Girl in a jacket

காவியமும் பஜனை கோஷ்டியும்

கம்பனது பாலகாண்டத்தின் ஒரு விருத்தத்திற்கு முன்னர் வால்மீகி ராமாயணமே ஈடாகாது என்று கூறும் தமிழ் – சமஸ்கிருத இருமொழி அறிஞர்கள் இருக்கின்றனர்.

ராமாயணக் கதையும் வால்மீகியிடமிருந்து கம்பனுக்கு கிடைத்தது என்று கூறுவதற்கில்லை. வால்மீகி ராமாயணம் எழுதாமலிருந்தால் கூட கம்பன் எழுதியிருப்பான். கம்பன் காலத்திலேயே வடமொழிகளில் மூன்று (3) ராமாயணங்கள் உண்டு. மற்ற மொழிகளில் எத்தனையோ?  வால்மீகிக்கு முன்னர் எத்தனையோ?

காந்தாரம் என்று அப்போது அழைக்கப்பெற்ற தற்போதைய ஆப்கானிஸ்தானில் ஓர் அயோத்தி உண்டு. பக்கத்து கேகயம் என்கிற இப்போதைய காகஸ்தானிலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் இருந்திருக்கலாம். அங்கே எல்லாம் இராமாயணக் கதையின் அடிப்படை இருப்பதாகவே தெரிகிறது. ராம்ஸே, ரமீஸ், ரமேசஸ் ஆகிய பெயர்கள் பிற நாடுகளில் இருக்கின்றன. இலக்கியம் என்று நோக்காது, மத உணர்வுடன் பார்ப்பவர்கள் ராமன் கதையை இங்குள்ள பக்தர்கள், அந்த நாடுகளுக்குச் சென்று பரப்பிவிட்டு திரும்பவும் இங்கு வந்து விட்டார்கள் என்று கதை அளந்து திருப்திபட்டுக் கொள்கிறார்கள். ராமாயணம் திரேத யுகத்தில் நடந்தாக்கும் என்று டம்பமடிப்பவர்கள், உலக இலக்கியம் எதுவுமே 2560 ஆண்டுகளுக்கு முன்னதாக எழுதப்பட்டு நமக்குக் கிடைக்கவில்லை என்பதை அறிய வேண்டும் – நமது சங்க இலக்கியங்களுக்கும் அது பொருந்தும்.

இந்த விஷயம் இப்போது எழுந்துள்ள காரணம், சில நாள்களுக்கு முன்னர், Times Now  தொலைக்காட்சியில் வால்மீகி  - துளசிதாசர் இருவரையும் ஒன்றாகக் காட்டி ராமாயணம் பற்றி கூறிவிட்டு அடுத்த காட்சியில் கம்பன் என்ற பெயருடன் ஒரு படத்தைக் காட்டி அதில் கூறப்பட்டது என்னவென்றால்,

“ஐயோ(Aiyo) என்னைப் பற்றி எதுவுமில்லையா” என்கிறமாதிரி. எப்படியிருக்கிறது கதை? வால்மீகியாவது கம்பனுக்கு முன்புள்ள கவி. இந்த துளசிதாசர் இங்கு எப்படி கம்பனுக்கு இணையாக?

பக்தி இலக்கியம் தென்னாட்டில்  - தமிழில் – தோன்றிய பின்னர் இங்குள்ள ஆண்டாள் கதை வடநாட்டில் மீரா கதையாகியது.  (மீரா கதையில் பிற்கால பீரங்கி என்கிற யுத்த கால ஆயுதம் சொல்லப்படுகிறது) ஆண்டாள் கதையே சங்ககால நப்பின்னை கண்ணன் கதையின் உருமாற்றம். உலக இலக்கியங்களின் தோற்றம் இப்படிதான்.  ராமாயணத்தில் ஹோமரின் யுலிசிஸ் கதையின் போக்கு காணப்படுகிறது. எது முன்னர் தோன்றியது என்று ஆய்வாளர் சொல்ல வேண்டுமே ஒழிய வைதிக கோஷ்டிகள் அல்ல.

திரேதாயுகம்  என்பது 1296000 வருடங்கள் கொண்டது என்னும்போது, அந்த வருடம் இப்போது நாம் கணக்கிடும் 365 நாட்கள்  என்ற கணக்கு முறை என்று எப்படி சொல்ல முடியும்.

கிருதாயுகம்        -    1728000
திரேதாயுகம்       -    1296000
துவாபரயுகம்      -      864000

பின்னர் இப்போது நடக்கிற கலியுகம்.

வருடம், மாதம், நாள் என்று இப்போது நாம் பயன்படுத்துகிற காலக்கணக்கு  கலிலியோ  -  கோப்பர்நிக்ஸ் காலத்தின் பின்னரே ஏற்பட்டது.  சீனாவில், அந்தக் காலத்தில் மஞ்சள் ஆற்றில் புதிய தண்ணீர் வரும்போதெல்லாம் புதுவருடம் எண்ணப்பட்டது.  வடமொழியில் வர்ஷம் என்றால் மழை.

பக்தி இலக்கியத்தின் பின்னர் பசனைப் பாடல்களாக பல பயன்படுத்தப்பட்டன. அப்படிப்பட்ட துளசிதாசர் ராமாயணப் பாடல்கள் முன்பாகவா கம்பனைச் சொல்ல வேண்டும்?

ராமாயணமோ, மகாபாரதமோ பக்தி இலக்கியங்களும் அல்ல. ராமனும் கிருஷ்ணணும் கூறப்பட்ட காலத்தில் பூர்வகுடி மக்களின் லிங்க வழிபாட்டைத் தான் கடைப்பிடித்திருக்க முடியும். கோவில் அப்போது கிடையாது. பக்தி இலக்கியம் தோன்றிய பின்னரே அவர்கள் அவதார புருஷர்களாகத் தோற்றுவிக்கப்பட்டனர்.  பாகவதம், விஷ்ணுபுராணம் முதலிய 18 புராணங்கள் தோன்றியபின்னர் தான். அதன்முன்னர் அவர்கள் இதிகாச மனிதர்களே. வேதகால கடவுளரை எதிர்த்து லிங்க வழிபாட்டைத் திரும்பவும் கொண்டு வந்தவர்களே. இந்திரன், மித்ரன், வருணன் ஆகியோர் புறந்தள்ளப்பட்டனர்.  புராணக் காலத்தில் “தட்ச யக்ஞம்”  கதை இதற்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டு. வேத அல்லது பிராமண மதம் இருந்ததே ஒழிய பூர்வகுடியினரால் ஏற்றுக்கொள்ளப் படவில்லை. வேத என்ற சொல் வருமிடங்களில்  எல்லாம் அது ரிக்வேத முதலாய வேதம் என்று எடுத்துக் கொள்ளமுடியாது என்பது தெரிந்ததே. இவ்வேத நெறியை எதிர்த்தவர்களின் நூலும் வேதம்தான் என்பது கண்கூடு.

இலக்கியங்களை – அது மதம் சார்ந்து எழுதப்பட்டதாயினும், நவீன படைப்பாக இருப்பினும் – ஒரே மாதிரியான விதிமுறையைத் தான் கையாண்டு அணுக முடியும்.  புராணங்களில் நம்ப முடியாத ன இருக்கின்றனவே என்றால் நவீனப் படைப்புகளிலும் அதைப் பார்க்கலாம்.

பன்னாட்டு மக்களால் கொண்டாடப்படுகிற அவர்களது வேதங்களோ. புராணங்களோ, காப்பியங்களோ, பசனைப் பாடல்களோ எதுவாயினும் சரி, அவற்றின் கவிதை அம்சம் கொண்டே தராதரத்தை நிர்ணயிக்க முடியும்.

கம்பனையும் துளசிதாசனையும் இணைத்துப் பேச முடியுமென்றால் கம்பனையும் கதாகாலச்சேபம் பண்ணுபவரையும் இணைத்துக் கட்டுரை எழுதலாம்.

Times Now செய்தியைப் பார்த்ததும் பழையது ஒன்று ஞாபகம் வந்தது.

இந்தி மொழியை மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என்று புருஷோத்தம தாஸ் தாண்டன், மொரார்ஜி தேசாய் போன்ற அரசியல் கட்சி தலைவர்கள் முனைந்து நிற்கையில், திரு பணிக்கர் என்னும் பிரதம மந்திரி நேருவின் செயலாளர் அவரிடம் சொன்னதாக செய்தி வெளியாகியது.

“ஐயா – இந்தி மொழியின் இலக்கியங்களாக இரண்டே இரண்டு – ஒன்று  துளசிதாசரின் ராமாயணம். மற்றது ஆல் இண்டியன் ரயில்வே கைடு”.

அதைக் கேட்டு நேரு சிரித்துக் கொண்டாராம். நேரு அவர்களுக்கும் இந்தி மொழியின் பெருமை தெரியும். ஆங்கிலத்தில் பேசித் தான் காந்தியும் நேருவும் சுபாஷ் போசும்  நமக்கெல்லாம் அறிமுகமாயினர். ஆங்கிலேயரை எதிர்க்கவே ஆங்கிலத்தைப் பயன்படுத்தினர். ஆங்கிலத்தைக் கேலி செய்வதில் பெர்னாட்ஷாவை யாரும் மிஞ்ச முடியாது. அவர் ஆங்கிலத்தில்தான் எழுதினார். அவரது தாய்மொழி ஆங்கிலம் அல்ல.

ஏன் நன்னயப்பட்டர், எழுத்தச்சன் போன்றோரை விட்டுவிட்டனர்? அவர்களும் தங்களது மொழியில் ராமாயணம் எழுதியவர்கள்தாமே. துளசிதாசரை மட்டும் எடுத்துக்கொள்வானேன்?. அதுதான் இந்தியைப் பரப்பும் உத்தி. இம்மாதிரிப்பட்ட போக்கு அந்த மொழி மீது ஒரு வகை வெறுப்பை தோற்றுவிக்கும். அது நல்லதல்ல.

இந்தி பொதுமொழியாக இருப்பதால் மற்றமொழிகள் குந்தகம் அடையாது என்றால் ஆங்கிலமே பொதுமொழியாக இருப்பதில் என்ன தடை?

 

பிற கட்டுரைகள்

புதுச்சேரி
நிலைப்பாடுகள்
ஏறு தழுவுதல்
 
முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...





மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved