Girl in a jacket

பெர்க்மெனின் கன்னி ஊற்று (Virgin spring)

மா. அரங்கநாதன்

“நீ பார்த்துக் கொண்டுதானே இருந்தாய் – ஏ கடவுளே நீ பார்த்துக் கொண்டுதான் இருந்தாய். ஏதுமறியாத இந்தக் குழந்தையின் சாவையும் எனது பழிவாங்குதலையும் நீ பார்த்துக் கொண்டிருந்தாய் – இது நடக்கும்படி நீ ஆக்கிவிட்டாய் – என்னால் உன்னைப் புரிந்து கொள்ள முடியவில்லையே – புரிந்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும் என்னை நீ மன்னித்துவிடு. வேறு எந்த விதத்திலும் இதைக் கொண்டு சென்று சாந்தியடைய எனக்கு வழி தெரியவில்லை, எனது கைகளையே உபயோகித்தேன். வேறெதுவும் செய்ய முடியவில்லை.

ஏ கடவுளே – நான் உனக்கு சத்தியம் செய்து தருகிறேன். எனது ஒரே குழந்தையின் சடலத்தின் முன்பு, எனது பாவத்திற்கான பரிகாரத்திற்கு நான் சத்தியம் செய்து தருகிறேன் – உனக்கு ஓர் ஆலயம் கட்டுவேன் – இந்த இடத்தில் – நான் அதைக் கட்டித் தருகிறேன் – கற்கோயில் ஒன்றை கட்டித் தருகிறேன் – பழி தீர்த்த இந்தக் கைகளால் அதைக் கட்டித்தருகிறேன்.”

* * *                                      * * *                                 * * *

தாய் மகளிடம் சொல்கிறாள்:

“இந்த மாதிரி அந்தக் காலத்தில் நான் எங்க அப்பா அம்மாவை பாடாப்படுத்தினா, நல்ல உதை கிடைக்கும்”

“அதற்கென்ன – எனக்கும் இப்ப அந்த மாதிரியே உதை கொடேன்”

இங்கர் பெர்க்மென்னின் ‘கன்னி ஊற்று’ (VIRGIN SPRING) படத்தை பல ஆண்டுகளுக்கு முன்னர் தியேட்டரில் பார்த்திருந்தாலும் சமீபத்தில் அதை திரும்பவும் பார்க்கும் வாய்ப்புக்கிட்டி ஒருவகை வேதனையும் ஆனந்தமும் அடைந்தேன்.

பெர்க்மென் குறிப்பிட்ட ஒரு மத போதகரின் மகனாக இருக்கலாம்; ஆயினும் அவர்தம் படைப்புகள் உலக மக்களுக்குச் சொந்தம் – எந்த மதத்திற்குமல்ல.

மேலே குறிப்பிட்டதில் முதலில் உள்ள உரை கடவுள் நம்பிக்கையைப் பற்றியது – அது மூட நம்பிக்கையாக இருந்தாலும் எல்லா நாட்டிலும் உண்டு. புத்திர சோகத்தால் பழி தீர்த்த தகப்பன் கடவுளிடம் வேறு என்ன கேட்க முடியும்?

இரண்டாவது உரை எல்லா நாடுகளிலும் மட்டுமல்ல அங்குள்ள பழங்குடி மக்களிடமும் விரவி நிற்பதை நாம் அறிவோம். அதைச் சொல்லாமல் சொல்வதுதான் பெர்க்மென்.

ஏதுமறியா ஒரு கன்னிப்பெண் அழிக்கப்பட்ட இடத்தில் ஒரு நீரூற்று கிளம்புகிறது. இல்லாமல் ஒன்றை ஆக்கிவிடுதல் என்பது புதிய ஒன்றை தோற்றுவிப்பதற்கு சமம். இலக்கியத்தில் கூட அப்படித்தானே – ஏன் இவ்வுலகத் தோற்றமும் அப்படித்தானே?

ஏதுமறியா அப்பெண் அழிந்த இடத்தில் அந்த நீரூற்று தோன்றுகிறது. பதிமூன்றாவது நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்வீடிஷ் பழங்குடியினரிடையே அந்த நம்பிக்கை இருந்திருக்கிறது. அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்த மண்ணில் ‘குன்ற குரவை’ தோன்ற காரணமாக இருந்தவள் கண்ணகி – அவள் மாய்ந்த இடத்தில் பின்னர் கோயில் தோன்றிற்று என்றாலும் குன்றக் குரவைதான் நமக்குக் கிடைத்த ஊற்று – அந்த இடத்து குறிஞ்சி நில மக்கள் அளித்த சொத்து.

இளங்கோ என்னும் படைப்பாளியை இங்கர் பெர்க்மென் அறிந்திருக்கக்கூடும் என்று யாரும் சொல்லவில்லை. அப்படி எந்த நப்பாசையும் இல்லை. ஆனால் மனித சிந்தனை என்ற நீண்ட சங்கிலி ஒருவன் அழிந்த பின்னரும் அவனது சிந்தனையின் சுவடை சுமந்து சென்று கொண்டே இருக்கிறது. அது முடிவற்றதாயும் இருக்கிறது. அந்த வகையில் மனித சிந்தனை என்பது ஒரு தொடர்ச்சிதான்.

படைப்புத் தன்மையை நோக்காது “இவன் ஸ்வீடிஷ் – இவன் தமிழன்” என்றெல்லாம் பார்க்காது மனிதச் சிந்தனைத் தொடரை புரிந்து கொண்டால் நமக்கு “யாதும் ஊர்தான் – யாவரும் கேளிர்தாம்.”

 
முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...





மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved