Girl in a jacket

நிலைப்பாடுகள்

பாரதிதாசன் ஊரில் தமிழ் ஆர்வலர் அதிகமிருப்பதில் வியப்பில்லை. தனித்தமிழ் இயக்கம் - புதுமைத் தமிழ் என்று பலவற்றில் பங்கு பெறுபவரும் அதிகம். மகிழ்ச்சிதான். அத்துடன் ஒருவகை தமிழ் எதிர்ப்பு உணர்வு இருப்பதாகவும் அது ரகசியமாகப் பரிபாலிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதிலும் உண்மை இருப்பதாகத் தெரிகிறது.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத பலர் - திரு ஜெகந்நாத ராசா திரு. கு. அழகிரிசாமி - போன்றார் அன்புடன் தமிழைப் போற்றி படைத்தவைகளை நாம் அறிவோம். தற்போது ஞானக்கூத்தன் திலீப்குமார் போன்ற பலர் இருக்கின்றனர் என்பதும் தெரிந்ததே. படைப்பாளி அல்லாது, ஆனால் ஆகவேண்டும் என்கிற ஆசை நிறைவேறாதிருக்க, வெறும் அக்கப்போர்களில் ஈடுபட்டு படைப்பாளிகள் மத்தியில் உலவிக் கொண்டிருப்போர் எல்லா மொழிகளிலும் இருக்கத்தான் செய்வார்கள். அதனால் என்ன என்றுதான் கேட்கத் தோன்றும், சில இடங்களில் கண்கூடாகத் தெரிகிறது. அந்த நிலை பல நல்ல படைப்பாளிகளையும் பாதித்திருக்கக் கூடும். "அட நம்ம தாய்மொழி தமிழ் இல்லையே" என்று ஏதோ ஞாபகம் வந்ததுபோல ஒரு மனநிலை அவர்களுக்கு ஏற்பட்டால், வருத்தப்பட வேண்டிய விஷயம்.

"இப்படிப்பட்ட குறுகிற மனநிலை கொண்டோர் தமிழ்ச் சிறுகதைக்கு சீரிய பங்களித்து வரும் பிரபஞ்சனையும் பாராட்டத் தயங்குவது தெரியும்.".

"தமிழ்நாடு முழுவதிலும் இப்படிப்பட்ட மனநிலை கொண்டோர் இருப்பார்களோ என்ற ஐயப்பாடும் எழுகிறது".

"சற்று ஆலோசித்துப் பார்த்தால் இதுபோன்ற நிலை ஏற்பட ஒருவரின் இலக்கியம் பற்றிய அஞ்ஞானமே காரணம் என்று தெரியவரும். அதாவது படைப்புத் திறனற்று பெயருக்கும் புகழுக்கும் மட்டும் ஆசைப்பட்டு ஒன்றிற்கு மாற்றாக இலக்கியவாதிகளின் சொந்த விருப்பு வெறுப்புகள் போன்றவற்றை பேசியும் எழுதியும் காலந்தள்ளி வரும் போலிகளின் இருப்பு எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்யும் - என்ன செய்வது."

••••••••••••••

இரண்டு டாக்குமெண்டரி படங்களைப் பார்க்க முடிந்தது - புதுச்சேரி வந்த பின்னர்.

ஒன்று ஜெயகாந்தன் பற்றியது. ரவி சுப்ரமணியம் இயக்கிய படம். இதற்கு முன்னதாக ரவியால் இயக்கப்பட்ட "மா.அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்" என்ற படத்தை விட வேறு சில இலக்கியத் தடங்களில் பிரவேசம் கொண்டதாக அமைந்துள்ளது. முன்னது இலக்கிய நாட்டம் கொண்ட சக கிராமத்து நபர்களுக்கு அவர்களது மொழியில் சொல்வதாகவிருந்தால், ஜெயகாந்தன் படம் வேறு திக்கில் பயணிக்கிறது. இவ்வகைப் பயணம் பயனுள்ளதுதான். படைப்பாளியின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். தனக்குத் தென்பட்ட உண்மையைச் சொல்லியாக வேண்டும் தென்பட்ட ஒன்றை உணரத்தான் முடியுமேயொழிய, அது என்னவென்று தெரியாத நிலை. நம்மிடம் சொல்லியாவது அதைத் திரும்பவும் தெரிந்துகொள்ள அவன் தேர்ந்தெடுக்கும் முறைகள் பலப்பல. எந்த முறையாகவிருந்தாலும் அந்தத் தோற்றம் வெளிப்பட வேண்டும், இல்லையென்றால் பயனில்லை. அது சமகாலத்தில் உங்களோடு ஒட்டியதாக இருக்க வேண்டும். ஒட்டியதாக இருக்கமுடியுமேயொழிய அந்த சமாச்சாரமாகவே ஆகிவிடக்கூடாது. ஆகிவிட்டால் அது பிரச்சாரம். எனவே பிரச்சாரமாகவிருந்தாலும், அது ஒரு புதிய ஞானத்தை தோற்றுவிப்பதாகவிருந்தால் அது படைப்பாளியின் வெற்றி. அந்த வகையில் அது ஒரு சமகால வழிமுறை. ஆனால் தோற்றமே முக்கியம் - விஷயம் அல்ல.

"வந்தே மாதரம் என்போம்" என்ற பாரதி வரிகள் பிரசாரமாகத் தான் தெரிகிறது. முன்பு அரசியல்வாதிகளும் பிரசாரமாகவே அதை பயன்படுத்தியதை நாமறிவோம். ஆனால் "என்னை வந்தே மாதரம்" என்று சொல்லக்கூடாது என்று கட்டளையிட நீ யார் - நான் சொல்லத்தான் செய்வேன்" என்ற சுதந்தர உணர்வு தென்பட உதவும்போதுதான் கவிதை தெரியும். அப்போது பிரசாரம் எங்கே சுதந்திர உணர்வு. நாடு சுதந்திரம் பெற்ற பின்னரும் வேண்டியதுதானே.

"அவன்தான் கோதமன் அவன் துறவியானான்" என்பது புதுமைப்பித்தனின் சாப விமோசனம் கதையின் கடைசி வரிகள். இவை கம்பனையே மிஞ்சி நிற்கும் அந்த வால்மீகி எம்மாத்திரம்?

அதுதான் தோற்றம் - அதுதான் படைப்பு - அதுதான் கவிதை அம்சம். அந்த வகையில் பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் என்று ஏற்கனவே தமிழர் எடுத்துக் கொண்ட நிலைப்பாடு உறுதிப்படுகிறது.

18.02.2012


மா.அரங்கநாதன்
163, 4வது தெரு, டி.ஆர்.நகர், புதுச்சேரி-13.
0413-2244788

பிற கட்டுரைகள்

புதுச்சேரி
புதுச்சேரி - 3
புதுச்சேரி - 4
 
முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...





மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved