மா. அரங்கநாதன் நினைவு இலக்கிய விருதுகள்
பழந்தமிழ் வீர்யமும், நவீனத்துவமும் இயைந்த தனித்துவ நடையுடன் தொன்மையான மொழி, மண், கலாச்சாரத்தின் அடையாளம் மா. அரங்கநாதன். அவரது நினைவை ஒட்டி 2018 முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் 16-ஆம் தேதியன்று மா. அரங்கநாதன் நினைவு இலக்கிய விருதுகள் முன்றில் இலக்கிய அமைப்பு சார்பில் வழங்கப்படுகின்றன. இவ்விருதுகளை மா. அரங்கநாதனின் மகன் நீதியரசர் அரங்க. மகாதேவன் அவர்கள் வழங்குகிறார். இலக்கியத் துறையில் பல்லாண்டுகளாக பங்களித்து வரும் சிறந்த எழுத்தாளர்களுக்கு அவர்களது ஒட்டுமொத்த இலக்கியப் பங்களிப்பு, செயற்பாடுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இருபிரிவுகளில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை ஒரு பிரிவிலும் நாடகம், மொழிபெயர்ப்பு, ஆராய்ச்சி நூல்கள், கவின்கலை, விமர்சனம், இளம் எழுத்தாளார்கள் என மற்றொன்றுமாய் இவ்விருதுகள் வழங்கப்படும். விருதாளர்களுக்கு தலா ஒரு லட்சம் கொண்ட ரொக்கப் பரிசுடன் மா. அரங்கநாதனின் உருவச் சிற்பம் ஒன்றும் நினைவுப் பரிசாக வழங்கப்படுகிறது. கவிஞரும் ஆவணப்பட இயக்குனருமாகிய ரவிசுப்பிரமணியனும் கவிஞர், விமர்சகர், மொழிப்பெயர்ப்பாளரான எஸ். சண்முகம் 2018-ஆம் ஆண்டுக்கான மா. அரங்கநாதன் விருதுகளைப் பெறுகின்றனர்.