சண்முகத்தின் கதை மொழி
எந்த நாகரீகமும் திருப்பம் பெறுகையில் தனது சுவடை - ஏதாவது ஒரு வகையில் - பதிப்பித்து விட்டே செல்லும். முல்லை நில, மருத நில நாகரீகத்தின் யதாஸ்தானம் குறிஞ்சி தான்.
நவீன இலக்கியத்தின் திருப்பங்களைப் பார்க்கும் போதும் பழைய அடிச்சுவடுகள் நிலை பெற்றிருப்பது தெரிய வரும்.
தமிழரசு இலக்கிய மலர் ஒன்றில் வந்த அ.ச.ஞானசம்பந்தன் அவர்களின் பேட்டி, பலரது பேச்சாக மாறி நின்றது. பேட்டி கண்டவர் எஸ். சண்முகம். பண்டிதர்கள் - எல்லாரும் அல்ல - குழப்ப நிலைக்காளானார்கள். நவீன இலக்கியம் படைத்தோம் என்று இறுமாந்திருந்தோருக்கும் குழப்பம் தான். முன்றில் அலுவலகத்தில் அன்றைய தினம் நடந்த விவாதத்தில் இதுவே அதிக நேரத்தை எடுத்துக் கொண்டது.
எஸ். சண்முகத்தின் முதல் கவிதைத் தொகுப்பைப் படித்து விட்டு முன்றிலில் அதைப்பற்றி தீவிரமாகப் பேசியவர்கள் உண்டு. இன்னொரு சண்முகம் அவர்களில் ஒருவர். அவரும் எஸ். சண்முகம் தான். தற்போது வேறு பணிகளில் ஈடுபட வேண்டியதாயிற்று.
கதைமொழி சண்முகத்தின் முக்கியப்பணி முழு மூச்சாக நவீனத்தில் ஆழ்ந்து கிடப்பது. நவீன இலக்கிய வாதிகளில் பலர், ஏதாவது ஒரு பணியில் இருந்து கொண்டே படிப்பில் ஆழ்ந்தவர்கள். சண்முகம் அப்படி அல்ல.
பண்டிதர்கள் போல் அல்லாமல் வேறுபட்ட மொழியை பயன்படுத்த வேண்டிய நிலை நவீனத்வ இலக்கியவாதிகளுக்கு இருக்கிறது. அம்மாதிரிப்பட்ட மொழியே ஒரு வகை பின் நவீனத்துவம் தான்.
கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளாக இலக்கியம் சொல்லி வந்த ஒரு பொருள் தான் அன்பு. ஆனால் அதற்கு அடைக்கும் தாழ் உண்டோ என்று இங்குள்ளவன் போல் யார் கேட்டார்கள்?
"ஒரு முறை நாவலை வாசித்து முடித்து விட்டு, வாசிப்பில் நாம் தாண்டிச் சென்ற வாக்கியங்களை நினைவுப்படுத்திப் பார்த்தால் அந்த வாக்கியங்கள் நிச்சயமற்றதாக நாம் குறிப்பிடுகிற குறியீட்டை நகர்த்திக் கொண்டே போவதைத் தெரிந்து கொள்ளலாம். இந்த நகர்த்தும் செயலையே கதை சொல்லுதல் என்று பின் நவீனத்துவம் குறிப்பிடுகிறது".
ஒரு புதிய புரிதலுக்கு வந்து சேர வைக்கிறது, மேற்படி வாக்கியம். ஒரு வகையில் எளிய முறையில் சண்முகம் தந்த விளக்கம் எனலாம்.
நமது பண்டிதர்களை விட, பின் நவீனத்துவம் பண்டைய இலக்கியங்களுக்கு உண்மையான மதிப்பைத் தருகிறது - சண்முகத்தின் கட்டுரைகளில் அகம், புறம் வரும் பகுதிகளைப் படித்துப் பாருங்கள். இவரது நடை தமிழவன், அ.மார்க்ஸ், நாகார்ஜூனன் போன்றோரின் நடையை விட கடினமானதாய்த் தெரியும். ஆனால் கடினம், எளிமை என்பது சார்பு நிலை சமாச்சாரம் தானே.
கதை மொழி என்ற கட்டுரைத் தொகுதி பலரை இணைக்கும் பாலமாக இருக்கும். காவ்யா வெளியீடாக இப்போது வந்துள்ளது.
- மா.அரங்கநாதன்
03.07.2012