

“அப்படி சொல்லப்படாது. நான் மானஸ்தன்.”

பாபியான வாலிபன் தவறேதும் செய்து விட்டதாகத் தகவலில்லை. அவரது பெண்ணை பதிவுத் திருமணம் செய்து கொண்டது போலீசில் சொல்ல வேண்டிய விஷயமாகாது. பையன் மூன்று மாத அட்வான்ஸ் கொடுத்து ரசீது வாங்கியிருப்பதால் அறையை விட்டும் ‘போ’ என்று சொல்லலாகாது. தங்க ஆரம்பித்த ஒரு மாதத்திற்குள் திருமணம் முடிந்து தம்பதியினர் அந்த அவரது விடுதி அறையிலேயே தங்கி இருவரும் முறையே தங்களது அலுவலகம் சென்று அங்கேயே குடித்தனம் பண்ணவாரம்பித்ததுதான் பாபமான வி‘யமாகி நின்றது.

“இல்லை – தெரியாது. எங்க ஊரிலேயே எனக்கு ரெண்டு பேரைத்தான் இப்போ தெரியும். நீங்க சொல்ற மாதிரி நான் வந்து அவன் கிட்ட பேசறதைவிட உங்க பெண் கிட்டே சொல்லி வேறே இடம் பாக்கச் சொல்லுங்கோ – சொல்லப் போனா நீங்களே ஒரு இடம் பாத்துக் கொடுத்துடலாம்.”

திருச்செந்தூர் இப்போதெல்லாம் அந்நியமாகத் தெரிகிறது முத்துக்கறுப்பனுக்கு.

“மிஸ்டர் பாலகிருஷ்ணன் - நீங்க உப்புமா சாப்பிட்டு எவ்வளவு காலமிருக்கும்.”

“அப்படியொன்றும் இல்லை - ஸ்டேட்ஸிலும் கிடைக்கும் - எடித்கூட செய்வாள் - எண்ணை அதிகமாகச் சேர்க்கிறதில்லே.”

“நீங்க மேலே போய்ப் பாக்கணும்னு சொன்னேளே.”

பாலகிருஷ்ணன் சாய்ந்து உட்கார்ந்தார்;. முத்துகறுப்பன் சிறிது யோசித்தவாறே சொன்னார்.

“மேலேயுள்ள அறை காலியாகத்தானிருக்கு – நான் அதைப் பாத்து வருசக் கணக்கிருக்கும்.”

“அது என்ன – ஏன்” என்பதாகப் பார்த்தார் பாலகிருஷ்ணன்.

“அப்படித்தான். எங்கேயும் போகக் கூடாது என்பதாக இல்லை. எனக்கு நேரமில்லை என்று சொன்னால் அது பொய்யுமில்லை. பேத்தியைத் தவிர நான் பார்க்க வேண்டிய இடம் இந்த வீட்டில் நிறையிருக்கிறது – எவ்வளவுதான் செய்ய முடியும்? பேசி முடிக்க வேண்டிய சீவன்கள் இப்போதிருக்கிற இடத்திலேயே வேண்டிய மட்டும் இருக்கு. அதுக்கே இந்த ஆயுசு போதாது என்று தோணுது. என்னவோ அப்படித்தான் தோணுது – அதுதான் ஒற்றுமைன்னு தெரியுது. குடும்பத்திலே ஒத்துமை – ஊரிலே – நாட்டிலே உலகத்திலே ஒத்துமை - இதெல்லாம் எவ்வளவு பொய்யாப்போச்சு - இதுக்கெல்லாம் அர்த்தம் ஏதாவதிருக்கா – என்ன மண்ணாங்கட்டியோ தெரியலை.”

பாலகிருஷ்ணன் பேசாதிருந்தார். உருளைக் கிழங்கு பண்ணைக்குச் சொந்தக்காரரின் மகள் எடித் அவருடன் பேசிக் கொண்டதற்கு குறிப்பிடும்படியான காரணமெதுவுமில்லை. பேசித்தானாக வேண்டிய கட்டாயமுமில்லை. இரண்டு அடிகளைக் கொண்ட செய்யுளுக்கு ஆங்கில விளக்கமளித்த அற்புதத்திற்கு அவள் மயங்கிவிட்டிருக்க முடியாது. அந்த நாளில் அந்த இடத்தில் அவர்கள் சம்பாஷணையின் ஒவ்வொரு சொல்லிற்கும் ஏதோ அர்த்தம் இருந்தது. அது ஒன்றுதான் அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும்.

“மிஸ்டர் முத்துக்கறுப்பன் நான் அவளை அழைத்து வராததிற்கு வேறு காரணமும் உண்டு. முதலில் அவள்  இதைப் பார்க்க வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. நான் பஸ்ஸில் இந்தச் சாலையில் வர விரும்பினேன். அவளால் பஸ்ஸில் வருவது க‘;டம்.”

“மிஸ்டர் முத்துக்கறுப்பன் நான் அவளை அழைத்து வராததிற்கு வேறு காரணமும் உண்டு. முதலில் அவள் இதைப் பார்க்க வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. நான் பஸ்ஸில் இந்தச் சாலையில் வர விரும்பினேன். அவளால் பஸ்ஸில் வருவது கஷ்டம்.”

“என்ன” என்பது போல கேட்டார் முத்துக்கறுப்பன்.

“எடித் காலில் அடிபட்டு சரியாக நடக்க முடியாதவள். பயணத்தில் விருப்பம் - ஆனால் நடக்க முடியாது.”

“அப்படியா!”

பாலகிருஷ்ணன் ரொம்ப நேரம் பேசாதிருந்தார். ஏதாவது கேள்வி வர வேண்டுமென காத்திருந்தார். முத்துக்கறுப்பன் அந்தப் பெண்ணைக் கூப்பிட்டு “மணியாச்சு – எங்களுக்கு ஏதாவது கொண்டு வா” என்று சொல்லிவிட்டு இரண்டு நாற்காலிகளுக்குமிடையே இன்னொரு விநோதமான காலுள்ள பலகையைக் கொண்டு வந்து நிறுத்தினார். அதன்மீது இரு தட்டுகளில் உப்புமா வந்தது.

‘ஆகா’ என்றார் பாலகிருஷ்ணன். சிற்றுண்டியினிடையே கிடந்த முந்திரிப் பருப்பை கையில் நிமிட்டி எடுத்து ஆராய்வது போல் தன் உள்ளங்கையில் வைத்து மலர்ச்சியுடன் பார்த்தார். முத்துக்கறுப்பன் சிரித்தவாறே சாப்பிட ஆரம்பித்தார்.

“முந்திரிப் பருப்பை சாப்பிடாதவன் வாழ்வென்ன வாழ்வா” என்று நான் நாற்பதுகளில் கலங்கியிருக்கிறேன் - இப்போ எங்கும் தாராளமாகக் கிடைக்குது. இருந்தாலும் இப்படித் தாளித்துப் போட்ட பருப்புக்குத்தான் என்ன ருசி.”

தண்ணீர் கொண்டு வந்தவளிடம் முத்துக்கறுப்பன் ஏதோ சொல்லியனுப்பினார். அவள் திரும்பி இரண்டு வாழைப்பழங்களுடன் வந்தாள்.

“நீங்க மத்தியானம் ஒண்ணும் சாப்பிடல்லே. இதை எடுத்துக்குங்கோ” என்று இரண்டையும் பாலகிருஷ்ணன் தட்டில் வைக்கச் சொன்னார்.

கல்யாணம் முடிந்து உணவு விடுதியொன்றில் சாப்பிட்டு முடிந்ததும் ‘எடித்’ தன் தகப்பனாருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தாள் - கல்யாணம் பண்ணிக்கொண்டோம் என்று. தகப்பனார் வாழ்த்துச் சொன்னார். தாயாரிடம் பேசுகையில் மட்டும் அவள் சிறிது கலங்கினதாக பாலகிருஷ்ணனுக்குத் தோன்றியது. தனது முடிவை ஏற்கனவே தெரிவித்திருந்தபடியால் நடந்து முடிந்துவிடும் என்பது பெற்றோருக்குத் தெரியும் - அவர்கள் சம்மதம் இருந்தாலும் இல்லாவிட்டாலும்.

கல்யாணம் நடந்த இரண்டாம் வருடம் எடித் தனது பாதி காலை இழந்தாள். அது பாலகிருஷ்ணன் ஊருக்குப் போய் வரலாமா என்று ஆலோசித்துக் கொண்டிருந்த நேரம்.

“வெள்ளரிக்காய் ஏதாவது சேர்த்துக் கொள்ரேளா” என்று கேட்டு, “நான் அடிக்கடி பலகாரத்துடன் சேத்துப்பேன். எனக்கு ஒத்து வருகிறது” என்றார் முத்துக்கறுப்பன்.

“கொஞ்சம் போதும் - அங்கேயும் கிடைக்கிறது.”

“பிறகுதான் ஸான்பிரான்ஸிஸ்கோ வந்தோம். நல்ல வேலை கிடைத்தது. அவளுக்கு நிம்மதியாகவிருக்க வசதிகள் செய்து கொடுத்தேன். எனது பணக் கஷ்டமெல்லாம் தீர்ந்தபோது – பணத்தை துச்சமாக மதிக்கத் தொடங்கியிருந்தபோது – அவள் பெற்றோர் அந்த விவசாயப் பண்ணையை எடித் பெயருக்குத் தந்து விட்டார்கள்.”

“இன்னுங் கொஞ்சம் உப்புமா.”

“வேண்டாம் - போதும்.”

சம்பாஷணையிடையே இருவரும் யோசித்துக் கொண்டும் இருந்ததாகத் தெரிந்தது. சாப்பிட்டு முடியும் தறுவாயில் பேச்சே இல்லை. எந்த வகையான வருத்தமும் இல்லாது எந்த மாதிரியான கொள்கையை பின்பற்றியுமில்லாது அமைபவைகள் மௌனத்தில்தான் முடியும் போலும். பிள்ளையின் உடம்பு மீது படர்ந்த சொறி சிரங்கை பெற்றவள் பார்த்து ஆராய்வது போல அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

யோசிப்பது பழக்கத்தில் வந்து பாதிப்புதான். அச்சாபீசில் வேலை பார்த்து வந்தபோதே முத்துக்கறுப்பன் முடிவு கட்டியதுண்டு – கொடுமைகள் மனித குலத்தின் அவசியமாக மாறிவிட்டதன் ஆரம்பமே இந்த யோசிப்பால்தானென்று.

அந்த அச்சகத்தில் வேலை செய்து வந்தபோது அத்தனை யோசனை செய்வதற்கு நேரம் இருந்ததில்லை. சிறிதளவு நேரம் இருந்ததென்றால் வேலைக் குறைவுதான் காரணம். முதலாளி மக்கு - இரண்டு இனிப்புகள் வேண்டும் தினசரி – குறிப்பிட்ட ஹோட்டலில் இருந்து வரவேண்டும். அவர் மனைவி நோயாளி – பெண் பட்டதாரி.

எப்போதோ நடந்திருக்க வேண்டிய நிகழ்ச்சி பின்னர் நடந்தது. அச்சகம் உடுப்பி ஹோட்டல்காரனுக்கு விலை பேசப்பட்டது. பெண்ணிற்கு கல்யாணம் பண்ணுவதைவிட மனைவியின் நோய் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டியதாயிற்று. குடும்பம் பாண்டிச்சேரிக்குப் பெயர்ந்து போக வேண்டியதவசியம். அதுதான் முதலாளியின் சொந்த ஊர்.

முத்துக்கறுப்பன் தனது வீட்டின் கீழ்ப் பகுதியை முப்பது ரூபாய்க்கு வாடகைக்கு விட்டிருந்தான். மேலேயிருந்த அறையில் தங்கிக்கொண்டு இரவில் சமைத்துச் சாப்பிட்டான். சித்தப்பா ஊரிலிருந்து வந்திருந்தபோது இவன் சரியாகப் பேசவில்லை என்ற புகாரோடு போய் விட்டபிறகு ஊர் ஆட்களென்று யாரையுமே பார்த்தது கிடையாது. முதலாளி வீட்டில் இரண்டொரு தடவை சாப்பிட்டிருக்கிறான். அந்த நோயாளியம்மாள் இவனிடம் கதை பேசுவதுண்டு. அவளது தெலுங்குத் தமிழ் முத்துக்கறுப்பனுக்குப் புரிந்தது.

அந்தப் பெண் படிப்பில் சுறுசுறுப்பானவள் போலும். எப்பொழுதும் படித்துக் கொண்டிருப்பாள். அவனிடம் பேசியதேயில்லை.

ஆனால் அப்படிப்பட்ட பெண் அவர்கள் பாண்டிச்சேரிக்குப் போக வேண்டிய நாளிற்கு முன்தினம் இவன் கால்களைப் பிடித்துக் கொண்டு அழுதிருக்கிறாள். “எனக்கு இந்த ஊரை விட்டுப் போக இஷ்டமில்லை – நான் யாருக்கும் பிரயோசனமில்லாதவளாப் போயிட்டேன் - உனக்குங்கூட” என்று அழுதாள்.

இரவில் அறை ஜன்னலின் அருகே நின்றுகொண்டு இந்த நெடுஞ்சாலையின் ஒவ்வொரு சீவராசியையும், சீவனில்லாத ராசிகளையும் பார்த்து காலத்தைக் கழித்து வரும் முத்துக்கறுப்பன் இந்த அழுகையைக் கண்டு மட்டுமே வியப்புற்றான். “பிரயோசனம்” என்று அவள் பயன்படுத்தியச் சொல்லைக் கேட்டு அவ்வாறு இருக்கவும் முடியுமா என்று வியந்தான்.

அவர்கள் எல்லோரையும் அவன் வண்டி ஏற்றிவிட்டு வந்தான். திரும்பி வருகையில் டிராம் வண்டியைத் தவிர்த்து நடந்து வந்தான். வெயிற்காலம் வருவதால் ஒரு மின்விசிறி வாங்கலாமா என்று யோசித்தான். அந்தப் பெண்ணின் வாழ்வு இனியொரு ஓட்டத்தில் கலந்து கொள்ளும் - தனது காலை பிடிக்க வேண்டிவராது என்று நம்பினான் - வேறு வழியில் ஓர் இக்கட்டு வந்தாலும் அது பெரிய விஷயமில்லை என்றும் ஓர் எண்ணம்.

பின்னர் நல்ல மழை நாளொன்றில் அவன் கடிதமெழுதினான் - அது பதில்க்கடிதம். அந்த நெடுஞ்சாலை ட்ராம் நிறுத்தத்தில் பின்னர் அவள் வந்திறங்கியது – வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு அவளை அழைத்துச் சென்றது – காலைப் பிடித்து அழுததிலிருந்து இதுவரை நடந்தவைகள் யாவும் வாழ்வோடு சேர்த்தியானவைதாம் என்பதாக அவர்கள் மணஞ்செய்து கொண்டது - இவை பற்றி இரவு நேரங்களில் நெடுஞ்சாலை உலகு உறங்கும் அழகைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது நினைவு எழும். கூடவேயே அந்த நெடுஞ்சாலையானது தன் பக்கமாக அவனை இழுத்துக் கொண்டுவிடும்.

“நீங்க இரண்டாம் உலக யுத்த சமயத்திலே இங்கேதானே இருந்தீங்க” என்று கேட்டார் பாலகிருஷ்ணன். சாப்பிட்டு முடித்து விட்டனர். சாலையில் போக்குவரத்து மிக அதிகமாகியிருந்தது.

“ஆமா - இங்கதான். நல்ல ஞாபகமிருக்கு. விளக்கெல்லாம் அணைச்சு ஊரடங்குச் சட்டமோ என்னவோ ஒண்ணு இருந்தது. நான் அப்ப மட்டும் வெளியே நடந்து வருவேன். அவ கோவிச்சுப்பா.”

“நான் அப்போ கானடா – அங்க ஒண்ணுமில்லே... ஆனா தினசரி இத்தனைப் பேர் செத்தாங்கன்னு பேப்பர்லே படிக்கறதுக்கு நாம் இருந்த இடத்திலேயே குண்டு விழணுமா என்ன... அதுசரி இப்ப மட்டும் என்ன வாழுதாம். வரலாறும் நிலநூலும் மீசை வைத்துக் கொண்டு பிறக்கவில்லை” என்று முடித்தார் பாலகிருஷ்ணன்.

முத்துக்கறுப்பன் பேசவில்லை. நான்கு மணிக்கு எதிரே டீக்கடை சுறுசுறுப்படையத் தொடங்கிற்று. அந்தப் பிச்சைக்காரி வந்து நிற்கத் தொடங்கினாள்.

() () ()

குழந்தை எழுந்து விட்டது. முகம் கழுவி அதைத் தூக்கிக் கொண்டு நடையருகே வந்து நின்றாள் வேலைக்காரப்பெண். கடந்து செல்லும் கார்களை பெருவிரலைத் தவிர மற்ற விரல்களால் எண்ணிக் கொண்டிருந்தது. தூரத்தில் எங்கோ படீர் என்று சப்தம், நெடுஞ்சாலை மக்கள் விரைந்து தங்கள் இருப்பிடங்களிலிருந்து வந்து பார்த்துவிட்டு என்னவென்று தெரிந்து கொள்ளாமலேயே உள்ளே திரும்பிக் கொண்டனர்.

“மிஸ்டர் பாலகிருஷ்ணன், எத்தனை நாள் இங்கே?”

“வந்த வேலை முடிஞ்சது. போக வேண்டியதுதான்.”

“வேறே இடங்க ஒண்ணும் பாக்காண்டமா?”

“இல்லே – திண்டிவனமும் இந்தப் பட்டணமும்தான்.”

“உங்க மனைவிக்கு தாஜ்மகால் அப்படியிருப்படின்னு காட்ட வேண்டாமா?”

“இல்லே – அவளுக்குப் பிரயாணம்தான் பிடிக்கும் - கட்டடங்கள் இல்லே – ஊர்களைப் பார்க்கணும்னு சொல்லுவா.”

முத்துக்கறுப்பன் சிறிது நேரம் பேசாமலிருந்தார். பிறகு சொன்னார்.

“நானும் அது போலத்தான்னு நினைக்கிறேன். ஊரையும் கொஞ்சம் சுருக்கி தெரு மட்டுமே போதும் என்றாகிவிட்டது. இப்போ ஒரேயொரு வீட்டை மாத்திரம் பாக்கவே நமக்கு நாள் போதாதுன்னு தெரியுது... உங்க மனைவி கேட்டது சரிதான். திண்டிவனத்தை நினைத்துக் கொண்டு திருக்குறள் படித்தால் நன்றாகத்தானிருக்கும். எந்த உரையை வைத்துக் கொண்டு எதைப் படித்துத் தேறப் போறமோ தெரியலே. இப்போதிருக்கிற இந்த இடம்தான் நாம போய்ச் சேர வேண்டிய இடம்தான்னு எனக்குத் தோணுது... என்ன சொல்றீக?”

அதன் பிறகு அவர்கள் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தனர். மணி ஆறு அடிக்ககையில் பாலகிருஷ்ணன் புறப்பட்டார். “அவ வர நேரந்தான் - உங்களைப் பாத்தா சந்தோ‘ப்படுவா. நீங்க உங்க வீட்டீலே நாளைக்கு அழைச்சுகிட்டு வரலாமே” என்று சொல்லி எழுந்து நின்றார் முத்துக்கறுப்பன்.

“நாளைக்கு வந்து போவது சிரமம். பத்து மணிக்கே புறப்படணும். இப்ப நான் சந்தோஷமாயிருக்கேன். உங்களைப் பத்திச் சொன்னா எடித் சந்தோஷப்படுவா.”

பாலகிருஷ்ணன் கை கூப்பினார். விடை கொடுத்து அனுப்ப தெரு நடை வந்தார் முத்துக்கறுப்பன். ஞாபகத்துடன் கேட்டார்.

“பாலகிருஷ்ணன் - மறந்திட்டேளே – நீங்க பாக்கலியே – அந்த அறை - மேலே” என்று கை தூக்கிக் காட்டினார்.

இரண்டு அடிகள் அந்தப் பக்கமாகச் சென்றவர் திரும்பி வந்தார்.

“நாங்க ஒரு தடவை கான்ஸாஸ் ஸிட்டி வரை பஸ் பயணம் செய்தோம். வழியிலே ஒரு கிழவி – நூறு வயது சொல்லலாம் - பஸ் படிக்கட்டில் ஏற முடியாமல் - ஆனால் - கம்பீரமாக முயன்று கொண்டிருந்தாள். எடித் முதலில் அவளை ஏற்றி சீட்டில் உட்கார வைத்தாள். ரொம்ப காலமாகிப் போச்சு – நேற்றைக்கு திண்டிவனத்தில் பஸ் ஸ்டாண்டில் ஒரு கிழவி பேச்சுக் கொடுத்துப் பார்த்தேன் - அந்த கான்ஸாஸ் ஸிட்டி சம்பவம் அவளுக்கு ஞாபகமேயில்லை.”

விட்டத்தை ஒரு தடவைப் பார்த்துவிட்டு ‘வேண்டாம்’ என்றார். “நமக்கு கூடிப்போனால் இன்னும் இருபது வருசம் ஆயுளிருக்கும்-அது போதாது – என்ன தோன்றுகிறது என்றால்...”

ஆனால் முடிக்கவில்லை. இல்லை என்பது போல தலையசைத்துக் கொண்டார். இருவருக்கும் ஒரே சமயத்தில் ஏற்பட்ட சிரிப்பால் ஒரு புது மலர்ச்சி தோன்றிற்று. “நான் போய் வாரேன்” என்று பாலகிருஷ்ணன் இறங்கி அந்தச் சாலையிலே ஆசையாய் நடந்தார்.

சிறுகதைகள்

{load position article1}

 
புகைப்படங்கள்




ஆவணப்படம்

முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...





மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved