செய்கு தம்பிப் பாவலர்

மா. அரங்கநாதன்

தமிழாசிரியர் பிச்சைக்கண்ணு அடவியார் அவர்கள் நாஞ்சில் நாட்டில் கோட்டாறு பகுதியைச் சார்ந்தவர். சில சமயம் பாடங்கள் தவிர பொதுவான விசயங்கள் குறித்து பேசுவார். சங்க இலக்கியம், கம்பராமாயணம் போன்றவற்றை மிகவும் அழகாக போதிப்பார்.

ஒருதடவை வகுப்பில் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டார். நாங்கள் கேட்டதற்கு உடைந்த குரலுடன் “பாவலர் போய்விட்டார்” என்று கூறி ரொம்ப நேரம் மௌனமாக இருந்தார். பின்னர் அவதானம் பற்றியும் அதை சாதித்தவர்கள் பற்றியும் விரிவாக கூறினார்.

ஆறுமுக நாவலர் நிறைவேற்றிய தசாவதானம் பற்றியும் பாவலர்தம் சதாவதானம் பற்றியும் அறியும் போது மனித மூளையின் ஆற்றல் பற்றி பிரமிக்க முடியும்.

பெரும்பாலும் ஞாபக சக்தியை அடிப்படையாக கொண்டு இந்த அவதானம் இருந்தாலும் வேறு பல சாகச செயல்பாடுகளும் இதில் உள்ளன என்று அறிந்தோம்.

ஆறுமுக நாவலர் அவர்களின் தசவதானம் பத்து நபர்கள் கேள்விகளைக் கேட்க அங்குமிங்குமாக அந்த இடத்தில் நடந்து ஒவ்வொருவரின் கேள்விக்கும் சரியான பதில்களை சொல்வதைக் கொண்டது. கேள்விகள் கேட்கும் போதும் அவர் நடந்தவாறு உருத்திராட்ச மாலையை உருட்டிக் கொண்டே “வேலும் மயிலும் துணை” என்ற வரியை பிசகாது சொல்லிக் கொண்டே வந்து முதற்கேள்வி கேட்டவரிடம் அதற்கான பதிலையும் அதுபோல மற்ற கேள்விகளுக்கான பதில்களையும் சொல்லி முடிப்பார். இடையிலே நடந்து கொண்டிருக்கும் போது தூரத்தில் யாரவது ஒரு செய்யுளைச் சொல்லலாம். அப்படிச் சொன்னது எந்த கேள்வியின் அடுத்ததாக என்று கூறி அது என்ன செய்யுள் என்றும் விளக்குவார். மேலும் ஏதாவது மலர் அல்லது மிருதுவான வஸ்து ஒன்றை அவர் முதுகிலே எறிவதுண்டு. அது எந்த கேள்வியின் போது என்பதையும் முடிவிலே சொல்ல வேண்டும்.

இது தசாவதானம். செய்கு தம்பிப் பாவலர் சாதித்த சதாவதானமும் முறைகளைப் பொறுத்தவரை இவ்வாறுதான். ஆனால் அது நூறு கேள்விகள் – அதற்கு ஏற்றார்போல் ஞாபக சக்திக்குச் சவால்விடும் சில விசயங்கள்.

கேள்விகள் வரிசையாக உட்கார்ந்து இருப்பவர்களிடமிருந்து ஒவ்வொன்றாக அவரவர்கள் பக்கம் பாவலர் வரும்போது கேட்கப்படும். பத்து வரிசையிலிருந்தும் நூறு கேள்விகள் என்ற கணக்கு. அவை தமிழ் இலக்கியம் என்பது மட்டுமல்லாமல் சில பொதுவான வகையாகவும் இருக்கும். சில விடுகதைகளாகவும் இருக்கும். இவையெல்லாம் போதாதென்று வேறொன்றும் வைத்தும் சோதனை செய்வதுண்டு. அது சீட்டுக்கட்டு சமாச்சாரம். வரிசையோடு இரண்டு நபர்கள் சீட்டுகளைக் கலைத்து மூன்று பேருக்குப் போட்டு விளையாட்டைத் தொடங்கியிருப்பார்கள். அந்த வரிசையில் வரும்போது இவர் பங்கிற்கு மற்றவர்கள் போட்ட சீட்டுகளை கவனித்து அதற்கு ஏற்றது போல் பதில் சீட்டுப் போட வேண்டும். போட்டுவிட்டு மற்றவர்கள் அதற்கு முன்பு கேட்ட கேள்விகளுக்கு பதிலைத் தந்து புது கேள்விகளையும் கேட்டு நடந்து அந்த சீட்டுக்கட்டுப் பக்கம் வரும்போது இவர் பங்கிற்கான பதில் சீட்டை போட வேண்டும். இது போன்ற முறை மற்ற அவதானங்களில் கிடையாது என்று தெரிகிறது.

ஒருவர் தாம் புதிதாக இயற்றிய வெண்பா ஒன்றின் சீர்களை மாற்றி முழுவதும் சொல்ல அவதானி மற்ற கேள்விகளுக்கு இடையே இந்த சீர்கள் எல்லாவற்றையும் யோசனை செய்து முதலடி, இரண்டாவது அடியின் தனிச் சீர் கடைசி அடியின் வார்த்தையானது நாள், மலர், காசு, பிறப்பு ஆகியவற்றின் வெண்பா இலக்கணத்தோடு முடியும் விதத்தில் அந்த வெண்பாவை வகைப்படுத்தி முழுவதுமாக சொல்ல வேண்டும். இது மிகவும் கடினமான ஒன்று என சொல்லப்படுகிறது.

தமிழ் இலக்கியத்தில் பழந்தமிழ் மட்டுமல்லாது சித்தர் பாடல், அந்தாதி வகையறாக்கள், பழமொழிகள், நாட்டுப் புறக்கதைகள் இவை யாவும் கிட்டத்தட்ட வள்ளலார் காலம்வரைக்கும் நம்மிடையே பரவி இருக்கின்ற எல்லாவற்றையும் அவையினர் கேட்க ஒவ்வொரு கேள்விக்கும் குறிப்பிட்ட கால அளவுக்குள் பதிலைத் தருவார்.

பாவலர் அவர்கள் சதாவதானத்தை அனந்தபுரம், சென்னை மற்றும் இரண்டொரு இடங்களிலும் நடத்தியிருக்கிறார் என்று தெரிகிறது. அவதானத்தை வெற்றிகரமாக முடித்திருந்தாலும் அனந்தபுரத்தில் நடத்தும் போது எண்பதுக்கும் மேலான கேள்விகளை சரியாகச் சொல்லி முடித்த பின்னர் அவையினர் பாவலர் அவர்கள் வியர்வைமல்க சோர்வுடன் அங்குமிங்கும் நடந்து நூறையும் முடிக்கும் ஆர்வத்துடன் இருந்ததை கண்டு அவரது உடல் நலத்திற்கு ஏதேனும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்துடன் அவரை அணுகி “ஐயா, தாங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்று வேண்டுகோள் விடுக்க பாவலர் தயங்கினாராம். அவையினர் திரும்பவும் “தாங்கள் நூறையும் சாதித்து விட்டதாகவே நாங்கள் நினைக்கிறோம். தயவு செய்து உட்காருங்கள்” என்று வற்புறுத்த அவர் தயக்கத்துடன் ஒப்புக் கொண்டதாக சொல்கிறார்கள்.

சாற்றுக்கவி என்று சொல்லப்படுகிற ஒரு நபர் சம்பந்தப்பட்ட வெண்பா மற்றும் வேறுவகை பாவினங்களில் பல செய்யுள்களை எழுதி கொடுத்திருக்கிறார். தத்துவ ரீதியாக தமிழ் சைவ சித்தாந்தத்தை பாவலர் அளவிற்கு விளக்கியவர் யாருமில்லை என்பர்.

சென்ற நூற்றாண்டின் தமிழ் மொழியின் அதிசயங்களை நம்மிடையே கொணர்ந்தவர் பாவலர் அவர்கள். இன்றைய இளைஞர் அவரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது கடமை.

இம்மாதிரி அதிசயத்தக்க அறிவை கொண்டுள்ள பெரியோர் பற்றி மகிழ்ச்சியுடன் கூறும் போது மேலும் ஒன்று சொல்லலாம்.

பாவலர், மறைமலை அடிகள், தேவநேய பாவாணர், ந. சி. கந்தையாப்பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார் போன்ற மேதைகள் யாருமே கவிதை என்று எதுவும் எழுதவில்லை. சாற்றுக் கவிகள் போன்றவற்றை நிறைய எழுதியிருக்கலாம். அவர்களுக்குத் தெரியாத இலக்கியமோ இலக்கணமோ இல்லை.

கவிதை என்றால் என்ன என்று காலந்தோறும் கேட்கப்பட்டு வரும் கேள்விக்கு மேற்படி பெரியோர் போன்றவரே சான்று பகர்வர்.

 
முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...

மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved