Girl in a jacket

கவிஞர் வெண்ணிலாவின் கவிதையுலகு

திட்டங்கள் எதுவுமற்ற பறவைகளால் விழித்தெழும் பெரும்பேறு குழந்தைகட்கே அன்றி நமக்கு அல்ல. அதனால் தான் குழந்தைகள் கவிதைகள் எழுதுவதில்லை. அதுவாகவே இருக்கிறார்கள். குறைந்த பட்சம் எதிர்படும் நண்பனின் முகம் பார்த்து புன்னகை செய்யும் அளவிற்கேனும் அன்றைய நிலை அமைந்தால் போதும் என்ற நிலை நமக்கு.

இப்படியெல்லாம் பயணங்கள் அமைந்திருக்கும் போது சுற்றுப்புற மனிதரிடமிருந்து ஒரு சீவன் பெறுகிற எதிர்வினை எப்படியிருக்கும். அதைக் கொண்டு இந்த மனித சமுதாயத்தின் மீது ஆயுள் பரியந்தம் விரோத மனப்பான்மையை வளர்த்தெடுக்கலாம்.

என்றாலும், ஒவ்வொரு சீவனும் காலவெளிக்குள் அகப்படாமல் தப்பித்துப் பெறுகிற கணங்கள் உண்டு. பெறுவதில் பேதம் இல்லை. தடையும் கிடையாது. அந்தக் கணங்கள் முடிந்து திரும்பவும் காலவெளி ஆக்ரமிக்கையில் அமைதி பற்றிய எண்ணம் மட்டுமே நிலை பெறுகிறது. எண்ணம் தான்-அமைதி அல்ல-அது வேதனை.

கவிதை மிகப்பெரிய சோகம் என்கிறார் கவிஞர் வெண்ணிலா.

அமைதியாக இருக்கும் போது எதையும் செய்ய விரும்புவதில்லை. எண்ணுவதில்லை-அப்படியே இருந்து விடுகிறோம்.

இது வேதனை-வாழ்வு என்றால் என்னவென்று அனுபவித்து விட்ட சீவன் படும் வேதனை. இந்த வேதனை ஒரு வரபிரசாதமாக மாறும் தருணமும் வருகிறது.

இந்த வேதனையிலிருந்து தான் சோகத்திலிருந்துதான்-எல்லா படைப்புகளும் பிறக்கின்றன. அது படைப்பாளியின் தேடல். கவிஞர், ஓவியர், சிற்பி, இசைக்கலைஞர், கலைகள், ஏதுமறியா சும்மாகவேயிருந்துவிடும் மௌனி...

இவர்கள் யாவரின் சாதனைகளும் அந்த வேதனையிலிருந்து தோன்றியவைதாம்.

சகமனிதர் என்னும் போதே நம்மைப் போன்றவர்தாம் என்றாகி விடுகிறது. அவர்களும் பறவைகளாய் விழித்தெழுவதில்லை-எனவே யார் மீது கோபம் கொள்ள முடியும்.

எல்லாரும் ஏதோ பேருந்துகளாலும் புகை வண்டிகளாலும் ஏதோ ஒரு நகரத்தில் கொண்டு சேர்க்கப்பட்டவர் தாம்.

கவிஞர் வெண்ணிலாவின் படைப்புகள் சகமனிதர் மீது கோபம் கொண்டதாக தெரியப்படலாம். அது அடுத்த கணமே குழந்தை போல் மாறிவிடுகிறது.

கோட்பாடுகள் கவிதையாகி விடாது என்பது கவிதை அம்சத்தின் மிக முக்கிய கோட்பாடு. இது அல்ல என்ற தோற்றத்தை ஏற்படுத்தி இந்த நிகழ்கால தங்குமிடத்தை விட்டு வந்து விட்டாலே, அது அந்த அம்சத்தை பெற்று விடுகிறது. அப்போதுதான் அதுவரை இல்லாத ஒரு புது கவிதை பற்றிய இலக்கணமும் பிறக்கிறது.

"யாயே கண்ணினும் கடுங்காதலனே" என்ற சங்ககாலக் கவிதையை அனுபவித்துவிட்டு, இப்போது கிராமத்து தெருவோரத்து கிழவி "கண்ணுக்குள்ளே வைச்சு காப்பாத்தினாளே" என்று பேசுவதைக் கேட்டு ஒரு கணம் நின்றால் தான் கவிதையின் மாண்பும், கபிலனின் மாண்பும் தெரியவரும்.

உபமானங்கள் பயன்படுத்தி விடுவதால் கவிதையைக் கொண்டு வந்து விட முடியாது. உபமானங்கள் இன்னொன்றைச் சொல்ல பயன்படும் என்றால், அந்த இன்னொன்றும் வேறு ஒன்றைச் சொல்லச் செய்வதற்காகவே. அந்த வேறு ஒன்றை அனுபவிக்கத் தானே முடியும். இல்லையென்றால் "பறவைகளாய் விழித்தெழும் குழந்தைகள்" எங்கே தோன்றியிருக்கப் போகிறது. அதைச் சொல்லி விட முடியாது என்பதோடு சொல்லாமல் இருக்கவும் முடியாது.

கவிஞர் வெண்ணிலாவின் கவிதைகளை படித்த போது மேற்கண்டவை எல்லாம் தோன்றின. மூன்று கவிதைத் தொகுப்புகள் இருப்பினும், 2002ம் ஆண்டு வெளிவந்த தொகுப்பின் படைப்புகளைப் படித்தவுடன் தோன்றியவைதாம் இவை.

கவிதையின் பயன்பாடு என்னவென்ற கேள்வி எழுந்தால், வாழ்க்கையின் பயன் என்னவென்ற கேள்விதான் பதில்.

கவிஞர் வெண்ணிலாவிற்கு வாழ்த்துகள்.

- மா. அரங்கநாதன்
29.03.12


 
முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...





மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved