Girl in a jacket

ஆலிசின் அற்புத உலகம் - செண்பகநாதன் மொழிபெயர்ப்பில்

சக்திவை. கோவிந்தன் அவர்களது வெளியீடாக வந்த "பாப்பா" இதழில் தான் முதலில் ஆலிசின் அற்புத உலகம் அலமுவின் அற்புத உலகாகப் படித்தேன். தி.ஜ.ரங்கநாதன் என்ற அக்காலத்திய சிறந்த எழுத்தாளரால் தரப்பட்ட அதை முதலில் ஒரு சிறுவர் கதை என்றே எண்ணியிருந்தோம்.

தற்போது தி.ஜ.ரவின் பெயரே மறைந்திருக்கலாம். இளைய எழுத்தாளர்கள் பழைய சக்தி, கலைமகள் மஞ்சரி தொகுப்புகளைத் தேடிப் படிக்க வேண்டும்.

இந்த அற்புத உலகம் 1865ல் எழுதப்பட்டது என்றறியப்படுகிறது. கிட்டத்தட்ட அதே காலத்தில் வாழ்ந்தவர் தான், பரிணாம உலகத்தை நமக்குத் தந்த டார்வின். கிட்டதட்ட அதற்கு எழுபது ஆண்டுகள் கழித்துத் தோன்றியது தான், ஜன்ஸ்டினின் சார்புநிலை தத்துவம். இதில் ஒருவர் விஞ்ஞானி, மற்றவர் மானிட இயல்வாதி. இந்த ஆலிசைப் படைத்த லூயி கரோல் யார்? ஏதாவது ஒரு கூண்டில் அடைத்தாக வேண்டுமே. விஞ்ஞானியா. மானிடவியலானரா - கணித விற்பன்னரா - சொல்ல முடியாது.

இந்த அற்புத உலகம் தோன்றுவதற்கு முன் இலக்கிய உலகை - குறைந்த பட்சம் ஆங்கில இலக்கிய உலகை - ஆக்ரமித்திருந்தது வால்டர் ஸ்காட் போன்றோரின் வீரதீர வரலாற்றுக் கதைகள். அது 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கால கட்டம். உலகில் எங்கும் அப்படித்தானிருந்திருக்கும் என்றும் சொல்லலாம்.

இந்த நூல் பல இலக்கிய வல்லுநர்களை யோசிக்க வைத்தது மட்டுமல்லாமல் இலக்கியம் பற்றிய நோக்கில் ஒரு திருப்பம் ஏற்பட காரணமாயிற்று என்றும் சொல்ல வேண்டும். அது தான் அப்படி திருப்பம் ஏற்படுத்தியது தான் - இந்த நூலின் சிறப்பும் இதன் ஆசிரியரின் சிறப்புமாகும்.

பலராலும் மொழி பெயர்க்கப்பட்ட நூல் என்ற பெருமையும் இதற்குண்டு. திரு. செண்பகநாதனின் மொழிபெயர்ப்பில் இந்த அற்புத உலகைப் படித்தபோது ஏற்பட்ட எண்ணங்களை சொல்லாதிருக்க முடியவில்லை.

உணர்விற்கு மொழி இல்லை. தோன்றுகிறது - அனுபவிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஒன்றை அனுபவித்த ஒருவன் தன் தாய் மொழியில் சொல்வது கூட ஒரு மொழி பெயர்ப்புத் தான். அப்படிச் சொல்லப்பட்ட ஒன்றை இன்னொரு மொழியில் ஆக்கும்போது சில பிரச்சனைகள் எழுத்தான் செய்யும். மொழி பெயர்ப்பாளனுக்கும் வாசகனுக்கும்.

அல்ஜியர்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகளில் எல்லாம் கோவேறுக் கழுதை என்பது ஒரு மதிப்பிற்குரிய விலங்காகும். ஏசுபிரான் கூட அதில் சவாரி செய்தார் என்று சொல்லப்படுகிறது. அந்த நாடுகளில் ஒருவன் தன் மனதிற்கினியவளை "என் அருமை கோவேறுக் கழுதையே என்றழைப்பது சகஜமாயிருக்கும். அப்படிப்பட்ட ஒன்றை மொழி பெயர்க்ககையில். அதை இங்குள்ள வழக்கில் "என் மானே என் கண்ணே" என்றெல்லாம் மாற்றிவிடல் கொடுமை. அது அந்த நாட்டு ஆசிரியனுக்குச் செய்யும் அநீதி மட்டுமல்ல - அந்நாட்டு கோவேறு கழுதைக்கு செய்யும் அநீதியாகும். மாறாக வேறு ஒரு நாட்டிற்கு இங்கிருந்து சென்று அந்த நாடு பற்றியும் பழக்க வழக்கங்கள் பற்றியும் எழுது கையில் இந்த விதி செல்லாது. வேறு நாடாக இருப்பினும் பார்ப்பது உலகம் சுற்றும் தமிழன் (ஏ.கே. செட்டியார் கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள்.

மூலநூலின் ஆசிரியருக்கு ஏற்பட்ட பிரச்னைகள் அளவு மொழிபெயர்ப்பாளருக்கும் ஏற்படலாம். DO DO என்பதை தமிழில் சொல்வது எப்படி? சண்முகநாதன் அடிக்குறிப்புகள் எல்லாம் தந்து இதை சமாளிக்கிறார்.

எஸ். இராமகிருஷ்ணன் இந்த நூலை மொழி பெயர்த்து வெளியிட்ட போது கவிஞர் பிரமிள் ஒரு வாதத்தைக் கிளப்பினார். அதாவது கதையில் வருவது ஆலிசின் அக்காவா, தங்கையா என்று. தி.ஜ.ர. அவர்களின் மொழிபெயர்ப்பு முன்பு வெளிவருகையில் அந்த இதழ் படத்தில் அலமுவின் சகோதரி அவளை விட அதிக உயரம் கொண்டவளாக காட்டப் பட்டிருந்தாள் என்று நான் கூறினேன். அக்கா, தங்கை இரண்டிற்குமே SISTER என்பதால் வந்த சங்கடம். உலகெல்லாம் அறிந்த ஒரு நூலை - எட்டு வயதுக் குழந்தையும் என்பது வயதுக்காரரும் ஒரே ஆர்வத்துடன் படிக்கும் நூலை - பல தடவை பலராலும் மொழிபெயர்க்கப்பட்ட நூலை செண்பகநாதன் தேர்ந்தெடுத்தது அந்த நூல் மீது அவர் தம் ஆர்வத்தைக் காட்டுகிறது. அதைச் செவ்வனே நிறைவேற்றியுள்ளார் என்று சொல்லலாம்.

 
முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...





மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved