தேவரசிகன் கவிதைகள்
நகுலன் அவர்கள் எனது வீடு பேறு சிறுகதைத் தொகுதி பற்றிப் பேசும்போது "அந்தத் தலைப்பு எப்படிக் கிடைத்தது" என்று கேட்டார். எனது ஞானத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை. உண்மையில் 'பெரிய சாலை என்ற தலைப்புடன் அது அச்சாகிக்' கொண்டிருந்த போது, நண்பர் ஒருவர், "சார் இதற்கு "வீடுபேறு" என்ற தலைப்பே இருக்கட்டும்" என்று கூற அப்படியே ஆயிற்று. அந்த நன்பர் வேறு யாருமல்ல - தேவரசிகன் தான். முன்றில் முதல் இதழிலேயே நகுலன் அவர்களது வீடுபேறு பற்றிய கட்டுரையும் தேவரசிகனின் சில கவிதைகளும் வெளியாயின. இப்படித்தான் நட்பு தொடரந்தது. அவரது கவிதைகள் முன்றிலிலும் மற்ற சிறு பத்திரிக்கைகளிலும் வெளியாயின. அப்போது வேலை யெதுவும் இல்லா திருந்தார். அப்போதும கவிஞராகத் தான் இருந்தார்.
கனவுலகில் இருப்பவர் போல் எழுதுகிறாரே என்று சில சமயம் தோன்றும். உடனே வேறொன்றும் தோன்றும். கனவுகளும் உணர்வுகளும் தாமே கவிதையின் மூலாதாரம். உலகின் நிலைபேற்றிற்கும் அதுதானே மறைமுக சக்தி. கவிதை எழுதுவது நம் கையில் இல்லை. எழுதாமல் இருப்பதும் நம்கையில் இல்லையே. அது அறிவின் பாற்பட்டதல்லாமல் தோன்றுகிற ஒன்று அல்லவா.
தேவரசிகன் கவிதைகள் அநாயசமாக வெளிவந்தவை, யோசித்து யோசித்து தலையைப் பிய்த்துப் போட்டு வந்தவையல்ல. (வெண்பாக்கள் விஷயம் எப்படியோ)
சும்மா நீட்டிக் கொண்டிருக்காமல் உருப்படியாக கோபிகிருஷ்ணன் சொன்னதையே சொல்லி முடிக்கலாம்.
தெளிந்த நீரோடையின் சீரான ஓட்டம் - மென்மையான தொனி - ஆரவாரம் அற்றது - அன்பானது - எழிலானது - இவை தேவரசிகன் கவிதைகள்.
மா. அரங்கநாதன்.
29-06-2012