Girl in a jacket

கவிமணி

மா. அரங்கநாதன்


கவிமணியைப் பற்றி பேச்சு எழும்போதெல்லாம் அவர் எங்களூர்க்காரர் என்ற எண்ணமே முதலில் ஓங்கும். பக்கத்து ஊர் என்றாலும் எங்கள் ஊரிலிருந்து பார்த்தால் கிட்டத்தட்ட புத்தேரியில் அவரது வீடே தெரியும். இரண்டு ஊரையும் பிரிப்பது பழையாறு என்னும் பஃறுளியாறு. “இங்கிருந்து கொஞ்சம் பலமாக சத்தமிட்டு கூப்பிட்டாலே அது புத்தேரி வரை கேட்கும் என்று ஊரிலே சொல்வார்கள்.

ஆங்கிலம் நன்கு அறிந்த கவிஞர்களில் பாரதியாரோடு கவிமணியையும் சேர்த்துச் சொல்வதுண்டு. கல்வெட்டுகள் பற்றி – காந்தளூர்சாலை போன்ற – கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். பள்ளிக்கூடத்தில் ஆங்கில ஆசிரியராகவும் இருந்ததாகவும் சிலர் சொல்வதுண்டு.

உமர்கயாம் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்தவர். இரும்பு கூண்டிற்குள் புலியை வைத்துப் பாடிய வில்லியம் பிளேக் கவிதையை மொழிபெயர்த்தவர். ஆசிய ஜோதி மொழிபெயர்ப்பும் அவருடையதுதான்.

சிறுவயதில்தான் அவரை நேரில் பார்த்த அனுபவம் உண்டு. “என்னப்பேன் – என்ன படிக்கிறே” என்று முதுகைத் தட்டிக் கொடுத்தவர். எங்கள் ஊர் நூல் நிலைய கட்டிட திறப்பு விழா போன்றவற்றிற்கு வருவார். நூல் நிலையத்தின் பெயரை “நம்மாழ்வார் விவேக அபிவிருத்தி வாசக சாலை” என்று ஆக்கியவர் அவர்தான். ஒருதடவை கலைவாணர் என்.எஸ்.கே யுடன் ஒரு விழாவிற்கு வந்தார். எப்போது வந்தாலும் கோயிலுக்குப் போவது தவறுவதில்லை. “இது நம்மாழ்வாரின் ஊர் – அதற்காக பெருமைப்பட வேண்டும்” என்பார்.

18 வயதிலேயே சென்னை வந்து விட்டபடியால் இலக்கியம் பற்றியெல்லாம் பேச வாய்ப்புக் கிடைக்கவில்லை. சென்னையில் இருக்கும் போது கண்ணன் பத்திரிகையில் வந்த தனது பிள்ளையார் கவிதையை கவிமணியிடம் காட்டுவதற்காக புத்தேரி சென்றேன் என்று கிருஷ்ணன் நம்பி கடிதம் எழுதியிருந்தான்.

கிட்டத்தட்ட நாஞ்சில் நாட்டின் எல்லா ஊர்களிலும் கவிமணியின் உறவினர்கள் இருந்தார்கள். அவரது எழுத்தில் ஒன்றுகூட படித்து அறியாதவரும் “நான் அவருக்குச் சொந்தம்” என்று சொல்லிக் கொள்வதில் குறைவிருக்காது. பேசினால் அவரது வீட்டில் கிடைக்கும் முறுக்கு – தோசை பற்றிய விவரங்களே அவர்களது பேச்சாக இருக்கும். காபி கிடைக்காது. கவிமணி இல்லத்து முறுக்கு மிகவும் நன்றாக இருக்கும் என்பார்கள். நானும் சாப்பிட்டிருக்கிறேன். டி.கே.சி இல்லத்து தோசையும் கவிமணி இல்லத்து முறுக்கும் அந்தக் காலத்தில் பேர் போனது.

நிறைய வாழ்த்துப் பாக்கள் இல்லையெனாது எழுதி கொடுத்திருக்கிறார். எனக்குத் தெரிந்த ஒருவர் தனது வீட்டின் கதவை எப்போது திறந்தே வைத்திருப்பார். யார் வேண்டுமானாலும் அவரிடம் கேட்டுப் பெறலாம் என்ற பொருளில் எழுதிக் கொடுத்த வெண்பா ஒன்றை பின்னாளில் சென்னையில் அந்த நபர் என்னிடம் காட்டினார். அந்த வெண்பாவில் சொல்லப்பட்ட கருத்தை நாஞ்சில் நாட்டில் யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் – அத்துணை வள்ளல்த் தன்மை உடையவர் அந்த புண்ணியவான்.

இரங்கற் பாக்களும் உண்டு. ரசிகமணி டி.கே.சி அவர்களின் புதல்வன் செல்லையா காலமானதை அறிந்த கவிமணி வெண்பா ஒன்றை எழுதி அந்த வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார். அதைப் படித்த ரசிகமணி “இப்படி ஒரு கவிதையைப் பெற உயிரையே கொடுக்கலாம்” என்றார். அந்த வெண்பா :

எப்பாரும் போற்றும் இசைத்தமிழ் செல்வாவென்

அப்பா அழகிய செல்லையா – இப்பாரில்

சிந்தை குளிர சிரித்தொளிரும் நின்முகத்தை

"எந்தநாள் கண்பேன் இனி".

மயா – இன்கா நாகரிக காலகட்டத்து எழுத்து ஓவியங்கள் பற்றி ஒரு மேனாட்டு பேராசிரியர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கில பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுதியிருந்தார். அந்த நாகரிக கால கட்டத்தில் – அமெசான் நதிக்கரையில் வாழ்ந்தவர்களில் பெண்கள்தாம் வேட்டைக்குச் சென்று உணவு சேகரிக்கும் வேலையை செய்தனர் என்றும் வில்லை வளைத்து அம்பு தொடுக்க தங்களது ஒரு புற மார்பு இடையூறாக இருந்த காரணத்தால் அதை சிறு வயதிலேயே வெட்டி எடுத்து விடும் வழக்கம் அந்த இன மக்களிடம் இருந்தது என்றும் எழுதி, தமிழ் நாட்டிலும் அதே நாகரிகச் சான்றுகள் இருக்கின்றன என்றும் கூறியிருந்தார். இதைப் படித்துவிட்டு கவிமணி அவர்கள் “ அடப்பாவி மனுசா – இங்கே உள்ளது அர்த்தநாரீசுவரர் சிலை – இது வேறு” என்று பதைபதைத்து எழுதினார். “மங்கையராக பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்று பாடல் இயற்றினார். ஆனால் யார் சொல்லி என்ன நடந்து விட்டது – பெண்ணினம் இன்றும் அடிமை தானே.

வையாபுரி பிள்ளை அவர்கள் கவிமணியின் நெருங்கிய நண்பர். அவரது இல்லத்துக்கு அடிக்கடி வருவதுண்டு. டி.கே.சி, கல்கி போன்றோரும் வந்திருக்கிறார்கள்.

உள்ளத்து உள்ளது கவிதை – இன்பம்

உருவெ டுப்பது கவிதை.

என்று எழுதிய கவிமணியிடம் ஒரு அன்பர் அந்த வரிகளைப் பற்றிப் பேசிய போது அதற்கு அவர் கீழ்க் கண்டவாறு பதில் சொன்னாராம்.

“உள்ளத்து உள்ளதுதான் கவிதை. இன்பம் உருவெடுப்பதுதான் கவிதை. ஆமாம். இப்போது நீங்கள் சொல்லுங்கள், நான் கேட்டுக் கொள்கிறேன்.

 
முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...





மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved