Girl in a jacket

அது வேறு காலம்

இளங்கோ என்னும் படைப்பாளி சேரன் தம்பியா? சமண சமயத்தவரா? என்பது பற்றியெல்லாம் உறுதியாக சொல்ல முடியாது – அக்கறையும் இல்லை. அந்த மாபெரும் இலக்கியவாதி பூம்புகார் நகரத்தில் வாழ்ந்தவர் என்று மட்டும் தாராளமாக நம்பலாம். அங்கிருந்து – அந்த பூம்புகார் நகரத்து மருவூர்பாக்கம், பட்டினப்பாக்கம் பகுதிகளைக் கடந்து நாளங்காடி, கூடல், இடைகழி நீங்கி குடமலை, பின்னர் கோழி என்னும் உறையூர் சார்ந்த இடங்களுக்கெல்லாம் அவர் தனியாகத்தான் சென்றிருக்க வேண்டும்.

சங்ககால பேகன், கண்ணகி கதை, அந்தப் படைப்பாளியை துளைத்தெடுத்திருக்கிறது. சமகாலத்தில் அவ்விரு பாத்திரங்களையும் பூம்புகார் வாசிகளாக்கி நமக்கு தருகிறார். பிரிந்த கணவன் திரும்ப வந்ததும் இரவோடு இரவாக கிளம்புகின்றனர். படைப்பாளி இளங்கோதான் கிளம்புகிறார். நெடுங்குன்றமும் சிறுமலையும் நீங்கி, தாழ்ந்த குலைகளையுடைய வாழையைப் பற்றிச் சொல்வதால் அது மலை வாழைப்பழமாகவுமிருக்கும். அது திண்டுக்கல் பகுதியாகவும் இருக்கலாம். காவிரியை வாழ்த்தியவர், பொய்யாக் குலக்கொடி வைகையின் திருமருத்துறையில் நீராடியிருக்கக் கூடும். அங்காடி மற்றும் நவரத்தினகூல வணிகர் வீதிகளைச் சுற்றி வந்திருக்க வேண்டும்.

இத்தனை இடங்களையும் சுற்றி வந்திருக்கின்றார். வெகு விமரிசையாக விவரங்களைத் தருகிறார். இவ்வாறு இம்மாதிரி இடங்களுக்கெல்லாம் துறவிகள் செல்வதுண்டா என்றெல்லாம் கேட்க வேண்டாம். இளங்கோ ஒரு படைப்பாளி. உலகில் ஒன்றிரண்டு பேரைத்தான் இவரோடு ஒப்பிட்டுச் சொல்ல முடியும்.

காவிரியையும் வைகையையும் போற்றிவிட்டால் போதுமா? வஞ்சியின் பேரியாறு என்ன பாவம் செய்தது? அதன் மணல் மேட்டைப் பற்றி கூறுகிறார் – பூங்குன்றன் போல. இருக்கட்டும். இத்தனை விவர அடுக்குகளை தமது காதைக்குள் அடைத்தவர், கதைக்கே உயிர்நாடிச் சம்பவமான கோவலன் கொலையை எப்படிச் சொல்கிறார் – ஒரு செய்தித்தாள் நிருபர் கூற்றாக சில வரிகளிலேயே சொல்லி முடிக்கிறார். இந்த போக்கு கூட, இளங்கோ போன்ற மகத்தான படைப்பாளிகளுக்கே கைவரக்கூடும்.

கோவலன் கொலைக்கு காரணமாகயிருந்தோர் மீது நமக்கு கோபம் ஏற்படவில்லை. மதுரையை எரித்த கண்ணகி மீதும் கோபமில்லை. மாதவி மீது இல்லவே இல்லை. என்ன தந்திரத்தைக் கையாண்டார் இந்த இளங்கோ?

சாந்தம் என்ற உணர்வை தன்னகத்தே கொண்டவர்கள்கூட, அதை பிறரிடம் ஏற்படுத்திவிட முடியாது – மொழிமூலம். சாந்தம் தன்னையே பார்த்துக் கொள்வதாகிறது. எட்டுச் சுவைகளில்கூட சாந்தம் சேர்க்கப்படவில்லை. சமண முனிவர்கள் அதையும் ஒன்றாக்கி நவரசம் பண்ணினர் என்று சொல்கிறார்கள்.
ஒரு படைப்பு பற்றி பேசும் நமக்கு அந்த ஆய்வெல்லாம் வேண்டாம்.

இதையெல்லாம் ஏன் சொல்ல வந்தேன் – சமீபத்தில் நான் படித்த கவிதை வருமாறு:


இது வேறு காலம்

காற்றுப் புகா சீசாவில் வைத்துக்
காத்து வந்தேன் அக் கனவை

பிரமிக்கும் ரூபமும் யெனவனமும் ததும்ப
ஒரு இளவரி போல் வீற்றிருக்கும் அதை
பார்த்துப் பார்த்து மிதந்து கொண்டிருப்பேன்

எங்கு போய்த் திரும்பினாலும்
சீசாவை ஒரு முறை பார்த்துவிட வேண்டும் எனக்கு

எப்போதே வந்த ஊழி
கனவையும் அக்காலத்தையும்
வசீகரக் கற்பனைகளையும்
அலங்கார நினைவுகளையும்
ஈவிரக்கமின்றி அள்ளிச் சென்றுவிட்டது.

பித்தாகி
பெயர் தெரியா இத்தீவில்
அலைந்து கொண்டிருக்கும்போது
இன்று காலை காலில் தட்டுப்பட்டது

அது தானா
உறுதிப்படுத்திக்கொண்டேன்
கிடைத்த அதிசயம் குறித்த பரவசம் ஏதுமில்லை

பொறுமையாய்
அக்கனவை எடுத்து
ஒரு முறை வாசித்தேன்

மறுபடி எதுவும் புகாதவாறு மூடிக்
கடலில் விட்டேன்
சலனமின்றி மிதக்கும் கனவை



இது வேறு காலம்

இது கவிஞர் ரவிசுப்ரமணியன் எழுதியது.

கவிஞர் அறிவுமதியின் “அம்மா, அம்மா – கடலம்மா...” என்ற கவிதை வரிகள் நம்மை படுத்தியபாடு பெரிது.

“வெட்டினான்” – என்று எழுதினால் இரத்தம் வரவேண்டும் என்று யாரோ சொன்னார்களாமே – அதுவேதான். அறிவுமதியின் வரிகளில் நமது கண்ணீர் சிந்தும். அந்த வரிகளின் சரணாகதித் தன்மை அன்னைக்கும் அன்பிற்கும் உள்ள பிணைப்பை அதிகரிக்கச் செய்ய, ஊழிக்கூத்திலும் கூட, அந்த அன்பே மேற்செல்கிறது. கடலன்னை மீண்டும் நம்மைத் தண்டிக்கத் துணியமாட்டாள்.

கவிஞர் ரவிசுப்ரமணியனின் ஊழிக்கூத்து மேலே சொன்ன கவிதையில் வேறுவிதமாகச் செல்கிறது – அது வேறு காலமே தான்.

தன்னையே பார்த்துக்கொண்ட ஒருவனின் நிலை அது. ஊழிக்கூத்து இருக்கட்டும். சாவில் கூட அப்படியேதான் இருக்கும். இளங்கோ என்ற படைப்பாளி ஞாபகத்திற்கு வந்த காரணம் இதுதான். யாரையும் குற்றவாளிகளாக்கிவிடாது நிகழ்ச்சிகளை சொல்லிச் செல்லும் இயல்பு. அது வாசகனுக்கு படைப்பாளி தரும் பரிசு.

நம் இளங்கோ ஊழ்வினையைச் சொல்லத்தான் செய்கிறார். அவர் காலம் அப்படி. யாரையும் குற்றம் சொல்லாதபடி எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிற நிலைக்கு உட்படுத்தும் படைப்பாளியின் தந்திரமாகவும் இருக்கலாம். அது தந்திரமாக இருந்தால்கூட நாம் மிகவும் மகிழ்ச்சி அடைய முடியும்.

‘ஈவிரக்கமின்றி’ – என்ற ஒரு வார்த்தை ரவியின் கவிதையில் நமது போக்கை சற்று நிறுத்துகிறது. ‘கல்லாக்களிமகன்’ – என்று இளங்கோவும் கூட சொல்லிக் கொள்கிறார்.

“கடந்து வந்த பாலங்களை எல்லாம் தகர்த்து விட வேண்டும்.”

“எந்தப் பாலங்களை.”

“ஒவ்வொரு கடைசிப் பாலத்தையும்.”

இது ரஷ்யாவின் பாலே நடனக் கலைஞர் அன்னா பாவ்லோவின் கூற்று.

“எல்லாவற்றையும் மறுத்து விடுதல்” என்பது ஜே.கே.யின் ஒரு தத்துவம் – அவரது இந்த தத்துவம் உட்பட.

பொதுவாக ரவிசுப்ரமணியத்தின் கவிதைகள் சிறிது விரக்தியை தோற்றுவிப்பதாகவே தெரியும் – ஸென் பவுத்த சாயலும் இருக்கும். அத்துடன் தென்புலத்து சித்தர் சம்மந்தமுடைய உணர்வை அடக்கியவை என்பதும் உண்மை. குறிப்பு என்ற இவரது கவிதையைப் படித்தாலும் இது தெரிகிறது.

அம்மாதிரிப்பட்ட உணர்வை தோற்றுவிப்பதில் இவர் வெற்றி பெற்றுள்ளார் என்றும் சொல்ல வேண்டும்.

- 2007

 

பிற கட்டுரைகள்

பா. விசாலத்தின் நாவல...

தேவ பாரதியின் ‘‘மாயை...

க.நா.சு. - கடைசி நாட...

 
புகைப்படங்கள்




ஆவணப்படம்

முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...





மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved