பதுங்கிப் பாயும் வைதிகம்
இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் வெள்ளையர் தேசிய அளவிலும் பண்பாட்டு ரீதியிலும் கறுப்பு இனத்தவரை ஒழித்துக் கட்ட ஏற்பாடு செய்து ஆரம்பிக்கப்பட்ட இரகசியக் குழு Ku Klux klan. இந்தக் குழுவின் செயற்பாடு எழுத்து மூலமாகவேர் பகிரங்கமாகவோ இருக்காது. இதன் உறுப்பினர்கள் இதன் கொள்கையை மனமுவந்து ஏற்றுக் கொண்டு தன்னிச்சையாகச் செயல்பட்டனர். கொலைகளும் நடந்தன. ஓர் இனத்தார் மீது ஆதிக்கம் செலுத்த இன்னோர் இனத்திற்கு பிறப்பு ரீதியாக உரிமையுண்டு என்பதைப் போலிச் சித்தாந்தம் வாயிலாகவும் இலக்கிய மூலமாகவும் தத்துவரீதியாகவும் காட்டினர். சில இலக்கியவாதிகளும் மனப்பூர்வமாக ஒத்துழைத்தார். போலிச் சித்தாந்தத்தை ஓர் ஏகாதிபத்தியக் கொள்கைக்குப் பதிலாகப் பயன்படுத்தினர். ஏற்றத் தாழ்வுகள் இயற்கை விதிகளின்படி முறையானவைதாம் என்று காட்ட இந்த குழு உதவிற்று. அந்தக் குழு இப்போது இருப்பதாகத் தெரியவில்லை. அதன் போக்கு எப்போதும் இருந்து கொண்டிருக்கும் என்பதற்கு தமிழிலக்கிய உலகில் நெடுங்காலமாக இருந்துவந்து, இப்போதும் உயிர்பிழைத்து வரும்போக்கைக் குறிப்பிடலாம். இது குறைந்தது 1500 ஆண்டுகளாக பல்லவர் காலந்தொட்டு இருந்து வந்ததுதானே என்று கூறலாம். ஆனால் அப்போதும் அதற்கு எதிர்ப்பு இருந்தது. அது பகிரங்கமான எதிர்ப்பாகவிருந்தது விசேடமாகும். சித்தர் காலத்தில் வைதிக நிலை பகிரங்கமாக எதிர்க்கப்பட்டது. அண்மையில் ராமலிங்க வள்ளலார் காலத்திலும் பகிரங்கமாகவே எதிர்க்கப்பட்டது.
இப்போதைய நிலை மாறுபாடானது வைதிக எதிர்ப்பு என்ற ஒரு சொற்பிரயோகத்தைக் கொண்டு சில காரியங்கள் செய்யப்படுகின்றன. பெரும்பான்மையரின் இந்த வைதிக எதிர்ப்பு பழை யபிராமணியத்தின் அடிப்படையில் நின்று தற்காலத்திற்கு ஏற்ற வகையில் கொண்டு வருவது என்றாகிறது. மிஞ்சிப் போனால் இதுதான் இந்தியக் கலாச்சாரம் என்று சொல்லிவிடுவார்கள். இப்படிப்பட்ட நிலை வைதிகர்களுக்கு இக்கால கட்டத்தில் ஒரு தேவையாகவும் இருக்கிறது. மொத்தத்தில் ஒரு நவீன பிராமணியக் குழு தயாராகிவருகிறது என்று கூறலாம்.
இந்நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்ட Ku Klux Klan இயக்கம் பற்றி குறிப்பிட்டது இதற்காகவே.
வைதீக மீட்சி
இந்நவீன வைதிகம் இன்றைய தோற்றம் பெற்றது ஐம்பதுகளில் என்று சொல்லாம். மறைமலையடிகள், பெரியார் மற்றும் திராவிடக் கழகத் தலைவர்கள் என்று மக்கள் மனந்திரும்பியபோது, திடீரென வணிகத் தமிழ்ப் பத்திரிகைகளில் ஒரு விளைவு ஏற்பட்டது. வள்ளலார் காலத்திலும்கூட பயமில்லாமல் தங்கள் தமிழ் எதிர்ப்பைக் கையாண்டவர்கள் தங்கள் நிலையை மாற்றி, தத்தம் பத்திரிகைகளில் வந்த கதை, கட்டுரைகளின் போக்கு மாறின. ஐம்பதுகளின் முன்னர், பாப்பா மலர்க் கதைகளில் வரும் கொக்கும் நரியும்கூட, "நான் நினைச்சுண்டிருநதேனோல்லியோ" என்றுதான் பேசும். அந்த முறை மாற்றப்பட்டது. அகநானூறு, புறநானூறு பெயரையெல்லாம் அவர்கள் உச்சரித்தார்கள். தங்கு தடையில்லாது திருக்குறள் பெருமை பேசப்பட்டது. ஆனால், ஒன்று மட்டும் விட்டுப் போகாமல் மிகவும் கவனமாகப் பரிபாலிக்கப்பட்டது. எந்த மாதிரியான நிலையிலும் சமஸ்கிருதத்தின் பெருமை குன்றாமல் பார்த்துக் கொண்டே செயல்பட்டார்கள். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்துத் தமிழ் பற்றிய கட்டுரையிலும்கூட சமஸ்கிருதப் பெருமையைச் சேர்த்துவிடுவது வழக்கமாயிற்று. குறைந்தது சமஸ்கிருதப் பெருமை குன்றாத அளவில் கவனித்துக் கொண்டார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இப்படிப்பட்ட கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவரது கதைகளையும் கட்டுரைகளையும் தங்கள் பத்திரிகைகளில் வெளியிட்டனர். இதற்கு முன்பே புதுமைப்பித்தன் கதைகளையும் வெளியிட்டனர். ஆனால் புதுமைப்பித்தன் பரவலாகப் பேசப்படாது பார்த்துக் கொண்டனர். நல்ல கதைகள் வேண்டும் என்பதற்காக மட்டுமே புதுமைப்பித்தனைப் பயன்படுத்திக் கொண்டனர் - அக்காலத்தில் புத்தரைப் பயன்படுத்தி, பின்னர் அவர் கோட்பாடுகள் மூலம் வைதிகத்தை வளர்த்ததுபோல், வைதிகம் இப்படித்தான் வேலைசெய்யும்.
வேத காலத்திலிருந்த ஆரிய எதிர்ப்பை வேத சுலோகங்களிலே சேர்த்து அதனையும் வைதிகமாக்கினர். சமண, புத்த தத்துவங்களைத் திருடி, சமஸ்கிருதத்தில் எழுதிக் கொண்டு, ஒவ்வொன்றிற்கும் ஒரு புராணக் கதையைச் சேர்த்து அவையாயவும் வைதிகமென்றனர். சமண - புத்த மடங்களைப் பின்பற்றி, சங்கர மடங்களும் பிறவும் அமைத்து தங்க சொத்து என்றனர், பிராமணியத்தை எதிர்த்து எழுந்த பக்தி இயக்கம் வைதிகமாக்கப்பட்டது. கி.பி. பதினாலாவது நூற்றாண்டில் கிடைத்த சமஸ்கிருத ஓலைச் சுவடிகளை கிருத யுகம் என்று கூறி, வேண்டிய மட்டும் இடைச் செருகல் செய்தாயிற்று.
"என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். யாரை வேண்டுமானாலும் - தொழுது கொள்ளுங்கள் - ஆனால் சமஸ்கிருத மத்திரங்களைச் சொல்லியே ஆக வேண்டும்" என்று சொல்லி இத்தனை காலமும் ஒரு பூர்வகுடி இனத்தை அறிவிலிகளாக வைத்திருந்தது வைதிகம்.
இந்த வைதிகம் எதைக் குறிக்கிறது? சுத்த ஆரியனைத் தவிர எவனுக்கும் உலகை ஆளத் தகுதியில்லை என்ற அடால்ப் ஹிடலரை அல்லவா நமக்குக் காட்டும். அந்த ஹிட்லர் கூட இங்குள்ள இந்தோ - ஆரியரை ஆரிய இனமாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பது வேறு விஷயம். ஒரு நீக்ரோ உடற்பயிற்சியில் ஈடுபட்டு, ஒட்டப்பந்தயத்தில் உலகல் சிறந்தவனாக வந்தாலும், அப்படிப்பட்ட நீக்கரோ சிறந்தவனாக ஆவதற்கு இயற்கையில் தகுதியற்றவன் - இயற்கை ஆரிய மக்களைப் போல அவர்களைப் படைக்கவில்லை என்று விஞ்ஞான ரீதி சோதனைகளை வெளியிட்டது அன்றைய நாஜி அரசு (ஜெஸ்ஸி ஓவனின் வாழ்க்கைக் குறிப்பு). அதற்கும் இங்குள்ள பிரம்மாணங்களுக்கும் ஸ்மிருதிகளுக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?
Survival of the fittest என்ற டார்வின் தொடரைத் தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டு, அதை நிறவேற்றுமைக் கொள்கைக்காகப் பயன்படுத்தியவர்கள் - அதே டார்வினின் பின் வரும் வரிகளைக் கண்டுகொள்ளவில்லை;
"டெர்ரா-டெல்-ஃபுபேகா எரிநிலம்-வாசிகள் காட்டுமிராண்டிகளாகக் கருதப்படுகின்றனர். ஆனால் அவர்களில் சிலர் கப்பலில் ஏற்றப்பட்டு சில ஆண்டுகள் இங்கிலண்டில் வசித்த பின்னர் பெரும்பான்மையினரைப் போல் ஆயினர்".
"உள்ளத்து இன்ப - துன்ப உணர்ச்சிகளை முகத்தின் நடிப்புத் தசைகளின் உதவியால் வெளியிடுவதில் வெவ்வேறு மனித இனங்களைச் சேர்ந்தவர்களிடம் காணப்படும் ஒற்றுமை வியப்பூட்டுகிறது".
இதைக் கூறியவரும் டார்வின்தான். வைதிக ஃபாசிசம் மற்ற தத்துவங்களிடமிருந்து தங்களுக்குச் சாதகமானவற்றை எடுத்து, அவற்றையும் வைதிகமாக்கி விடுவது இங்கு மட்டும் நடைபெறவில்லை.
சமயபுரம் மாரியம்மன் கோவிலிலும் மற்றுமுள்ள தமிழ்க் கோவில்களிலும் பூசனை செய்து வந்தது பிராமணர் அல்லர். ஒரு நிர்வாக அமைப்பிற்காக சட்ட ரீதியாக மாற்றப்பட்ட ஒன்று அது. அதற்கான காரணங்கள் பரிசீலிக்கப்பட வேண்டியவை. மாரியம்மன் என்ற பெயரையே தம் குழந்தைகளுக்குச் சூட்டிக் கொள்வது அக்கோயிலில் தற்போது பூசனை செய்வோரின் வழக்கம் அல்ல. பெண் தெய்வங்களைப் போற்றுவது ஆரிய வழக்கமும் அல்ல. அப்படிப் போற்ற வேண்டி வந்தால், அவற்றிற்கு ஞானஸ்நானம் செய்வித்து, சமஸ்கிருதப் பெயர் சூட்டி, ஒரு புராணக் கதையை சிருஷ்டித்து, அத்தெய்வம் வேதத்தை ஒப்புக் கொண்டதுதான் - ஆரிய தர்மம்தான் அதன் வழக்கு என்று பிரசாரம் செய்து ஆரியமயமாக்கிவிட்ட பின்னர்தான் ஏற்றுக் கொள்வார்கள். ஆரியமயமாகி விட்டால் தமிழ்ப் பெயர்களை ஏற்றுக் கொள்வதில் குந்தகம் ஏற்படாது. இல்லையென்றால் சமஸ்கிருதப் பெயராக இருந்தாலும் அவை ஏற்றுக் கொள்ளப்படமாட்டா. எடுத்துக்காட்டாக, திருவாழ்மார்பன், ஒப்பிலியப்பன் போன்ற தமிழ்ப் பெயர்கள் அங்கீகரிக்கப்படுகின்றன. ஆறுமுகம் (சண்முகம்) ஆவுடையப்பன், அம்மையப்பன், ஞானசம்பந்தன், சுந்தரமூர்த்தி, மணிவாசகன் ஆகிய பெயர்கள் சமஸ்கிருத சம்பந்தம் இருந்த போதிலும் ஏற்கத் தகாதவையாகின்றன. இதற்கெல்லாம் வரலாற்றுப் பூர்வமான காரணங்கள் உண்டு. சுருக்கமாகச் சொன்னால் கடவுள் பக்தி என்பதைவிட, இன ரீதியான உணர்வே அவர்களுக்கு அடிப்படையாக அமையும். அதனால்தான் சொல்ல வேண்டி வருகிறது. யாரை வேண்டுமானாலும் கடவுளாகப் போற்ற அவர்கள் தயார். ஆனால் ஒன்று, மந்திரம் சமஸ்கிருதத்தில் இருக்க வேண்டும். இன்னொன்று, இன ரீதியாக ஆரிய தர்மத்தை ஏற்றுக் கொண்ட கடவுளாக அது ஆக்கப்பட்டிருக்க வேண்டும்.
இதெல்லாம் இன்னொரு இனத்தை கேலிக்குரியதாக்குகிறதே என்ற கவலை அவர்களுக்கில்லை. நம்முடைய அரசர்களுக்கே இருந்திருக்கில்லையே.
வைதிகம் என்பதோடு சமஸ்கிருதம் மட்டுந்தானா சம்பந்தப்பட்டுள்ளது. தமிழ் இல்லையா என்ற கேள்வி நியாயமாகவே எழக்கூடியது. எபிரேயத்தில், கிரேக்கத்தில் இலத்தீனில், ஏன் ஆங்கிலத்தில் கிடையாதா என்று கேட்க முடியும்.
எங்கும் இருந்ததும் இருப்பதும்தான் அது. இந்நாடு அதிலே பல விசேடங்களைக் கொண்டு விட்டதுதான் முக்கியம்.
இந்த வைதிக எதிர்ப்பு பிராம்மண எதிர்ப்பு அல்ல. சிலர் தங்களுக்கு வேண்டாத பிராம்மணரை எதிர்க்க இதைப் பயன்படுத்தியிருக்கலாம்.
வைதிக எதிர்ப்பு காலங்காலமாக இருந்து வருகிறவொன்று. அது இம்மண்ணின் வேர்களிலிருந்து கிளம்பியதாகும். அப்படியானால் எப்போதும் இருந்து கொண்டுதானிருக்குமா, வெற்றி பெறாதா என்ற கேள்வியும் எழும். அப்படிப்பட்ட இரண்டாந்தர மூன்றாந்தர சிந்தனைகள் ஏற்பட்டதன் விளைவைத்தான் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஜார்ஜ் ஆர்வெலின் மிருகங்கள் பண்ணையாக மாறிக் கொண்டிருக்கும் கதை அது.
வைதிக எதிர்ப்பு என்பதே அதைக் தெரிந்து கொள்வதுதான். எது வைதிகம் என்பதைத் தெரிந்து கொள்வதிலேயே வைதிக எதிர்ப்பு அறியப்பட்டுவிடுகிறது. நடவடிக்கைகள் தொடர ஆரம்பித்து விடுகின்றன. திருமூலர், சிவவாக்கியர், வள்ளலார் போன்ற சித்தர்கள் வெளிப்படையாகவே சொன்னார்கள் என்றால், திருவள்ளுவர், இளங்கோ போன்ற பெரியவர்கள் தமிழ் மரபைச் சொல்லி அதை உணரச் செய்தார்கள் எனலாம். வைதிகம் சிலவற்றைத் தன்னுடையதாக்கி வெற்றி கொண்டதற்கு அவ்வப்போது மன்னர்களே காரணம். வைதிகத்தை எதிர்த்த புத்தரின் தத்துவம் வைதிக மடங்களால் பின்னர் சுவீகரித்துக் கொள்ளப்பட்டன. பக்குவமாக ஞானஸ்நானம் நடத்தி முடிக்க உதவியவர்கள் மன்னர்கள்தாம். வேத காலத்தில் இருந்து எதிர்ப்பும் தெரிந்ததுதான். அப்போது நிலவிய எதிர்ப்பு பணியரிடமிருந்து. அதுவும், "கடவுள் என்பது "இல்லை" என்பதாகும்" என்ற சமண நெறியும், இல்லை இல்லை என்பதால் அது உண்டு என்ற தென்னாட்டுச் சித்தாந்தமும், தொல்காப்பியத்திற்கு முன்னரே நம்மிடையே புழங்கி வந்த கடவுள் என்ற தமிழ்ச் சொல்லின் பொருளும் சம்பந்தம் உடையது என்று சொல்ல முடியும்.
துளசி என்னும் செடியின் இலை மருத்துவ குணம் கொண்டது என்பதைக் கண்டு கொண்டவன் வைதிகன் அல்லன். அவன் ஓர் அறிவியல்வாதி. மதவாதிகள் அந்த அறிவை தங்களுடையதாகப் போற்றி சாதகமாக்கிக் கொண்ட உடனேயே, அந்த அறிவு எல்லோருக்கும் பயன்பட தடை ஏற்பட்டுவிடுகிறது. எப்போதாவது இந்தத் துளசி உடல் நலத்திற்குக் கெடுதி என்று தெரியவந்தால் அந்த விஞ்ஞான அறிவையும் தனதாக்கிக் கொள்ளும் தந்திரம் படைத்தது வைதிகம்.
இதை அறிந்து கொள்வதுதான் வைதிக எதிர்ப்பு. பல உருவங்களில் வரும் வைதிகமும் அதற்கு எதிர்ப்பாக நிற்பனவும் நின்று மோதுவதைக் கவனித்தால் உண்மை புலப்படும்.
இந்த நாட்டைப் பொறுத்தவரை மொழி என்ற வகையில் தான் வைதிகமானது, அதிக வினையை விதைத்துள்ளது. வேறு வகையில் குறைவாகத்தான் சொல்ல வேண்டும்.
மொழி என்பதின் வாயிலாகக் கலைகள் யாவும் சமஸ்கிருதத்தின் பிறப்பிடம் என்ற மாயத் தோற்றத்தைப் படிப்பற்றவரிடையே ஏற்படுத்திக் கொண்டு நின்றதும் வைதிகம் தான். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய துரோகமாகக் கருதப்படுகிறது. மற்றையத் திராவிட மொழிகளில் இப்படியல்ல. அதன் முக்கிய காரணம் வடமொழிகளில் இலக்கியங்களான இராமாயண - பாரதக் கதைகள் தாம் அம்மொழிகளில் முதல் இலக்கியங்களாக வந்தன. தமிழில் அவ்வாறல்ல. இதுவே தமிழிற்கும் மற்ற திராவிட மொழிகளுக்குமான பெரிய வித்தியாசமாக நிற்கிறது. சமஸ்கிருதம் தவிர ஒரு மொழியில் பெருமை பேசுவது - அதாவது எல்லா மொழிகளுக்கும் சமஸ்கிருதம் தாய் என்று சொல்லிவிட்டு தத்தம் மொழியைப் புகழ்ந்து பேசுவது தவிர - தமிழைப் புகழ்வது அபாண்டம் என்று சொல்கிற அளவுக்குப் போய்விட்டது.
உலகுமொழி
தமிழ் என்னும் மொழி இந்நாட்டில் வேதங்கள் வருவதற்கு முன்பேயே இருக்கிறது. அது சமஸ்கிருதம் போல ஐரோப்பிய உறவு கொண்ட மொழி அல்ல என்று சொன்னால் இந்திய மக்கள் பெருமையல்லவா அடைய வேண்டும். அவ்வரலாற்று உண்மை எப்படி ஒற்றுமையைக் குலைக்கும்? வடமொழி என்னும் சமஸ்கிருதம் இந்நாட்டில் வந்து சீர் அடைவதற்கு முன்பு இங்கே நாகரிகமோ மொழியோ இல்லை என்பவனது நாட்டுப் பற்றை தமிழ் மக்கள் சந்தேகிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள ஒரு மதவாதியாகவோ வெறியனாகவோதான் இருக்க முடியும். அப்படிப்பட்டவர்களில் சிலர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவராக இருந்தால் கூட, அப்படி ஈடுபட்டது இம்மாதிரி வைதிகத்தையும் தங்கள் மொழியை மீட்கவும் தானேயொழிய மக்கள் நலனுக்கு அல்ல என்று தமிழர்கள் எண்ணத்தான் செய்வார்கள்.
சில சொற்களைத் தமிழில் சேர்த்துக் கொண்ட அளவில் தான், வடமொழியானது வைதிகத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அது சில காலமாக ஆங்கிலச் சொற்களை நாம் ஏற்றுக் கொண்டது போலத்தான். மரபையும் நாகரிகத்தையும் ஒன்றும் பண்ணிவிட முடியவில்லை. ஆங்கிலத்திற்கும் சமஸ்கிருதத்திற்கும்தான் என்ன வித்தியாசம்? போப்பாண்டவர் இந்தியாவிலுள்ள கிறித்தவர்கள் சமஸ்கிருதம் பயில வேண்டும் என்று சொன்னதில் வரலாற்று உண்மை உண்டு. ஐரோப்பியப் பல்கலைக் கழகங்களில் சமஸ்கிருத மொழியைச் சேர்த்துக் கொண்டு பாராட்டுவதிலும் உண்மை உண்டு. தமிழ்ப் பெயர்களை உச்சரிக்க முடியாமல் திண்டாடும் தொலைக்காட்சி (தில்லி) ஐரோப்பிய பெயர்களில் கஷ்டப்படுவதில்லை என்பதும் உண்மை. அவ்வகை உண்மை இரகசியமாகவே பரிபாலிக்கப்பட்டு வந்தது. இனிமேலும் அப்படியே இருந்துவிட முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காகவே கல்வியறிவை இது காறும் தமிழரிடையே தடுத்து வந்தார்கள். இப்போது காரியம் மிஞ்சிவிட்டது. என்ன செய்வது? ஓர் இனம் கலப்பு இனத்தது என்று சொல்லிக் கொள்ள எந்த சங்கோசமும்பட வேண்டிய நூற்றாண்டு அல்ல இது. எந்த மரபையும் மொழியையும் அவர்கள் சார்ந்துள்ளனர் என்பதை அவரவர்கள்தாம் தீர்மானித்துக் கொள்ள முடியும்.
எல்லா இனத்திலும் மொழியிலும் நல்லவரும் நல்ல இலக்கியங்களும் உண்டு. இரண்டு மரபுகளுக்கிடையே சிக்கிக் கொண்டுவிடுவதில் கஷ்டங்கள் இருக்கலாமேயொழிய கேவலமொன்றுமில்லை. கம்பன்கூட இரு மரபுக்குள் சிக்கியவன்தான். வள்ளுவன்-இளங்கோ, சித்தர்-வள்ளலார் போன்றோருக்கு அந்த நிலை ஏற்படவில்லை.
"ஆரிய மொழிகளின் தோற்றம், உண்மையான இலக்கணம் ஆகிய நிலைகளை நான் இந்தத் தமிழ் மொழியின் மூலமாகவே முதன் முதலில் உணர முடிந்தது."
பகவான் என்று போற்றப்படும் அரவிந்தரின் மேற்படி உரையை வைதிகர்கள் ஏற்றுக் கொள்வர் என்று நம்புவதற்கில்லை. இது தேசபக்திக்கு குந்தகம் விளைவிக்கும் ஒன்று என்று அந்த மகானையும் ஒதுக்கி வைக்க ஆரம்பிக்கலாம். ஆனாலும் இங்கே ஒரு சங்கராச்சாரியிடத்தில், வள்ளலார் கூறியவைதாம் நம்மைப் பொறுத்தவரை வரலாற்று உண்மை.
நமக்குத் தாய்மொழி - தந்தை மொழி எல்லாம் தமிழ்தான்.
- 1994