Girl in a jacket

பரந்து கெடுக உலகு இயற்றியான் - தம் ஈழம்

வயதாகி, மனோபலம் குன்ற, இந்நிலையில் ஈழத்து செய்திகளையும் படங்களையும் அறிந்து கொள்ளவோ, பார்க்கவோ திடம் இல்லை.

இனி அம்மையப்பனும் வேண்டாம் – வேறு எந்த அருளாளனும் வேண்டாம் – எம்மக்கள் சொந்த மண்ணில் எல்லாமிழந்து மடிய, எமக்கு நிலந்தரு திருவிற் பாண்டியனும் வேண்டாம் – பரந்து கெடுக உலகு இயற்றியான்.

இக்கையறு நிலையில் “இப்போதும் அடுத்த வேளை சாப்பாட்டைச் சாப்பிடத்தான் வேண்டியுள்ளது” என்ற கவிஞர் தமிழச்சியின் துக்கம் விசாரிப்பு போன்றவை மட்டுமே நிலைப்பாடு.

X X X

துக்கம் விசாரிப்பில் இன்னொரு வகையும் இழவு வீட்டில் வந்து சேருகிறது. “ஈழத்தில் தமிழர்கள் செத்து மடிகிறார்களே – அது பற்றி என்ன எண்ணுகிறீர்கள்” என்று ஒரு சாமியாரிடம் கேட்டால் ‘தெருவில் நாய் செத்து வீழ்கிறதே – அதைப் பற்றி நினைப்பதில்லையா’ என்று பதில்.
துறவிக்கு எல்லா ஆன்மாவும் ஒன்றுதான் – துறவியும் நாயும் ஒன்றுதான் என்ற ரீதியிலா இதை எடுத்துக் கொள்ள முடியும்?
நேபாளத்தில் பஞ்சம் ஏற்பட்டு மண்ணெண்ணை கூட கிடைக்காத சமயம் இங்குள்ள சாமியார் “அவர்களுக்கு உதவ வேண்டியது இந்தியாவின் கடமை என்று கருணாகர மூர்த்தியாகப் பேசினார். கென்யா, உகண்டா நாடுகளிலும் பஞ்சம் உண்டு. அதைப் பற்றி நினைப்பதில்லையா?

நாயாகவிருந்தாலும் நேபாளத்து நாயாகவிருத்தல் வேண்டும் – நேபாளம் வேத மதத்தை அங்கீகரித்த நாடு என்று அறியப்படுகிறது. மனு தர்மத்தை பரிபாலிக்கும் நாடு என்றும், அங்குள்ளோர் தூய ஆரியர் என்றும் கூறுகிறார்கள்.

அவர்களுக்கு உதவ வேண்டியது வேத மரபினரின் கடமை. இந்தத் தமிழர் அப்படியா – இல்லையே – இந்திரனையும் பிரம்மனையும் மித்ரனையும் புறந்தள்ளிய சமயஞ் சார்ந்தவராயிற்றே. பக்தி இயக்கம் ஒரு வைதீக எதிர்ப்பு ஆயிற்றே – வேதக் கடவுளரைப் ‘பொய்த்தேவு’ என்று அழைத்தவராயிற்றே – திரிகோணமலையிலிருக்கும் தேவனையும் போற்றி எழுந்தது தானே பக்தி இயக்கம். உலகில் கோவில் நாகரீகமே இங்கு தானே தோற்றம் பெற்றது.

வேண்டாம் – அவர்கள் பற்றி கவலைப்பட வேண்டாம்.

கலிங்கத்து சிங்கமுகன் ஸ்ரீவிசயன் பற்றி மட்டுமே தெரிந்து கொள்வோம். முதன்முதலில் அந்த விசயன் அங்கே அனுப்பப்பட்டபோது, ஈழத்தில் பீலிவளை என்ற தமிழ்ப் பெண்ணும் அவள் சார்ந்த கட்டமும் ஏற்கனவே அங்கிருந்ததையும் பாலிமொழியை அங்குப் பரப்பிய ஸ்ரீவிசயன், அந்தப் பீலிவளையை மணந்து அவர்களுக்குப் பிறந்த குழந்தையை தோணியில் தொண்டைக்கொடி கட்டி கடல்வழி அனுப்பி, அந்தக் குழந்தை தமிழ்நாட்டுக் கடற்கரையை சேர்ந்து தொண்டைமான் என்று பெயர் பெற்றதையும் மறப்போம். சிங்கமுகன் ஞாபகார்த்தமாக, அந்த மண்ணை சிங்களம் என்று அழைத்து ஏற்கனவே இருந்த ஈழம் என்ற பெயரைப் போக்க முயன்றதையும், “ஈழத்து உணவும் காழகத்தாக்கமும் என்ற பட்டினப்பாலை வரிகளையும் மறப்போம். ஸ்ரீவிசயன் பின்னர் பீலிவளையை தள்ளிவிட்டு பாண்டிய ராசகுமாரியை மணந்து அங்குப் பின்னர் தோற்றம் பெற்ற சிங்கள இனம் பேசியது பாலிமொழி. அந்த இனத்து மன்னன் துஷ்டகமுனு அங்கே தமிழ்ப்பகுதியை ஆண்டு வந்த எல்லாள மன்னனை எதிர்த்துப் போரிட்டது எல்லாவற்றையும் மறக்கடிப்போம். இந்த எல்லாளன் என்ற சொல்லின் வேர் ‘எல்’ என்ற


பகுதி கடவுள் – சூரியன் ஆகியவற்றைக் குறிப்பதாகும். El –Cid என்ற கிரேக்க, எபிரேயச் சொல் இதன் அடிப்படையில் வந்ததாகும். ஈழத்திலிருந்து படகில் மரைக்காடு (இப்போது தவறான மொழிப்பெயர்ப்பில் வேதாரண்யம்) வரும் பயணிகள் கோஷமிடும் “ஏலேலோ” என்ற சொல் ‘எல்லாளன்’ வழி பிறந்ததாகும் – ஈழம் என்ற சொல்தான் தமிழின் உண்மையான பெயர். இழம் என்பதே ஈழம் ஆயிற்று. தம் அப்பன் தகப்பன் ஆக, தம் ஆய் தாயாக, தம் ஐயன் தமையனாக மருவியது போல தம் இழம் தமிழ் ஆக மாறியது என்ற உண்மையையும் புறந்தள்ளுவோம். தற்போதைய சிங்கள அரசே WAITING FOR SRIVIJAYA என்ற தலைப்போடு தபால் முத்திரை வெளியிட்டு இதுபோன்ற சில வரலாற்று உண்மைகளை ஏற்றுக் கொண்டாலும், மகாவம்சம் என்ற ஒரே பாலிமொழி நூல் இதுபற்றிய குறிப்புக்களைக் கொண்டிருந்தாலும் ஒரு வடஇந்திய பத்திரிக்கை நிருபர் ஒருவரிடம், சிங்கள அரசியல்வாதி “உங்களைப் போல நாங்களும் இந்தோ – ஆரிய இனம். தமிழர் அப்படியல்ல” என்ற உண்மையை போட்டு உடைத்தாலும், இவையெல்லாம் நாளேடுகளில் வந்து மக்கள் அறிந்திருந்தாலும் இப்போது மிகவும் தேவையான விஷயம், நாய் செத்துக் கிடப்பது. ஈழத்தில் நாய்களும் செத்துவிட்டன – சாமியே.

அருள் என்ற சொல்லின் உட்பொருளை அறியா மனிதன் – எத்தனையோ துறவிகள் – ஆச்சாரியர்கள் வாழ்ந்து மறைந்திருக்கின்றனர் – நமக்குத் தெரியும் – உண்மைத் துறவிகளும் உண்டு – அப்படிப்பட்ட ஏதாவது ஒரு சங்கராச்சாரி மறைந்த அன்று அதுபற்றி கேட்கப்பட்டால், இதுபோன்று செத்துக் கிடக்கும் நாய் பற்றி கவலைப்படச் சொல்வாரா இந்தச் சாமி.

ஞானி விவேகானந்தர் பற்றிய ஒன்று இங்கே சொல்லப்படலாம்.

தாதுவருடப் பஞ்சம் நிலவி வந்தபோது, உலகத்தில் கோமாதா சம்ரட்சணை வேண்டி நிதிபெற வந்த கோஷ்டியிடம் “இங்கே வங்கதேச முழுவதும் பஞ்சம் நிலவுகிறது


என அரசாங்க கெசட் அறிவிப்பு சொல்கிறதே – சக மனிதர்கள் பசி போக்க என்ன செய்தீர்கள்” என்று கேட்க, அவர்கள் அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது – பசு நமது தெய்வம் – காமதேனு அம்சம் – நம்மை பெற்ற தாய் - என்று சாஸ்திரம் சொல்கிறது. அதன்படி நடக்கிறோம்” என்று சொல்ல விவேகானந்தர் கூறுகிறார்.

“உண்மைதான் உங்களைப் போன்ற பிள்ளைகளை வேறு யார்தான் பெற்றிருக்க முடியும்”

இந்தச் சாமியாருக்கும் ஞானி விவேகானந்தர் சொன்னதே பதிலாக அமைக.

இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும் தருணம் இதுவல்லதான். – என்ன செய்வது – இழவு வீட்டில் தான் பல சங்கதிகள் மனந்திறந்து பேசப்படும், அழப்படும் – அவற்றில் பொய் இருக்காது.

“கோழிகளே - கோழிகளே

என்னை மன்னித்து விடுங்கள்”

என்று இறைஞ்சுகிறார் கவிஞர் சமயவேல். ஈழத்தில் இப்போது கோழிகள் இல்லை – நாய்களும் இல்லை. யாரிடம் மன்னிப்பு கேட்பது.


மா. அரங்கநாதன்
20.02.2012

 
முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...

மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved