Girl in a jacket

அமிர்தம் சூர்யாவின் ஒரு கவிதை

மா. அரங்கநாதன்.

சுவடுகளைப் பதிக்காது பறக்கும் அந்த பருந்து என்ற சொற்டொடரை பயன்படுத்தியவர் ஜே. கே. அவர்கள். கவிதை – கதை போன்றவற்றிலும் மற்ற கலைகளிலும் ஆழ்ந்த ஞானம் உடையவர் அவர். என்றாலும் மேற்கோளாகக்கூட அவர் எதையும் பயன்படுத்துவது இல்லை.

UNCONDITIONAL MIND குறித்து ஏராளமான விளக்கங்களைக் கொடுத்தவர் அவர். அந்த விளக்கங்கள் எல்லாவற்றையும் விட கவிதாம்சம் கொண்ட மேற்கண்ட சொற்றொடரே அரிய பொருளைக் கொண்டு நிற்கிறது எனலாம். பருந்து என்றுதான் சொன்னார் – அதைப் பறவை என்றே பலரும் குறிப்பிடுவார்கள். நாரை என்றும் சொல்லலாம்.

எதையும் மனதில் நிறுத்தி வைக்காது நிற்கும் நிலை நிகழ்காலத்தில் வாழ்வதைக் குறிக்கும். அங்கு உணர்வு மட்டுமே – அதற்கு மொழியில்லை.

சமகாலம் என்பது படைப்பிலக்கியத்தில் முக்கியம். ஜே. கே. பற்றி மிகவும் தாமதமாக அறிய வந்தவர்கள் முன்முடிவு என்று அதை பயன்படுத்த ஆரம்பித்தனர். இந்தச் சொற்றொடரால் கவரப் பெற்று அதை கவிதையாக்க முனைந்தோர் அநேகம். அந்தி சாயற நேரம் என்று சினிமா பாடலும் வந்தது.

பூங்குன்றனிலிருந்து எடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட பாரதிதாசன் வரை ஒரே விசயத்தைத்தான் எழுதி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் யாரைப் போலவும் இல்லை. அதுவே படைப்பிலக்கியத்தின் விசேட அம்சம்.

சமீபத்தில் அமிர்தம் சூர்யா அவர்களின் கவிதைத் தொகுப்பை படித்தப் போது அதிலுள்ள கடைசிக் கவிதை மனதை விட்டகலாது நின்றது. தெரிந்த விசயந்தான். அன்பு என்பது தெரியாத விசயமா என்ன? நமது மூதாதையர் குறிஞ்சி நிலத்தின் தேனை சுவைக்கும் உயிரினத்தைக் கண்டு எல்லாம் மறந்து அனுபவித்த ஆனந்தமும் இங்கே பட்டணத்து நடை பாதையில் கிடைத்த இட்லி ஒன்றை பிய்த்து உண்ணும் குழந்தையை நோக்கி மகிழும் தாயின் ஆனந்தமும் ஒன்றுதானே.அந்தக் கவிதையை முழுதாகப் படித்துப் பாருங்கள்:

பாம்புகளுடன் வசித்து

தரையில் கால் படாமல்

ஒரு வாரம் சைக்கிள் விட்டு

ரத்த தானத்தை போட்டோ பிடித்து

சொந்தங்கள் மறுத்தாலும்

சுயேட்சையாய்ப் போட்டியிட்டு

ரசிகர் மன்றம் ஆரம்பித்து

புனைப்பெயரில்

கவியெழுதி

குரல் உயர்த்தி நாத்திகம் பேசி

வேறு ஜாதிப் பெண்ணைத் துரத்திக் காதலித்து

ஜோதிடத்தை விஞ்ஞானமென வாதிட்டு

ஆழ்நிலை தியான வகுப்பு போய்

முஷ்டி உயர்த்தி எதிரி முகம் கிழித்து

ஒற்றையடிப் பாதை நடக்கையில்

முன் பயணித்தவரின் தடம் அழித்து

வாழ்வு சோர்வுற்றும் வானம் பார்த்து

அப்பாடா வென பெருமூச்சு

விடும் கணங்களில்…

மேற்கிலிருந்து கிழக்காகப்

போனது நாரைகள் கூட்டம்.

வெண்ணிறப் புள்ளியாய்

மறைந்த பின்பும்

பார்த்துக் கொண்டே இருந்தேன்………

நாரைகளின் தடயம்

ஏதுமில்லை வானில்.

ஒரு விசயத்தை மட்டும் சொல்லி விடலாம். பல்கலைக்கழக முனைவர்களும் அப்படித்தான் செய்கிறார்கள். அதிலே என்ன எதிர்பார்க்க முடியும்? நம் மூதாதையர் பெற்ற உணர்விற்கும் நாம் அடைவதற்கும் மொழியில்லை அல்லவா? மொழியில் – தாய் மொழியில் கூட - எப்படிச் சொல்வது என்பதுதான் பெரிய விசயம். சம்மந்தமில்லாத விசயம் என்று உலகில் எதுவும் இல்லை என்பதால் ஒவ்வொருவனும் அந்தக் கணத்தில் அனுபவித்த உணர்வு சம்மந்தம் உள்ளது என்றும் முக்கியமானது என்றும் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டிவரும்.

நாரைகளின் தடயத்தோடு எந்தவித சம்மந்தமும் இல்லாத அமிர்தம் சூர்யாவின் பெரு மூச்சுக்களிலிருந்து எத்தகைய சம்மந்தம் அடங்கியிருக்கின்றன என்பது சொல்லாமல் சொல்லப்படுகிறது. ஏன் அப்படி என்றால் வேறு எந்த வழியிலும் அதைச் சொல்ல முடியாது – ஜே, கே, கூட பருந்தின் சுவடு என்று சொல்ல வேண்டி வந்துவிட்டது அல்லவா? அப்படிப்பட்ட சுவடில் என்ன இருக்கிறது?

அமிர்தம் சூர்யாவின் ஒரு கவிதை
 
முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...





மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved