Girl in a jacket

முன்றில் செய்திகள்


மா. அரங்கநாதன்

காவிய காலம் என்ற புத்தகத்தில் திரு. எஸ். வையாபுரி பிள்ளை அவர்கள் “ஆரியர் தமிழரை இகழ்ந்தனர் – தமிழர் விடவில்லை. அவர்களை மிலேச்சர் என்றனர்” என்று கூறியுள்ளார். அகராதிப்படி ஆரியம் – ஆரிய மொழி – ஆரியர் ஆகியவற்றிற்கு மிலேச்சர் என்றே பொருள் தரப்படுகிறது. மொழியில் உயர்வு தாழ்வு என்று எதுவுமில்லை. குறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட மொழிகள் மேலான படைப்புகளை கொண்டிருக்கின்றன. ஆப்பிரிக்க கண்டத்து கென்யா நாட்டில் காட்டகத்தே உள்ள கிராமங்களில் ஆண்கள் ஒரு மொழியும் பெண்கள் ஒன்றுமாக பேசுகிறார்கள். அந்த நாட்டுப் பழங்குடி மக்கள் வாழ்க்கை குறித்து அந்த மொழிகளில் எந்த படைப்பும் இல்லை. அவற்றிற்கு எழுத்துருவும் இல்லை. கென்யா நாட்டு Ngũgĩ wa Thiong’o அவர்களின் நாவலான Devil on the Cross ஆங்கிலத்தில்தான் எழுதப்பட்டது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டது என்ற காரணத்துக்காக அந்த நாவலை கென்யா நாட்டு மக்களுக்குச் சொந்தமானது அல்ல என்று யாரும் சொல்லிவிடப் போவதில்லை. ஆசிரியர் கூகி ஏன் பிரஞ்சில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதினார் என்றும் யாரும் கேட்கப்போவதில்லை. தெரிந்த விசயம். தமிழகத்திற்கே அல்லது தென்னாட்டிற்கே சொந்தமான பரத நாட்டியக் கலை ஏன் வடமொழியில் எழுதப்பட்டது என்பது போலத்தான். சொல்லப்போனால் பல்லவர் காலத்தில் மன்னர்கள் தமிழை மதித்தாலும் தமிழ்க் கலைகளை – நாட்டியம், சிற்பம், இசை போன்றவற்றை – வடமொழியில்தான் எழுதும்படி பார்த்துக் கொண்டார்கள். ஆங்கிலேயர் காலத்தில் திருக்குறள் மற்றும் சங்க இலக்கிய ஆய்வு, தில்லை நடராசரின் ஊழிக்கூத்து, தமிழ் இசை பற்றிய நூல்கள் யாவும் ஆங்கிலத்திலேயே எழுதும்படி ஊக்குவிக்கப்பட்டது. இது எல்லா காலத்திலும் நடந்த விசயந்தான். இன்னொரு மொழியில் எழுதப்பட்டது என்ற காரணத்திற்காக அந்தக் கலைகள் தமிழுக்குச் சொந்தமானவை அல்ல என்று சொல்லிவிட முடியாது.


இது போலத்தான் வடமொழியில் எழுதப்பட்ட நூல்களும். இருக்கு வேதத்தில் பயன்படுத்தப்பட்ட வடமொழிக்கும் பின்னர் எழுதப்பட்ட மொழிநடைக்கும் வித்தியாசம் உண்டு. பதினெட்டுப் புராணங்களில் பல வைதிக மதமான பிராமணமதத்தை எதிர்த்து எழுதப்பட்டவைதாம். பூர்வ குடிமக்களின் கடவுளரான சிவன், நாராயணன், முருகன் ஆகியோர் வேதங்களில் போற்றப்பட்டவர் அல்லர். அவர்கள் முறையே தஸ்யு கடவுள் என்றும் உபேந்திரன் என்றும் தேவசேனாபதி என்றும் குறிப்பிடப்பட்டவர்கள். அவர்களை சொல்லாமலும் இருக்க முடியாது. அப்படி சொல்வதிலிருந்தே அவர்கள் வேதகாலத்திற்கும் முன்னரே இங்கே பூர்வ குடிமக்களால் வணங்கப்பட்ட கடவுளர் என்று அறிய முடிகிறது. ஆரிய வேதங்களில் சொல்லப்பட்டதற்கு எதிராக பிரம்மனும், இந்திரனும், மித்திரனும்  பூர்வ குடிமக்களின் கடவுளருக்கு கீழானவர்கள்தாம் என்ற அடிப்படையில்தான் பக்தி இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இதற்குச் சான்றாக பல கதைகளை பிற்பாடு எழுந்த புராணங்கள் கொண்டிருக்கின்றன.


பொதுவாக வேதம், வேத நாயகன் என்றெல்லாம் குறிப்பிடப்படுவது ஒரு காவியநய சொல்லாகத்தான். அவை ரிக் வேதம் முதலியவற்றைக் குறிக்காது.


மேலும் ஆரியம் என்பது ஐரோப்பிய என்பதாக பொதுவாக ஆங்கிலத்தில் உச்சரிக்கப்படுகிறது. நார்வே, ஈரான் போன்றவையும் ஆர்ய என்பதையே குறிக்கின்றன. இவ்வாறு ஒலி குறிப்பு மாற்றமடைந்து இருப்பது சகஜம்தான்.


அப்படிப்பட்ட நிலையில் ஆரியர் ஈரான் போன்ற நாடுகளின் ஊடே இந்த உபகண்டத்தின் வட பிராந்தியத்தில் வந்து நிலை கொண்டு தங்களின் முன்னோர் பற்றி பாடல்களை அந்த குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் எந்த மொழியைப் பேசினார்களோ அதிலே எழுதி வைத்தும் மனப்பாடம் பண்ண வைத்திருக்கவும் வேண்டும். பின்னர் வியாசர் காலத்தில் அவை தொகுக்கப் பட்டவை மட்டுமல்ல அப்போது உருவெடுத்திருந்த மொழியிலே எழுதபட்டிருக்க வேண்டும். சமஸ்கிருதம் என்பது காற்றிலிருந்து மூக்கால் இழுக்கப்பட்டு ரிஷிகளால் சொல்லப்பட்டது என்பது காவிய நயத்தோடு சொல்லப்பட்ட ஒன்றுதான். நம்முடைய மொழியை நாம் கல்தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முந்திய மொழி என்று சொல்லிக் கொள்வது போலத்தான். வேதங்கள் ஒலியாகவே இருந்தன – அவற்றை வேத வியாசர் அந்த காலத்து வடமொழியில் எழுதினார் என்ற ரீதியில் மறைந்த காஞ்சி பெரியவர் குறிப்பிட்டிருப்பதும் இதுதான்.


மேற்கண்டவைகளால் சமஸ்கிருதம் என்று அறியப்படுகிற மொழி பூர்வகுடி மக்களின் மொழிகளோடு கலந்து உருவெடுத்த ஒர் இந்தோ ஆரிய மொழியே ஆகும். இந்த மொழியை எந்த ஆய்வாளரும் உலக மொழிகள் பல ஏற்படுவதற்கு காரணகர்த்தாவாக இருந்தது என்று சொல்லவில்லை. வட இந்திய மொழிகள் பல அதன் செல்வாக்கு பெற்று உருவெடுத்திருக்க முடியுமே தவிர, திராவிட மொழிக்கு அது சகோதர – சகோதரியாகக்கூட உரிமை கொண்டாட முடியாது.


நமது குடியரசு தலைவர் திரு. இராதகிருஷ்ணன் அவர்கள் “ நமது நாடு பல மொழி கலாச்சாரத்தையும் பல மத கலாச்சாரத்தையும் கொண்டது” என்று பாராளுமன்றத்திலேயே சொன்னதை நினைவு கூரலாம். உலக மொழி ஆய்வாளர்கள் அத்தனை பேரும் சொன்னது இதுதான்.


கலாச்சாரத்தை எடுத்துக் கொண்டால் வட இந்தியா இந்தோ – ஆரிய கலாச்சாரத்தையும் தென்னிந்தியா திராவிட கலாச்சாரத்தையும் கொண்டது என்பது தெரிந்த விசயம். தலையிலே சேலைத் தலைப்பை போட்டு மூடுவது தமிழ் நாட்டுப் பகுதிகளில் விதவைகள் சமாச்சாரம். வட இந்தியாவில் அதற்கு நேர்மாறு. இப்படி பல விதமான வேற்றுமை கொண்டவைதான் ஆசியாவிலுள்ள பல நாடுகளும்.


“சீதையும் தமயந்தியும் முக்காடு போட்டிருப்பார்கள் என்று என்னால் எண்ணியே பார்க்க முடிய வில்லை” என்று சொன்னது கவியரசர் தாகூர். இம்மாதிரிப்பட்ட கலாச்சார வேற்றுமைகள் பெரும்பாலும் குறிப்பிட்ட மண்ணின் சீதோஷ்ண நிலையைப் பொருத்தே ஆரம்பத்தில் தோன்றியிருக்க வேண்டும். அவற்றில் உயர்வு தாழ்வு இல்லை.


ஒன்று சொல்லலாம். சமஸ்கிருதம் பலர் சொல்வதைப்போல பல மொழிகளுக்கு தாயாக இருக்கலாம் – தமிழுக்கு அல்ல. பல ஆங்கில வார்த்தைகளை நாம் இப்போது பயன்படுத்துவது போல பல்லவர் காலத்திலிருந்து சமஸ்கிருத வார்த்தைகளை – பொதுவாக எழுவாய்களை மட்டும் - பயன்படுத்த ஆரம்பித்திருக்கலாம். பிரஞ்சுகாரரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தால் அந்த மொழி வார்த்தைகளை பயன்படுத்தத்தான் வேண்டியிருந்திருக்கும். அந்த காரணத்தால் மட்டும் இந்த மொழி தாய் என்றெல்லாம் சொல்லிவிடக்கூடாது. சமஸ்கிருதம் தாய் என்று சொல்வதாக இருந்தால் தமிழ் “தந்தை” என்று சொல்லவேண்டியிருக்கும் – வள்ளலார் ஒரு சங்கராச்சாரியாரிடம் சொன்னதுபோல. பல ஐரோப்பிய மொழிகளில் சமஸ்கிருத வார்த்தைகள் இருக்கின்றன என்று பெருமிதம் கொள்பவர்களிடம் ஒன்று சொல்லலாம். சர்ப்ப (serpant) அக்னி (igna, agnes, ignite) போன்றவற்றிற்கெல்லாம் சமஸ்கிருத சம்பந்தம் இருப்பதின் உண்மையான காரணம் இங்கே வந்து இங்குள்ள பூர்வகுடி மொழிகளுடன் கலந்து வளர்ச்சி பெற்ற அந்த மொழியின் தோற்றம் ஐரோப்பாவாக இருந்ததுதான். ஐரோப்பா என்றாலே ஆர்ய என்பதுதான். அவ்வகை சொற்கள் இங்கிருந்து அங்கே போகவில்லை – அங்கிருந்து வந்தவைதாம். சமீபத்தில் ஜெர்மானிய அரசியல்வாதி நம் பிரதம மந்திரியிடம் “இந்திய பள்ளிகளில் ஜெர்மன் மொழியை நீக்காதீர்கள். சமஸ்கிருதமும் ஜெர்மனும் சகோதர மொழிகள்” என்று கூறியதையும் இங்கே நினைவு கூரலாம்.


எந்த மொழியையும் கற்றுக் கொண்டால் பேசமுடியும். அதே காரணத்தைத்தான் இப்போது இந்த நாட்டில் ஆயிரம் இரண்டாயிரம் பேர்கள் சமஸ்கிருதத்தைப் பேசுகிறார்கள் என்று உரிமை கொண்டாடுவதின் காரணமாக சொல்லவேண்டும். சமஸ்கிருதம் என்றாலே நன்றாக செய்யப்பட்டது என்று சொல்கிறார்கள். வேதகால வசிட்டனும், காசியபனும், மரீசியும் பின்னர் வேதங்களை தொகுத்த வியாசர் பயன்படுத்திய சமஸ்கிருதத்தைப் பேசியிருக்க முடியாது. அதிலும் இருக்கு வேதத்தில் பயன்படுத்தப்பட்ட மொழிக்கும் மற்ற வேதங்களில் காணப்படும் மொழிக்கும் நிறைய வேற்றுமை உண்டு. இதிகாசத்திலும் புராணங்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழியும் அப்படித்தான். மேநாட்டு ஆய்வாளர்கள் உட்பட இங்குள்ளவர்களும், இராகுல் சங்கிருத்தியாயன் போன்ற மேதைகளும் இதைத்தான் கூறுகிறார்கள்.


எனவே சமஸ்கிருதம் உலக மொழிகளின் தாய் என்று எதை அடிப்படையாகக் கொண்டு சொல்கிறார்கள் என்பது தெரியவில்லை. வட இந்திய மொழிகள் சில சமஸ்கிருத மொழியிலிருந்து பலவற்றைக் கொண்டு தோன்றியிருக்கலாம். தென்னிந்திய மொழிகளுக்கும் – குறிப்பாக தமிழுக்கும் – இந்த உரிமை கொண்டாடுதல் எப்படி ஒத்து வரும்? வட புலத்து மன்னர்கள் சிலர் தமிழகத்தின் சில பகுதிகளை ஆண்டபோது வட மொழிச்சொற்கள் தமிழில் கலந்திருக்கும் – ஆங்கிலேயரும் பிரஞ்சுக்காரரும் போர்த்துகீசியரும் இங்கே ஆண்டபோது அந்த மொழிச்சொற்கள் இங்குள்ள மொழியில் கலந்தது போலத்தான். அரிசி என்ற தானியம் அதிகமாக பயன்படுத்தப்படுவது இங்கேதான். கிரேக்க மொழியில் ORZY என்றும் ஆங்கிலத்தில் RICE என்றும் மருவி வழங்கப் படுவது இங்குள்ள அரிசி என்ற சொல்லிலிருந்துதான். சமஸ்கிருதத்தில் அது இல்லை. அப்படி சொல் இருந்தாலும் அது பின்னர் ஏற்படுத்திக் கொண்ட சொல்லாகத்தான் இருக்க முடியும். இம்மாதிரி விசயங்களில் சொல் ஆய்வோடு அந்த குறிப்பிட்ட மொழி பேசும் நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களும் எடுத்துக் கொள்ளப்படும்.


எபிரேயம் உலக மொழிகளின் தாய் என்று யூதர்களும் என்றுமுள தென் தமிழை ஆதி சிவன் பேசி கவிதையே எழுதியிருக்கிறார் என்றெல்லாம் பாராட்டிக் கொள்வது சில உண்மைகளைக் கொண்டிருந்தாலும் அப்படியே எடுத்துக் கொள்ள முடியாது. அது போலவே சமஸ்கிருதம் உலக மொழிகளின் தாய் என்று சொல்வதும். உலகம் என்பது எவ்வளவு பெரியது என்று அந்தக் காலத்தில் தெரியும்? ஹோமரின் உலகைச் சுற்றி வருதல் – கடவுள் உலகைப் படைத்தார் என்றெல்லாம் வரும் சொற்கோர்வைகளில் உலகம் என்பது எவ்வளவு சிறியது!


அரசியல்வாதிகளின் சமஸ்கிருத மொழி பற்றிய அறிவிப்புகளை – சிலசமயம் அபாண்டங்களை – படிக்கும் போது மேற்கூறியவைகளை சொல்லாதிருக்க முடியவில்லை. மொழி ஆய்வு, நாட்டுப் பற்று – இவை இரண்டிற்கும் எந்த சம்பந்தமுமில்லை.


மேலே குறிப்பிடப்பட்ட கருத்துகள் பல ஆய்வாளர்களால் – திருவாளர்கள் T. BURROW, M.B. EMENEAU, H. HERAS, SIR JOHN MARSHALL, M. GOETZ, R.C. MAJUMDAR, K.K. PILLAI, X. S. THANINAYAGAM போன்றோராலும் மற்றவர்களாலும் சொல்லப்பட்டவை. இவர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டு அறிஞரே ஆவர்.

மா. அரங்கநாதன்

 
புகைப்படங்கள்
ஆவணப்படம்

முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...

மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved