Girl in a jacket

மூண்டெழு கனல்

மா. அரங்கநாதன்


“கீட்சின் எண்ட்மியான் என்ற காவியம் எந்த தர்ம சாத்திரத்தை தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறது? அதன் ஒரு வரி முன்பு உலகத்தையே தூக்கி நிறுத்துவதற்காக பாடுபடும் “ஷா” வின் நாடகங்கள் பூராவும் நிற்க முடியுமா?”

மேற்படி கூற்று புதுமைப்பித்தனுடையது.

“எந்த தர்ம சாத்திரத்தை” மற்றும் “தூக்கி வைத்து” என்ற சொற்றொடர்கள் மூலம் புதுமைப்பித்தனின் ஆங்காரம் வெளியாகிறது.

கவிதையைப் பொறுத்தவரை அறிவார்ந்த விஷயங்கள் ஒரு கருவியே. பெர்னாட்ஷாவை புதுமைப்பித்தன் குறை கூறுகிறார் என்பதல்ல விஷயம். “ஷா” வின் அருமையை அறிந்தவர்தாம் அவர். இப்படிச் சொல்லியாவது ஒன்றை உணரவைக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். ஒரு கட்டுரையில் “பிளேட்டோ” முன் வள்ளுவர் ஒரு தவழும் குழந்தை” என்று கூறிவிட்டார். அப்படிச் சொன்னதையே கு. அழகிரிசாமி சொல்லும் போது “உனக்கு ஒன்றும் தெரியாது – வள்ளுவர் மேதை” என்று முடித்து விட்டவர் புதுமைப்பித்தன். இதை கு. அழகிரிசாமியே சொல்லியிருக்கிறார்.

ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் படைப்பிலக்கியம், புத்தகங்கள் போன்ற எதைப்பற்றியும் குறிப்பிட்டுப் பேசுவதில்லை. அவரே ஒரு சமயம் “A THING OF BEAUTY IS A JOY FOREVER” என்ற எண்ட்மியான் வரிகளை சொல்லியிருக்கிறார்.

மேற்சொன்னவை யாவும் நினைவில் எழ காரணம் சமீபத்தில் படித்த “மூண்டெழு கனல்” {THE EVE OF ST. AGNES} என்ற நூலால். அதை மொழிபெயர்ப்பு என்று சொல்ல முடியவில்லை. பண்டிதத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட்து என்றும் சொல்ல முடியாது. இப்படிப்பட்ட ஒரு பிற மொழி காவியத்தை இப்படித்தான் மொழிபெயர்க்க வேண்டும் என்று சொல்லலாம். மொழிபெயர்ப்பு என்றதும் கவிமணியின் “உமர்க்கயாம்” ஞாபகம் வருகிறது. அதை ஒரு நல்ல மொழிபெயர்ப்பு என்று சொல்ல முடியாது. அதே சமயம் அதை ஒரு நல்ல கவிதை நூல் என்று சொல்லிவிடலாம். “கையில் கம்பன் கவியுண்டு – கலசம் நிறையமுதுண்டு” என்பன அருமையான கவிதை வரிகள். ஆனாலும் மொழிபெயர்ப்பு என்று சொல்லிவிட முடியாது. கள்ளுக் குடியன் ஒருவனைப் ப்ற்றி கவிமணியிடம் கவிதை எதிர்ப்பார்க்க முடியாது. உள்ளூரில் யாராவது கேட்டால் கலசம் நிறைய அமுதுண்டு என்றுதானே எழுதி இருக்கிறேன் எனக் கூறி சமாளிக்கலாம். விமர்சகர்கள் கேட்டால் கலசம் நிறைய மதுவுண்டு என்றுதானே இருக்கிறது என்று சொல்லிவிடலாம். இம்மாதிரிப்பட்ட விஷயங்கள் பற்றி கவிமணியால் எழுதிவிட முடியாது. ஆனால் மொழிபெயர்ப்பில் அதையெல்லாம் விட்டுவிடவோ மாற்றவோ யாருக்கும் உரிமையில்லை.

“என் அருமை கோவேறு கழுதையே” என்று ஒரு நாட்டில் காதலன் காதலியை அழைத்து அது “என் கண்மணியே” என தமிழில் மொழிபெயர்க்கப்பட்டால் எப்படி? பல விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டி உள்ளன. உலகின் ஒரு நாட்டு கலாச்சாரத்தை பிற நாட்டவர் அறியும் வாய்ப்பு இழக்கப்படுகிறது. கோவேறு கழுதை என்ன பாவம் செய்தது. அதற்கு அநீதி இழைக்க மொழிபெயர்ப்பாளர் யார்?

புயலிடை வெளியே

புறப்பட்டுப் போயினர்

போயினர் காதலர்

போனது பல்லாண்டு

இது மொழிபெயர்ப்புத்தான். அதே சமயம் ஒரு புதுவகை தமிழாகவும் தெரிகிறது. இப்போது நமது மொழிக்கு இதுதான் தேவை.

திரு. இராம. குருநாதன் “எண்ட்மியான்” மொழிபெயர்ப்பையும் தர வேண்டும் என்று கேட்கலாம் – எல்லாருக்கும் உடனடியாக அதுதான் தோன்றும்.

உலகத்து காவியங்களைத் தேர்ந்தெடுத்து அதை தமிழில் தர வேண்டும். மொழிபெயர்ப்பில் படித்தாலும் மூலத்தின் சிறப்பை உணரச் செய்ய வேண்டியது மட்டுமல்லாமல் அந்த காவியம் சம்பந்தப்பட்ட நாட்டின் கலாச்சாரத்தையும் உணரச் செய்ய வேண்டும். டால்ஸ்டாயும் செகாவும் ஷேக்ஸ்பியரின் சிறந்த ரசிகர்கள். ரெவரெண்ட் வின்ஸ்லோ திருக்குறளின் பக்தர். பழைய கிரேக்க இலக்கியங்களில்கூட திருக்குறளுக்குச் சம்மான ஒன்று இல்லை என்று கூறியிருக்கிறார். மேற்சொன்னவர்களின் கிரேக்க, ஆங்கில, தமிழ் ஆகியவற்றின் ஞானம் எப்படி? அவர்கள் பெற்றது பெரும்பாலும் மொழிபெயர்ப்பின் மூலம் தானே. திருக்குறளின் அருமையை உணர்ந்த பல வெளிநாட்டு இலக்கியவாதிகளுக்கு தமிழே தெரியாது – ஆனால் அவர்களால்தான் குறள் இன்று உலகு பூராவும் போற்றப் படுகிறது. இதற்கெல்லாம் மொழிபெயர்ப்பே மூல காரணம்.

உணர்விற்கு மொழி இல்லை. நாம் பெற்ற உணர்வை நமது தாய்மொழியில் சொல்வதுகூட ஒரு மொழிபெயர்ப்புத்தான். குறிஞ்சி நிலத்து மனிதனின் அந்தக் கால இன்ப துன்ப அனுபவங்களைத்தான் நாம் இப்போதும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அந்த உணர்வை தமிழில் சொல்வதுகூட ஒரு மொழிபெயர்ப்புத்தான் என்று சொல்லும்போது, அந்த இன்னொரு மொழியிலும் அதே உணர்வு தோன்றும் போதுதான் மொழிபெயர்ப்பு முழுமையடைகிறது.

திரு. இராம. குருநாதனின் மொழிபெயர்ப்பில் எந்த சிக்கலும் இல்லை. அவர் மூல நூலை எப்படி அனுபவித்து இருக்கிறார் என்பது மொழிபெயர்ப்பு மூலம் தெரிந்து விடுகிறது. விமர்சனமே ஒரு வகையில் ஒரு படைப்புத்தான் என்றுள்ள முடிவிற்கு வர இம்மாதிரி மொழிபெயர்ப்புகள்தான் காரணம்.

மொழிபெயர்ப்பும் அந்த கௌரவத்தைப் பெற வேண்டும் என்று சொன்னாலும் அதில் நியாயம் இருக்கிறது.

 
முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...





மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved